Thursday, November 19, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே போனாயோ?

பெருந்தேவித் தாயாரின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. விமானத்தின் பெயர் கல்யாணகோடி விமானம். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைச் சேவிக்கவேண்டுமாம். ஆனால் நாங்க முதல்லே பெருமாளைத் தான் பார்த்தோம். அப்புறமாய்த் தாயாரைப் பார்த்தோம். எழுதறது மட்டும் முதல்லே தாயார் பத்தி. கிழக்கு நோக்கி தாமரை மலர்களைக் கையில் ஏந்தியவண்ணம் அபயஹஸ்தம் காட்டும் தாயாருக்கு அரித்ரா தேவி, மகாதேவி என்ற திருநாமங்களும் உண்டு என்றார் பட்டாசாரியார். அருகில் உற்சவர். இந்தட் தாயாரின் அவதாரம் பற்றிய பட்டாசாரியார் சொன்ன புராணக் கதையானது.

பிருகு மகரிஷி பிள்ளை வரம் வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய யாகத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் அவதரித்தார் என்கின்றனர். அவர் பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரைப் பூஜித்து வழிபட்டு வர, அவருக்கு அருள் புரிய எண்ணிய பெருமான், சிவன், பிரம்மா, பிருகுமஹரிஷி, காசியபர், கண்வர், காத்யாயன ரிஷி, ஹரித ரிஷி போன்றோர் முன்னிலையில் அம்பாளின் கரம் பிடித்து மணம் புரிந்து கொண்டார். அப்போது உள்ளே சென்ற அம்பாள் இன்று வரை படிதாண்டுவதில்லை. படிதாண்டாப் பத்தினி எனப் படும் அம்பாள் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளும் பெருமாளுடன் கூட திருவீதி உலாவுக்குச் செல்வதில்லை. ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்ரீவேதாந்த தேசிகருக்காகப் பொன்மழை பொழியச் செய்தாள் பெருந்தேவித் தாயார். வேதாந்த தேசிகரின் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை எவ்விதமாவது அவமானப் படுத்த எண்ணினார்கள். காஞ்சிக்கு வந்த வறிய பிரம்மசாரி ஒருவனை வேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும் எனக் கேட்கும்படி ஏவினார்கள். அவனும் அவ்விதமே அவரிடம் சென்று பொருள் கேட்க, தேசிகரோ அம்பாளை வேண்டினார். ஸ்ரீதுதி பாடினார். அவரின் ஸ்ரீதுதிகளால் மனமகிழ்ந்த அம்பாள் அங்கே பொன்மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை நிலைநாட்டினாள்.

அது மட்டுமா? ஸ்வாமிக்குனு தயார் செய்யப் பட்ட வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளையும் தனக்கென வாங்கிக் கொண்டுவிட்டாள். பின்னர் வேறு வெள்ளித் தகடுகள் வேய்ந்த புதுக்கதவுகள் செய்து பெருமாளுக்குக் கதவுகள் பொருத்தப் பட்டது என்கின்றனர். தாயார் சந்நிதியில் இருந்து உள்பிரஹாரத்துக்கு வந்தால் அங்கே நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் போன்றோர் காணப்படுகிறார்கள். இங்கே விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே காணப்படுகிறார். இங்கிருந்து இப்போ நாம் ஏறப் போவது அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு.

இருபத்து நான்கு படிகள் என்கின்றனர். காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு தத்துவங்களையும் குறிக்கும் வண்ணம் எழுப்பப் பட்டது என்று சிலர் கூற்று. விமானம் புண்ணியகோடி விமானம். மூலவர் தேவராஜர். இவருக்கு தேவப் பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், தேவாதிராஜன். கஜேந்திர வரதன், தேவராஜப் பெருமாள், மாணிக்கவரதன் போன்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. திருப்பதியின் வெங்கடாசலபதியைக் கிருஷ்ணரின் அம்சம் என்றும் வகுளா தேவிதான் யசோதை என்றும் சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். ஒவ்வொரு வருஷமும் சித்ரா பெளர்ணமி அன்று பிரம்மா இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். சித்ரா பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பதினான்கு நாட்களும் மாலைக்கதிரவனின் கிரணங்கள் மூலவரின் பாதங்களைத் தொட்டுச் செல்லும். இவர் சொன்னால் சொன்னபடி செய்யும் பெருமாள் ஆவார்.


எப்படினு கேட்கறீங்களா? திருமழிசை ஆழ்வார் இந்த நகரில் தன் சீடனான கணிகண்ணன் என்பவருடன் வசித்து வந்தார். பல்லவ மன்னர்கள் காஞ்சியை ஆட்சி புரிந்த காலம் அது. கணிகண்ணனின் தமிழ்ப் பாடல்களின் அழகைப் பார்த்து ரசித்த மன்னர், இந்தப் பாடல்கள் தன்னைப் பற்றிப் போற்றிப் பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என எண்ண ஆரம்பித்தார். கணிகண்ணனைத் தன் அவைக்கு வரவழைத்துத் தன்னைப் போற்றிப் பாடச் சொன்னார். ‘மாதவனைப் பாடும் வாயால், மனிதர்களைப்பாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக மறுத்தார் கணிகண்ணன். மன்னன் அவரைப் பல்லவ நாட்டை விட்டே வெளியே போகச் சொல்லி நாடு கடத்தினான். கணிகண்ணனும் காஞ்சியை விட்டும் பல்லவநாட்டை விட்டும் வெளியேறினார். தன் அருமைச் சீடன் நகரை விட்டுச் செல்வது அறிந்த திருமழிசை ஆழ்வார் துக்கம் பொங்கப் பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”

என்று சொல்லிவிட்டார். திருமழிசை ஆழ்வாரும் காஞ்சியை விட்டுக் கிளம்ப பெருமாளும் ஆழ்வார் கேட்டுக்கொண்டபடிக்கு தன் பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஆழ்வாரைத் தொடர்ந்து போய்விட்டார். காஞ்சியை இருள் சூழ்ந்து கொண்டது. மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் இல்லை. மன்னன் நடுங்கிப் போனான். ஏற்கெனவே நகரம் இருளில் ஆழ்ந்திருந்தது. இப்போ இங்கே பெருமாளையே காணோம். எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். என்றாலும் இங்கே திரும்பி வந்தாரானு மட்டும் நாம இப்போ தெரிஞ்சுக்கலாமா? நாளைக்கு கணினி ஆக்கிரமிப்போ, ஆற்காட்டார் வரவோ இல்லைனா வருவேன்.

4 comments:

 1. //எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். //
  ஆமா. பேரு ஓரிக்கை. ஓர் இரவு இருக்கை. காஞ்சி-ஆரணி வழில ஆற்றுபாலம் முன்னே. மகபெரியவாள் மணி மண்டபம் இங்கேதான் காட்டறாங்க.

  ReplyDelete
 2. கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
  மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
  செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
  பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”
  இதுக்கு நிகர் உண்டா? ஆழ்வார்கள் அன்பு!! நண்பனுக்கு நண்பனுக்கு நண்பன்!! ( சேஷ ) பாயை சுருட்டிண்டு சாமி போறத கண்ணை மூடிண்டு imagine பண்ணினா மனசு எத்தனை குளிர்ந்து போறது தெய்வத்தோட அன்புலையும் simplicity யிலும்

  ReplyDelete
 3. ஒரிக்கை போனதில்லை திவா, போகணும், பார்ப்போம்.

  ஜெயஸ்ரீ, நல்லா ரசிக்கிறீங்க. நன்றி.

  ReplyDelete
 4. கிதா அம்மா , திருமழிசை ஆழ்வார் சொன்ன பேச்ச கேட்டது யதொககரி பெருமாள் ( சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ) இவரும் அஷ்டபுஜம் பெருமாளும் பாகத்து பக்கதுல இருகாங்க , ரெண்டு பேருமே திவ்ய தேசத்து பெருமாள்கள் தான்

  ReplyDelete