Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இங்கே தருமச் சாலை இருக்கும் வடலூரில் ஓர் முன்பகல் பொழுதில் வள்ளல் பெருமானோடு வேலாயுத முதலியாரும், ஆறுமுக முதலியாரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் தபால்காரர் வந்து அன்றைய தபால்களை வள்ளல் பெருமானிடம் கொடுத்துச் சென்றார். அவற்றில் ஓர் கடிதத்தைப் பார்த்த வள்ளல் பெருமான் சற்றே வெறுப்புக் கலந்த கேலியோடு அந்தக் கடிதத்தைத் தனியாகப் போட்டுவிட்டார். வேலாயுதமுதலியாருக்குத் திகைப்பு மீதூற வள்ளலாரிடம் காரணம் கேட்டார். வள்ளலார் அந்தக் கடிதத்தை எடுத்து முதலியாரையே படிக்குமாறு கூறினார். அதை எடுத்துப் படித்துப் பார்த்த முதலியார் ஆச்சரிய வசப்பட்டார். ஏனெனில் மதுரை ஆதீனத்தில் இருந்து கொண்டிருந்த திருச்சிற்றம்பல ஞானியார் எழுதிய கடிதம் அது. அதை ஏன் பெருமான் தூக்கிப் போட்டார்?? மீண்டும் காரணம் வினவினார் வேலாயுத முதலியார். கடிதத்தின் கடைசியில் எழுதி இருப்பதைப் படிக்குமாறு வள்ளலார் கூறினார். அவ்விடத்தில் நடக்கும் சுகுணங்களையும், அற்புதங்களையும் இலக்கண சுத்தமாய்த் தமக்குக் கடிதம் எழுதும்படி வேண்டிக்கொண்டிருந்தார் திருச்சிற்றம்பல ஞானியார்.



முதலில் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியாமல் திகைத்த முதலியார், பின்னர் புரிந்து கொண்டார். வள்ளலார், புருஷோத்தமரெட்டியார் விஷயமாய் எழுதிய கடிதம் இலக்கண சுத்தமில்லாமல் இருந்தது என இதன் மூலம் தெரிவிக்கின்றனர் அதனாலேயே வள்ளல் பெருமானின் மனம் வருந்தியது எனப் புரிந்து கொண்டார். ஆனாலும் வேலாயுத முதலியாருக்குத் திருச்சிற்றம்பல ஞானியார் தாமாக இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்க மாட்டார் என்றும், வேறு யாரோ சந்தேகப் பட்டோ அல்லது கேள்விகள் கேட்டோ தான் இப்படி எழுதி இருப்பார் என்றும் உறுதியாக நம்பினார். அதை வள்ளலாரிடம் குறிப்பிட்டும் கூறினார். மேலும் அப்போது அங்கே மதுரை மடத்தில் இதனால் விவாதம் நிகழ்ந்திருக்கலாம் எனவும், இப்போது வள்ளல் பெருமான் தன் புலமையைக் காட்டித் தெளிவு படுத்த வேண்டியே இவ்வகைக் கடிதம் வந்திருக்குமெனத் தாம் நம்புவதாயும் கூறினார். ஆறுமுக முதலியாரும் அதை ஆமோதித்தார்.



வள்ளலார் தாமும் அதை அப்படியே தான் புரிந்து கொண்டதாயும், இந்த விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றே தாம் கடிதத்தைத் தூக்கிப் போட்டதாயும் கூறினார். ஆனால் வேலாயுத முதலியார் திரும்பத் திரும்ப வேண்டியதால் வள்ளலார் இதை எல்லாம் லக்ஷியம் பண்ணாமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறினார். இந்தமாதிரியான சந்தடி, சச்சரவுகள் வேண்டாமென்றே தாம் இவ்வளவு தொலைவு வந்து தனிமையையும் நிம்மதியையும் நாடிச் சென்னையை விட்டு வந்ததையும் சுட்டிக் காட்டிவிட்டு மீண்டும் அத்தகையதொரு பிரச்னைக்குள் தாம் புக விரும்பவில்லை என்றார். ஆனால் ஆறுமுக முதலியாரும், வேலாயுத முதலியாரும் வள்ளலார் தமக்காக இல்லை எனினும் மதுரை மடத்தில் வள்ளலாரின் திருமுகத்தை எதிர்பார்த்துத் தினம் தினம் காத்திருக்கும் திருச்சிற்றம்பல ஞானியாருக்காகவேனும் எழுதவேண்டும் என மிகவும் வேண்டிக்கொண்டனர். இதைச் சொல்வதற்குள்ளாக வேலாயுத முதலியாருக்குக் கண்ணீர் வந்துவிடவே அவர் கண்ணீர் விடலாயினார்.



அதைக் கண்ட வள்ளலாரின் மனம் நெகிழ்ந்தது. காகிதமும் எழுதுகோலும் வாங்கிக்கொண்டு அதில் சில வரிகள் எழுதிவிட்டு வேலாயுத முதலியாரிடம் கொடுத்து மீதியை அவர் எழுதி முடித்துத் திருச்சிற்றம்பல ஞானியாரின் விலாசத்திற்கு அஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். கைகள் நடுங்கின வேலாயுத முதலியாருக்கு. ஆனால் வள்ளலாரோ அஞ்சாமல் எழுதும்படி அவரைப் பணித்துவிட்டு உச்சிக்காலம் ஆனதால் தாம் வழிபாடு முடித்துக்கொண்டு பசித்தவருக்கு அன்னமிட தருமச்சாலைக்குச் செல்வதாய்க் கூறிவிட்டுக் கீழ்க்கண்ட பாடலைப் பாடிக்கொண்டே நடந்தார்.



“காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும்பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒரு பகலில் தந்ததனிப் பதியே

சமரசன் மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்த மொழிமாலை அணிந்தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற்றருளே


அதே முன்பகல் பொழுது. மதுரை ஆதீனமடம். சந்நிதானம் அவர்கள் கைகளில் பிரிக்கப் படாத ஒரு கடிதம் காணப்பட்டது. அதைப்பார்த்துத் தமக்குள் சிரித்துக்கொண்டார் சந்நிதானம் அவர்கள். அங்கே திருச்சிற்றம்பல ஞானியார் வந்து சந்நிதானத்தை வணங்கி நின்றார். அவரை அமரச் சொன்ன சந்நிதானம் வடலூர் சுவாமிகளிடமிருந்து வந்திருப்பதாய்க்கூறி அந்தப் பிரிக்கப்படாத கடிதத்தைக் கொடுத்தார். மகிழ்ந்த ஞானியாரிடம் சந்நிதானம் அவர்கள் கணக்கிலவதானி தேவிபட்டினம் முத்துசாமிப் பிள்ளையை அழைத்து வரவும் ஆள் அனுப்பி இருப்பதாய்க் கூறினார். அதற்குள்ளாகபிள்ளை அவர்களே வேகமாய் வந்து கொண்டிருந்தார். ஞானியார் கடிதத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தார். மகிழ்வோடு அற்புதம் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி மீண்டும் மீண்டும் கடிதத்தைப் பார்த்தார். அவதானியாருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம் எனக் கேட்கக் கடிதத்தை சந்நிதானத்திடம் கொடுத்தார் ஞானியார். படித்த சந்நிதானம் அவர்களும் மனம் மகிழ்ந்து சொற்கள் துள்ளி விளையாடி இருப்பதாயும், எழுத்து ஓர் அற்புத நீரோட்டமாய் அமைந்திருப்பதாயும், இத்தகையதொரு எழுத்துக்கொண்ட திருமுகத்தைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், இன்றுவரை பார்த்ததுமில்லை எனவும் கூறி மகிழ்ந்தார்.


ஞானியார், "சந்நிதானம் அவர்களே, கடிதம் முழுதும் சுவாமிகளால் எழுதப் படவில்லை. சுவாமிகள் சொற்படி வேலாயுத முதலியார் எழுதி உள்ளார்." என்றார். அதற்கு சந்நிதானம் அவர்கள் "ஆம் , அதனால் என்ன?? முழுக்கடிதமும் சுவாமிகளே எழுதி இருந்தால் அதைப் பாராட்டவே முடிந்திருக்காது. இதுவே இப்படி இருந்தால் அது இன்னமும் அருமையான கடிதமாக அமைந்திருக்குமே.. " என்று கூறினார். காத்திருந்த அவதானியாரின் பொறுமை பறி போயிற்று,; ஆகவே கடிதம் அவரிடம் கொடுக்கப் பட்டது.

No comments:

Post a Comment