Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

சில தினங்கள் சென்றன. ஒரு முற்பகலில் கணக்கிலவதானி முத்துசாமிப் பிள்ளையவர்கள் வடலூருக்கு வண்டியில் வந்து இறங்கினார். தருமச்சாலை வீதி முகப்பில் இறங்கிய அவர் அப்படியே வீதியில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார். தருமச்சாலை இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார். கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகப் பெருக தருமச் சாலை நோக்கி நடந்தவண்ணமே, “சமரச சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பவும், போதிக்கவும் வந்த வள்ளல் பெருமான் நடக்கும் இந்தத் திருவீதியிலே நானும் நடக்க என்ன தவம் செய்தேன்! என் உடல் இந்தப்புண்ணியமான வீதியிலே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து எழவும் நான் செய்த புண்ணியம் தான் என்ன! என் அகந்தை அழிந்தது; கர்வம் ஒழிந்தது. மனமாயை அகன்றது; மமதை அடியோடு அற்றுப் போனது. என் மனமாகிய குகையில் இருந்த அந்தகாரம் அகன்று அருட்பேரொளி வீச ஆரம்பித்து விட்டது. ஐயனே! என் தெய்வமே! வள்ளல் பெருமானே! தங்கள் திருவருளைப் பெற வேண்டியே நான் வந்திருக்கிறேன். “ என்று கூறிக்கொண்டே தருமச் சாலையை அடைந்தார்.



அங்கே வள்ளலார் வேலாயுத முதலியாருடனும், ஆறுமுக முதலியாருடனும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவதானியார் அங்கே போய்ச் சேர பேச்சை நிறுத்தி விட்டு வள்ளலார் அவதானியாரைப் பார்த்தார். அவதானியார் தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வள்ளலாரை வணங்கினார். வள்ளலாரும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அவரை அமரச் செய்தார். அவரோ பக்திப் பரவசம் மீதூற ,” என் ஐயனே, என் தெய்வமே! ஞான தீபமே! அருட்பெரும் சோதியே! தனிப்பெரும் கருணையே! வள்ளலே! என் அகந்தை மீதூறி நான் இறுமாப்புடன் உமக்கு எழுதிய வெண்பாவிற்கு நான் கருதிய உரை மட்டுமின்றி, வேறொரு விசேஷ உரையையும் எழுதித் தாங்கள் அந்தப் பூட்டை அவிழ்த்ததைக் கண்டேன். ஐயா, தாங்கள் எழுதிய விசேஷ உரையின் பொருள் நான் முற்றிலும் அறியாதது; எனக்கு விளங்காததும் கூட. ஐயா, என் அகந்தையால் நான் செய்த இந்தத் தவறைப் பொறுத்தருள வேண்டும். தங்களை வித்துவான் என்றே நினைத்திருக்க, தாங்களோ அற்புதங்களை நிகழ்த்தும் பரிபூரணமான ஞானி என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். ஐயா, நான் திருந்திவிட்டேன். மதுரை மாநகர் விட்டு வடலூர் வந்தது தங்கள் திருவடியில் என் முடிபட வணங்கி, தங்களிடம் மன்னிப்புக் கேட்டு என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதற்காகவே!” ஓவென்று கதறி அழுத அவதானியார், திரும்பத் திரும்ப, “என் ஞானகுருவே!” “என் ஞானகுருவே!” என்றே புலம்பிய வண்ணம் இருந்தார்.



வள்ளலாரும் அன்பு பொங்க, “ஐயா, எழுந்திரும்; வீண் ஆணவம் கூடாது என்பதை உணர்ந்துவிட்டீர்கள் அல்லவா? அது போதும்!” என்று சொல்லிக்கொண்டே அவரை எழுப்பினார். இரு முதலியார்களும் அவதானியாரைக் கண்டு முதலில் அவர் செய்கையால் கோபமுற்றாலும், அவர் இப்போது மன்னிப்புக் கேட்கவே வந்திருப்பது உணர்ந்து அவர் பால் கனிவும், இரக்கமும் கொண்டார்கள். அவரை வணங்கி இருவரும், பெருமான் முன் நாம் என்றென்றும் சிறியவர்களே எனக் கூற அவதானியாரும் முழு மனதோடு அதை ஒத்துக்கொண்டார். பின்னர் இன்னமும் மனம் வருந்திக் கொண்டிருந்த அவதானியாரை வள்ளல் பெருமான் தேற்றி அவரையும் அழைத்துக்கொண்டு அவதானியாரின் அஞ்ஞான நோய் தீர்ந்ததால் உணவுக்கூடம் சென்று வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ளலாம் என அழைத்துச் சென்றார். இதைப் போன்ற சித்துக்களும், அற்புதங்களையும் செய்து வந்த வள்ளலாரைப் பற்றி ஊர் மக்கள் மிகவும் பெருமையுடன் பேசிக்கொண்டனர்.



தருமச்சாலை நிர்வாகத்தை அப்பாசாமிச் செட்டியார் என்பவர் பார்க்க, மற்றப் பொறுப்புக்களுக்கென்று நமச்சிவாயப் பிள்ளை என்பவரும், சண்முகம் பிள்ளை என்பவரும் இருந்தனர். அவர்கள் இருவரில் சண்முகம் பிள்ளை வள்ளலார் சுவாமிகள் உச்சிப் போதில் வெயிலில் அமர்ந்து நிஷ்டையில் இருக்கையில் வள்ளலாரின் தலைக்கும் உச்சி சூரியனுக்கும் இடையே தீப்பிழம்பு ஒன்று தோன்றி அக்னி ஸ்தம்பமாக நிற்பதைக் கண்டு பிரமித்து சாலையின் அனைத்து ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் அதைக் கூறி வியந்தார். இதே போல் இன்னொரு நாள் அதே சண்முகம் பிள்ளை உச்சிப்போதில் வள்ளலார் வெளியே சென்றவர் வரவில்லையே எனக் கவலைப்பட்டுப் பார்க்கையில் சுவாமிகளின் அங்கங்கள் தனித்தனியே துண்டு துண்டாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் மயங்கி விழுந்து விட்டார். அப்போது சுவாமிகளின் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து அவரெதிரே வந்து, இனி இம்மாதிரி வராதீர் என்று சொல்லி அவரைத் தேற்றி தருமச் சாலைக்கு அழைத்துச் சென்றார். இதைக் கேட்ட மக்களில் சிலர் ஆச்சரியம் அடைந்தனர்; சிலருக்குப் பயமாகவும் இருந்தது.



ஆனாலும் முழுக்க முழுக்க இப்படி சித்து வேலைகள் மட்டுமின்றி நோயையும் குணப்படுத்தி வந்தார் வள்ளலார். கூடலூரில் இருந்து வரும் அடியாரான தேவநாதம் பிள்ளை என்பவரின் மகன் ஐயாசாமிப் பிள்ளைக்குத் தொடையில் கட்டி வந்தபோது சுவாமிகள் மந்திரித்த திருநீறோடு தோத்திரம் செய்ய ஒரு மருத்துவப் பாடலும் எழுதி அனுப்பி வைக்க, பாடலில் கூறிய மருத்துவத்தையும் செய்து கொண்டு, திருநீற்றையும் பூசிக்கொண்ட ஐயாசாமிப் பிள்ளைக்குக் கட்டி ஆறிக்குணம் பெற்றார். இதே ஐயாசாமிப் பிள்ளை கடும்நோயால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குப் போக, தேவநாதம் பிள்ளை மகனின் நிலை கண்டு பதறிப்போய் சுவாமிகளை வேண்டிக்கொண்டார். அப்போது வடலூரில் தருமச் சாலையில் அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் வள்ளலார் பெருமான். ஆனால் கூடலூரில் தேவநாதம் பிள்ளையின் வீட்டுக்கதவு தட்டப் பட அவர் கதவைத் திறந்தால் வள்ளலார் எதிரே நின்றார். ஆச்சரியத்தோடு அவரை உள்ளே அழைத்துச் சென்றார் தேவநாதம் பிள்ளை. உள்ளே சென்ற வள்ளலார் ஐயாசாமி பிள்ளைக்குத் திருநீறு இட்டுச் சற்று நேரம் அங்கிருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார். அதிசயிக்கத் தக்க வகையில் ஐயாசாமிப் பிள்ளை அன்றிரவே குணமடைந்தார். மறுநாள் பிள்ளையை அழைத்துக்கொண்டு தேவநாதம் பிள்ளை சாலைக்கு வர, அங்கே அருள் உபதேசம் செய்து கொண்டிருந்த பெருமான் தேவநாதம் பிள்ளையைக் கண்டதும் உடனே எழுந்து வந்து, தனியே அழைத்துச் சென்று, நேற்றுத் தாம் கூடலூர் வந்ததை இங்கே தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.



சந்தேகம் கொண்ட தேவநாதம் பிள்ளை தருமச்சாலையில் இருந்தவர்களை விசாரித்த போது நேர்று முழுதும் சுவாமிகள் சாலையிலேயே இருந்ததாகவும், வெளியே எங்குமே செல்லவில்லை எனவும் தெரிவித்தனர். அப்போது தவிர்க்க இயலாமல் கூடலூருக்கு சுவாமிகள் வந்ததையும், தம் மகனைக் குணப்படுத்தியதையும் தேவநாதம் பிள்ளை தெரிவிக்க வேண்டியதாயிற்று. அதைக்கேட்ட அனைவரும் ஒரே நேரத்தில் தருமச் சாலையிலும், கூடலூரிலும் பெருமான் காட்சி அளித்த விபரம் கேட்டு ஆனந்தமும், ஆச்சரியமும் கொண்டனர். இதே போல் திருவதிகையிலும் ஒரு விழாவில் வழிபடச் சென்ற சுவாமிகள் மக்கள் கூட்டம் நெருக்க சுவாமிகள் மக்களின் விருப்பத்திற்கிணங்க, கூட்டத்தில் பல இடங்களிலும் ஒரே நேரம் தோன்றிக் காட்சி கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

No comments:

Post a Comment