மன்னனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டான். உடனேயே ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு காஞ்சியை விட்டுச் சென்ற திருமழிசை ஆழ்வாரையும், கணிகண்ணனையும் தேடிக் கொண்டு சென்றான். அருகில் இருந்த ஓர் சிறிய கிராமத்தில் தங்கி இருந்த இருவரையும் கண்டான். மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இருவரையும் காஞ்சிக்குத் திரும்பச் சொன்னான். மன்னனின் மன்னிப்பு மனதார இருப்பதை உணர்ந்துகொண்ட ஆழ்வாரும் காஞ்சிக்குத் திரும்ப முடிவு செய்தார். அவர் மட்டும் திரும்பினால் போதுமா? கூடவே கணிகண்ணனும், எல்லாத்துக்கும் மேலே பெருமாளும் அல்லவோ திரும்பணும்? அதுக்கும் ஆழ்வார்தான் மனசு வைக்கணும். ஆழ்வார் உடனேயே பெருமாளைப் பார்த்து,
“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
என்று வேண்டிக் கொள்ள பெருமாளும் ஆழ்வாரின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து காஞ்சிக்குத் திரும்பினாராம். அன்று முதல் இவருக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இதே கதையில் கணிகண்ணனை மன்னன் பாடச் சொன்னான் என்பதற்குப் பதிலாக வேறு மாதிரியும் சொல்கின்றார்கள்.
திருமழிசை ஆழ்வாருக்கும், கணிகண்ணனுக்கும் சேவைகள் செய்து வந்த மூதாட்டியின் அன்பிலும், அவள் குணத்திலும் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போன திருமழிசை ஆழ்வார் அந்த மூதாட்டி இளமையில் சிறப்போடும், செல்வத்தோடும் வாழமுடியவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். அவருடைய பக்தியின், தவத்தின் உதவியால் பெருமாளை வேண்டி அந்த மூதாட்டிக்கு இளமை திரும்பக் கிடைக்கச் செய்கிறார். இந்தத் தகவல் மன்னனின் அரண்மனை வரையிலும் எட்ட, தானும், தன் ஆசைக்கிழத்தியும் வயது முதிர்ந்து வருவதை எண்ணிய மன்னன், நமக்கும் இளமை திரும்பினால் இன்னமும் பலநாட்கள் ஆநந்தம் அநுபவிக்கலாமே என எண்ணினான். திருமழிசை ஆழ்வாரை இதற்காக வேண்ட, ஆழ்வார் மறுக்கிறார். மூதாட்டியின் இறை பக்தியையும், மன்னனின் சுயநலத்தையும் சுட்டிக் காட்டிய அவர் திட்டவட்டமாய் மன்னன் கோரிக்கைக்கு மறுக்கிறார். மன்னன் விடாமல் கணிகண்ணனைக் கேட்க தன் குரு மறுத்த ஒரு விஷயத்திற்குத் தான் எங்கனம் உதவுவது என அவனும் மறுக்கிறான். கோபம் கொண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த அன்பு சீடனைப் பிரிய மனமில்லாமலும், பெருமாளையும் பிரிய மனமில்லாமலும் இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். பின்னர் மன்னன் வேண்டுகோளின்படி திரும்புகிறார். இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் இந்தப் பெருமான் பேரில் அடைக்கலப் பத்து என்ற பாசுரங்களைப் பாடி உள்ளார். இந்தப் பாசுரங்கள் வெள்ளிப்பதக்கங்களில் பொறிக்கப் பட்டு ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். அடைக்கலப் பத்து தவிர, அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச்சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார் ஸ்ரீதேசிகர். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் கூட இந்தப் பெருமாளின் பெயரில் ஒரு கீர்த்தனை பாடியுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்தப் பெருமாள் தங்கக் கொண்டையுடன் காட்சி அளிப்பார். இந்தத் தங்கக் கொண்டையை இவருக்கு அளித்தது வெங்கடாத்ரி என்னும் தெலுங்கு அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வைணவர் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தின் பெருமாளுக்கு ஆப்ரணங்கள் வழங்கி உள்ளதாய்த் தெரிய வருகிறது. ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் தங்கக் கொண்டை செய்யவேண்டி, போதிய பணம் பெற யாசகம் செய்து பொருள் சேர்த்தார் வெங்கடாத்திரி. நகை செய்யும் ஆசாரியிடம் பொருளைக் கொடுத்துப் பொன் வாங்கி கொண்டை செய்யச் சொல்ல, அதில் நட்ட நடுவில் பதிக்கவேண்டிய எமரால்ட் கற்களைப் பார்த்த ஆசாரியின் ஆசை மனைவியான நடன நங்கை அதைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டாள். இந்த் அவிஷயம் அறிந்த வெங்கடாத்ரி அந்த மாது எங்கே இருக்கிறாள் எனக் கேட்டறிந்து அவள் வசித்து வந்த தஞ்சைக்கே சென்று அங்கே அவள் வீட்டு வாயிலில் உண்ணாவிரதம் இருந்து அந்தக் கற்களை மீட்டு வந்தார். பின்னர் பெருமாள் அவர் கனவில் வந்து ஸ்ரீதேவி, பூதேவிக்கு அவ்வாறே செய்து கொடுக்கும்படிச் சொல்ல அவ்வாறே இரு நாச்சிமார்களுக்கும் இதே போல் யாசகம் செய்து பொருளீட்டி ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கிறார் வெங்கடாத்ரி.
நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் சிலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிக்குப் பண உதவி, ஆபரணங்கள் என நன்கொடையாகக் கொடுத்திருக்கின்றனர்.
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
த்யாகராஜரோடதுதாந்னு நினைக்கிறேன், 2 கீர்தனைகள்:-
ReplyDeleteவரதராஜ நின்னுகோரி (i think it is swarabushani raga), 2) வரதராஜ நவநீதச (? ராகபஞ்சரம் ) ஆனா இது காஞ்சி ஸ்வாமி மேலயானு தெரியாது.
ஷ்யாமா சாஸ்த்ரி, தீக்ஷதர் இவாளும் காஞ்சி வரதர் மேல பாடி இருக்கா.
இருக்கலாம் ஜெயஸ்ரீ, எனக்கும் சரியாத் தெரியாது.
ReplyDelete