இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில் வடலூர் பார்வதிபுரத்தின் வடற்பெருவெளியிலே கட்டப்பட்டிருக்கும் சத்திய தருமச்சாலையின் தொடக்கவிழாவிற்கு வந்திருந்த மக்களையும், அதற்கு இடம் கொடுத்த பார்வதிபுரத்து மக்களையும் பாராட்டிய வள்ளலார் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார். உணர்ச்சிவசப்பட்ட மக்கள் வள்ளலாருக்கு வாழ்த்துக் குரல் எழுப்பி மகிழ்ந்தனர். பின்னர் மீண்டும் பேச ஆரம்பித்த வள்ளலார் அந்த சத்திய தருமச்சாலையில் பசி என்று வருபவர்களுக்கு இல்லையெனாது மூன்றுவேளையும் அன்னதானம் அளிக்கப்படும் என்றும் ஜீவகாருண்யங்களிலேயே தலையானது அன்னதானமே ஆகும் என்றும் கூறினார். மேலும் தொடர்ந்த வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோதும், பசித்தவர்களையும், ஏழைகளையும் கண்டபோதும் தாமும் வாடி வேதனை அடைந்த்தாகவும் உள்ளம் உருகினார். அதைக் குறித்துத் தாம் எழுதிய பாடல் ஒன்றையும் உருக்கமான குரலில் பாடினார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோறிரந்தும் பசியுறாதயர்ந்த
வெற்றரைக்கண்டுளம் பதைத்தேன்
நீடிய பணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டுளந்துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”
மக்களின் துன்பத்தையும் பசியினால் ஏற்படும் அவலங்களையும் கொடுமைகளையும் கண்டே தாம் தருமச்சாலையை இறை அருளால் தோற்றுவித்ததாகவும் கூறினார் வள்ளலார். அப்போது அங்கிருந்த அன்பர்களில் ஒருவர் எழுந்து, தருமச்சாலைக்குப் பசி என எவர் வந்தாலும் உணவுகிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்ப, வள்ளலாரோ, “இது சத்தியம், சத்தியம், சத்தியம்” எனச் சத்தியம் செய்த வண்ணம், பசியினால் வருந்தும் மக்கள் எவராயினும், எந்த தேசத்தினர் ஆயினும், எந்தச் சமயத்தைச் சார்ந்திருந்தாலும் எந்தச் சாதியாய் இருந்தாலும், எந்தச் செய்கையாராயிருந்தாலும் அதைக் குறித்து எதுவும் கேட்காமல் இந்த தருமச்சாலையில் பசித்து வந்தவர் எவராயினும் அவர்க்கு உணவிடுவது என்பதை என்றென்றும் நடைமுறைப்படுத்தப் படும் என்று உறுதி கூறினார். வள்ளலாரின் இந்த பதிலால் மனம் மகிழ்ந்த மக்கள், இனி செய்யப் போகும் அருட்காரியங்களை இச்சபையோர் அறியக் கூறும்படி வேண்டினார்கள்.
வருங்காலத்தில் தர்மச்சாலையைச் சார்ந்து வைத்தியசாலை, சாஸ்திரசாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனாசாலை, யோகசாலை, விவகாரசாலை ஆகிய சாலைகளை அதன் கிளைகளாக நிறுவத் திட்டமிட்டுள்ளதாயும், மக்களின் பசி தீர்த்தலையும், புலால் மறுத்தலையும் குறித்தும் அவற்றை வற்புறுத்தியும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூல் ஒன்றையும் எழுதி வருவதாயும் கூறினார். நூலின் முதற்பகுதி முற்றுப் பெற்றுள்ளதாயும், கூறிய வள்ளலார் மீண்டும் தொடர்ந்து பேசலுற்றார்.
“சன்மார்க்க போதினீ” என்னும் பாடசாலை ஒன்றையும் நிறுவ இருப்பதாயும், இப்பாடசாலையில் சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலும் அனைவருக்கும் கல்வி கற்பிப்பது, தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்பிக்கும் மும்மொழிப் பாடசாலைகளாக ஏற்படுத்துவது என்ற திட்டத்தையும், தொழுவூர் வேலாயுத முதலியார் தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் பெற்றிருக்கும் பாண்டித்தியத்தை இந்தப் பள்ளிக்குச் செலவிடவேண்டும் என்று நினைப்பதாகவும் கூறினார். மேலும் வேலாயுத முதலியாருக்குக் கன்னடம், மஹாராஷ்டிரம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளும் தெரியுமாதலால் இங்கே ஏற்படுத்தப் போகும் பாடசாலைக்கு அவரையே தலைமையாசிரியராக நியமிக்க எண்ணம் கொண்டிருப்பதாயும் கூறினார். இன்னும் கற்றறிந்த மற்ற நண்பர்கள் உபாத்தியாயராக இருந்து அங்கே தொண்டு செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். திருக்குறள் கற்பிக்க எனத் தனி வகுப்பும், பாடசாலையும் இருக்கும் எனவும் அனைவரும் திருக்குறளை நன்கு கற்றுத் தெளியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் போவதாயும் கூறினார். அனைவரும் வள்ளலாரை வாழ்த்த, விழா இனிதே முடிந்தது. அனைவருக்கும் அன்னம் பாலிக்க அனைவரையும் அழைத்துக்கொண்டு தருமச்சாலைக்குச் சென்றார் வள்ளலார்.
ஆனால் தருமச்சாலையை வள்ளலார் கட்டியதாலும் விழா ஏற்படுத்தி அங்கே அனைவருக்கும் உபசரணைகள் நடப்பதிலும் மனம் வருந்திய சிலரும் உண்டு. அது முத்தியாலுவும், வேங்கடரெட்டியாரும் ஆவார்கள். இருவருக்குமே தருமச்சாலை கட்டியதால் வள்ளலார் தங்கள் வீட்டை விட்டுவிட்டு நிரந்தரமாய்ப் பிரிந்து சென்று அங்கேயே தங்கிவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது. நாளாக, ஆக, அதுவே உண்மையாகப் போகிறது என்ற தெளிவும் ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு. மனதை வேதனை பிடுங்கியது. திருவருளால் தண்ணீர் விளக்கு எரிந்த நம்முடைய அந்த வீடு இப்போது கிரஹணம் பிடித்த சூரியனைப் போல் ஒளியிழந்து காட்சி அளிப்பதாய் நினைத்தனர். அவர்கள் நினைத்த்து போல் வள்ளலாரும் அவர்களிடமிருந்து விடைபெற வந்தார். முத்தியாலுவுக்கும், வேங்கட ரெட்டியாருக்கும் துக்கம் தாங்க முடியாமல் கண்கள் கலங்கி இருவரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தனர்.தாங்கள் ஏதோ தவறு செய்ததாலேயே அடிகளார் நம்மை விட்டுப் பிரிகிறாரோ என வருந்தி அதை அடிகளிடம் கேட்கவும் செய்தனர்.
அவர்கள் தவறேதும் செய்யவில்லை எனவும், உண்மையில் பெற்ற தாயை விடவும் அதிகமாய்த் தம்மைக் கவனித்துக்கொண்ட ரெட்டியாரம்மாவுக்குத் தாம் கைம்மாறு செய்ய இந்த ஒரு ஜென்மம் போதாது எனவும் கூறிய வள்ளலார் தாம் வடலூரிலேயே தான் பக்கத்திலே இருக்கப் போவதால் நினைத்தமாத்திரத்தில் வந்து அவர்கள் தம்மைப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும் எனவும் கூறி வருந்தவேண்டாம் என்று தேற்றினார். ரெட்டியார் ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு ஆறுதல் அடைய வேறு வழியில்லாமல் முத்தியாலுவும், மனம் தேறினாள். ஆனாலும் நேரடியாக அடிகளுக்குப் பணிசெய்யும் பாக்கியம் கிடைக்காதே என்றும் வருந்தினாள். அடிகள் அவர்கள் இருவரும் தம்மை எந்தவிதமான மனவருத்தமும் இன்றிப் பூரண மகிழ்வோடு அனுப்பை வைக்கவேண்டும் என வேண்ட வேங்கட ரெட்டியார் இறைவன் கருணை அதுவானால் தடை இல்லை என்று கூறி மனம் அமைதி அடைந்தார். முத்தியாலும் அமைதி அடைந்து, அடிகளாரை அங்கிருந்து வடலூர் செல்ல முக மலர்ச்சியோடு வழி அனுப்பினார். ஞான வாழ்க்கையின் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டி அன்பர்களோடு கிளம்பினார் வள்ளலார்.
Sunday, August 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment