Sunday, August 21, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

முத்தியாலுவிடமிருந்தும்,வேங்கட ரெட்டியாரிடமிருந்தும் பிரியாவிடை பெற்று வந்த அடிகளார் தருமச் சாலையிலேயே தங்கினார். வெள்ளாடை உடுத்திக் கொண்டு மெலிந்த செந்நிற உடலுடனும், நடுத்தர உயரமும், நிமிர்ந்த தோற்றத்தோடும், அழகிய திருமுகத்தோடும், ஒளி வீசும் திருக்கண்களிலே அருட்பார்வையோடும் காணப்பட்டார். அவரின் திருவுருவை நேரில் கண்டு உணர்ந்த அனைவருக்கு அவரின் திருமேனியின் அழகையும் அதில் ஒளி வீசிப்பிரகாசித்த ஞான ஒளியையும் கண்டவர்கள் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் தவித்தனர். அங்கே அடிகளைக் காண வந்த குருமூர்த்தி என்பவரும் சிவராமன் என்பவரும் தங்கள் நிலத்து விளைச்சல் சுவாமிகள் அருளால் அமோகமாய் இருப்பதால் தருமச் சாலையின் அன்னதானத்திற்கு ஆறுகலம் நெல் கொடுக்கவேண்டும் எனப் பேசிக்கொண்டனர். அப்போது சுவாமிகளின் திருவடிவையும் அதில் ஒளிர்ந்த அருட்பிரகாசத்தையும் கண்டு வியந்தனர்.சாதாரணமாகத் துறவிகள் என்றால் காவி உடை தான் தரிப்பார்கள். துறவுக்கு முதல் அறிகுறியும் காவி உடைதான். ஆனால் இங்கேயோ அடிகளார் காவி உடை கடின சித்தர்களுக்கே வேண்டுவது என்றும், போர்க்கொடியின் நிறத்தைக் குறிப்பதாகவும், வெள்ளாடையோ வெற்றிக்கொடி எனவும், தத்துவத்தை வென்றோர்க்கு வெள்ளாடையே உகந்தது எனவும் சுவாமிகள் விளக்கமளித்ததாய்ப் பேசிக்கொண்டனர். அதே போல் உணவிலும் அடிகளாருக்குப் பக்குவம் வந்துவிட்டதாயும் பேசிக்கொண்டனர். சிறு வயதிலிருந்து உணவில் அதிக நாட்டம் இல்லாதவரான அடிகள் சிலகாலம் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டும் வந்திருக்கிறார். ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு வந்த பிள்ளைப் பெருமான் இப்போது இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் உணவு உட்கொள்ளுகிறார். அதுவும் அரை வயிறு அல்லது சில கவளங்கள் தான். சில நாட்களில் வெந்நீரில் சர்க்கரை போட்டுக் கலந்து குடிப்பதோடு நிறுத்திவிடுகிறார் எனப் பேசிக்கொண்டார்கள். இவ்வாறு பேசிக்கொண்ட அவர்கள் சுவாமிகளை வணங்கி விடை பெற்றனர்.தருமச் சாலையின் வெளி வராந்தாவில் நின்றிருந்த சுவாமிகள் தம்மெதிரே தம்மைக் காண வந்த சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள், அன்பர்கள், பொதுமக்கள் என நிறையப் பேரைப் பார்த்துவிட்டு அவர்கள் வேண்டியதற்கென ஒரு சின்னச் சொற்பொழிவைச் செய்தார். சன்மார்க்க சங்கத்துக் கொள்கைகளை விளக்கினார். அதிலும் அன்று புதியதாய்ச் சிலர் சன்மார்க்கத்திலே சேர்ந்திருந்தார்கள். ஆகவே அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டி சன்மார்க்கக் கொள்கைகளை அடிகள் விளக்க ஆரம்பித்தார். அடிகள் சன்மார்க்க சங்கத்து முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் ஒருவரே என்பதாகும் என்றார். தெய்வம் ஒன்று என்று அறியாமல் பெரும்பாலான மக்கள் எம் தெய்வம், உம் தெய்வம் எனப் பல தெய்வங்களைச் சொல்லுகின்றனர். அவர்கள் கூறுவது கண்ணில்லாதவன் யானையைக் கண்டது போல் ஆகும். தெய்வம் ஒன்றே அதுவே அருட்பெருஞ்சோதி வடிவானவராகக் கருதப் படுகிறது. அருட்பெருஞ்சோதி வழிபாடு எக்காலத்துக்கும் பொருந்தி வரும் தன்மையை உடையது. எந்தச் சமயத்தாரும் தயக்கமின்றி ஏற்கலாம். அது உருவ வழிபாடும் இல்லாமல், அருவ வழிபாடும் இல்லாமல் அருவுருவ வழிபாடாக அமைந்துள்ளது. அதை மெய்யாக உணர்தல் மிகவும் முக்கியமானதாகும். என்றார் அடிகள்.அப்போது கிராமத்துச் சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பது குறித்து ஒருவர் கேட்க, அடிகளார் அவ்வாறு உயிர்ப்பலி கொடுத்தல் வன்மையாகக் கண்டிக்கப் படத் தக்கது என்றார். பலியிடுவோர் காட்டில் வசிக்கும் முரட்டு மிருகங்களான புலி, சிங்கம் போன்றவற்றைப் பலி இடுவதில்லையே! வீட்டு விலங்குகளான எருமை, ஆடு, பன்றி, கோழி போன்றவை அன்றோ பலியாகின்றன. அவை பலியிடுவதை நினைக்கையிலேயே உயிர் நடுங்குகிறது என்று கூறிய வள்லலாருக்கு உண்மையிலே உடல் நடுக்கம் எடுத்தது. அப்போது அவர் வாயிலிருந்து ஒரு பாடல் கிளம்பியது.நலி தரு சிறிய தெய்வமென்றையோ

நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றிகுக்குடங்கள்

பலிகடா முதலிய உய்ரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே

புந்தி நொந்துள நடுக்குற்றேன்

கலியுறு சிறிய தெய்வவெங்கோயில்

கண்டகாலத்திலும் பயந்தேன்.”


அடிகளார் கண்ணீர் பெருக்குவதைக் கண்ட அனைவருக்கும் கண்ணீர் வந்தது. வாய்விட்டு அழுதனர். அடிகளார் அவர்களைச் சிரமத்துடன் சமாதானம் செய்துவிட்டு, ஜீவகாருண்யமே சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியம் என்பதால் உயிர்ப்பலியைத் தவிர்க்க வேண்டும் என்றார். அடுத்த முக்கியக் கொள்கை பசி தவித்தல், புலால் மறுத்தல் ஆகும் என்றார் அடிகளார். உயிர்க்கொலையும், புலால் புசிப்பவர்களும் நம் உறவினத்தாராய்க் கொள்ளக் கூடாது. அவர்கள் புற இனத்தவர்கள். சன்மார்க்கிகள் அல்லர். மேலும் அடிகள் தத்துவ நியாயத்தை அநுசரித்துச் சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனவும், தொழில் நியாயத்தை வைத்தே ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன எனவும், கூறிய அடிகளார் சன்மார்க்கத்தின் முக்கிய அடுத்த லக்ஷியம் ஆன்ம நேய ஒருமைப்படுரிமை. ஆகவே ஜாதி, சமய, மத வேறுபாடுகள் இல்லாமல் இருப்பவரே சன்மாக்கிகள் என்றார். தயவு என்பது வெறும் தயவு அல்ல. அது ஜீவ தயவு. அது அனைத்து உயிர்களிடத்தும் காட்டப் படவேண்டும். மேலும் சன்மார்க்கிகள் இறந்தால் உடலை எரிக்கக் கூடாது. புதைக்கவேண்டும். என்றும் விளக்கி அருளினார். அவ்வளவில் அனைவரும் வள்ளலாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து முழக்கமிட சபை கலைந்தது.

No comments:

Post a Comment