Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

உலவச் செல்கையில் கூட்டத்திலிருந்து பிரிந்து தூரம் செல்வதும், கிட்டே இருப்பது போல் தோற்றமளிப்பதுவும், தகுதியற்றவர்கள் உபதேசம் கேட்க நினைத்தால் விலகிச் செல்வதுமாக சுவாமிகளின் எண்ணற்ற திருவிளையாடல்களை மக்கள் பேசி மகிழ்ந்தனர். ஒரு சமயம் சமைத்த உணவு இரவு நேரம் குறைவாக இருக்கையில் திடீரெனப் பலர் பசியோடு வர, சுவாமிகள் அந்த உணவைத் தாமே தம் திருக்கரங்களால் அனைவருக்கும் பரிமாற அமுதசுரபி போல் உணவு வந்து கொண்டே இருந்ததோடு அனைவரும் உண்டு முடித்தும் மீதம் இருந்தது. அரிசி தீர்ந்து போய் விட்டதே என தருமச் சாலைக்காப்பாளர் கவலைப்பட்டால், சுவாமிகள் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு மறுநாளே அரிசியும், உணவுப்பொருட்களும் வரும் எனச் சொல்வாராம். அதே போல் மறுநாள் ஏதேனும் ஓர் அடியார் அரிசியும், உணவுப் பொருட்களும் அனுப்பி வைப்பார்கள். தருமச் சாலையில் இருந்தவர்களை சாலையின் ஒரு பகுதியிலேயே திரையிட்டுவிட்டுப் பின்னர் அதை விலக்கிக் காட்டி சிதம்பர தரிசனத்தைக் கண் குளிர தரிசனம் செய்ய வைத்தார். இவ்விதம் பல்வேறு சித்து விளையாட்டுக்களை அநாயாசமாய் சுவாமிகள் செய்து வந்தார்.



ஒரு சமயம் முன்பகலில் தருமச்சாலையின் முன் வராந்தாவில் அமர்ந்திருந்த வள்ளலார் எவரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். அங்கே இருந்த வேலாயுத முதலியாருக்கும், அவரது மகனுக்கும் ஏதோ அதிசயம் அல்லது புதுமை நடக்கப் போகிறது என்ற உணர்வு தோன்றியது. பெருமானும் உடனே முதலியாரிடம், “புலவரே, சற்று நேரம் வேடிக்கை பாரும்; ஒரு மேதாவி வருகிறார்.” என்று கூறவே முதலியார் அவர் யாரென விசாரித்தார். அதற்கு வள்ளலார் அவர் பெயர் பிநாகபாணி முதலியார் என்றும் புதுச்சேரி தபால், தந்தி அலுவலக மேலாளர் எனவும் கூறினார். பன்மொழி விற்பன்னரான அவர் வள்ளலாரின் மொழியறிவைப் பரிசோதிக்க வேண்டி இங்கே வருவதாகவும் கூறினார். முதலியாருக்கு வருத்தமும், கோபமும் மேலிட்டது. நம் சுவாமியை ஒருவர் சோதிப்பதா என்ற எண்ணமும் ஏற்பட்டது. என்றாலும் பொறுத்துக்கொண்டு, அவர் சுவாமிகளுக்குப்புத்தி சொல்ல வரவில்லை என்றும், சுவாமிகளிடம் அறிவுரைகள் கேட்டுப்புத்தி சரியாக்கிக் கொண்டு போகவே வருவதாயும் கூறிவிட்டு அமைதியாக வருபவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.



பிநாகபாணி முதலியாரும் வந்து வள்ளலாரை வணங்கி நின்றார். அவரை அமரச் செய்த வள்ளலார் தாமும் பதில் வணக்கம் செய்தார். பின்னர் பிநாகபாணி முதலியார் வந்த நோக்கத்தை வினவ அவரும், தம்முடைய மொழி ஆராய்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை சுவாமிகளைக் கேட்டுத்தெரிந்து கொள்ள வந்திருப்பதாய்க்கூறினார். வெளிப்படையாய் இப்படிப்பணிவைக் காட்டினாலும் உள்ளுக்குள் சுவாமிகளை நோக்கி நகைக்கிறார் என்பது வேலாயுத முதலியாருக்கும் புரிந்தது. சுவாமிகளோ அமைதியே காத்தார். பிநாகபாணி முதலியாரிடம்வேலாயுத முதலியாரைக் காட்டி, இவர் உபயகலாநிதி தொழுவூர் வேலாயுத முதலியார். ஆறு மொழிகளில் நல்ல புலமைகொண்டவர் என அறிமுகம் செய்து வைத்தார். பிநாகபாணி முதலியாரும் வேலாயுத முதலியாருக்கு வணக்கம் செய்ய அவரும் பதில் வணக்கம் செய்தார். பின்னர் புலவரின் மகனைக் காட்டி வள்ளலார் இவன் புலவர் மகன் நாகேஸ்வரன், ஐந்து வயதுச் சிறுவனானாலும் ஆறு மொழிகளில் வல்லவன் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். நாகேஸ்வரனும் பிநாகபாணி முதலியாரை வணங்க, அவரும் இந்தச் சிறுபிள்ளையும் ஒரு புலவரா என எண்ணிக் கொஞ்சம் கலங்கினார். ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் குழந்தையை ஆசீர்வதித்தார்.



வள்ளலார் பிநாகபாணி முதலியாரிடம் அவரின் சந்தேகங்களை அந்தச் சிறுவனிடம் கேட்குமாறும் அவனால் தீர்த்து வைக்க இயலும், என்றும் எந்த மொழியிலும் கேட்கலாம் எனவும் கூற பிநாகபாணி முதலியார் நடுங்கிப்போனார். அச்சம் மேலேற, அவர் உடல் வெட வெடத்து நடுங்க, வள்ளலார் காலில் விழுந்து வணங்கினார். தன்னுடைய அகம்பாவத்தை ஒப்புக்கொண்டு வள்ளலாரின் மொழி ஞானத்தைத் தாம் பரிசோதிக்க வந்ததையும் ஒப்புக்கொண்டு அது எவ்வளவு பெரிய தவறு எனத் தாம் உணர்ந்துவிட்டதாயும், பால் மணம் மாறாப்பாலகனை வைத்துத் தம் அகந்தையை அகற்றியதற்கு வள்ளலாருக்கு நன்றி கூறியதோடு அல்லாமல் தம் அக்ஞானம் அகன்றதாயும் கூறி மேலும் மேலும் வணங்கினார். வள்ளலார் அமைதியுடன் அவரிடம், “பிநாகபாணி முதலியாரே! கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு என்பதைப்புரிந்து கொண்டிருந்தால், உணர்ந்து கொண்டிருந்தால் இந்த அகந்தையும் கர்வமும் உம்மை ஆட்டிப் படைத்திருக்காது. போனது போகட்டும். உண்மையை உணர்ந்துவிட்டீர். “ என்று அவரைத் தேற்றி அன்றைய பூஜையைப் பார்த்துவிட்டு உணவும் உண்டு ஓய்வெடுத்துக்கொண்டு மாலை ஊர் திரும்புமாறு அன்புக்கட்டளையும் இட்டார்.

No comments:

Post a Comment