Sunday, August 21, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலார் சுவாமிகள் தம் சன்மார்க்க சீடரே ஆயினும் அவரது திருமண நிகழ்ச்சிகளில் தாம் நேரில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி நீண்ட செய்யுள் வடிவில் கடிதம் அனுப்பிவிடுவார். அவற்றிற்குக் ‘குடும்ப கோரம்’ என்னும் பெயரும் இட்டிருந்தார். என்றாலும், தம் அண்ணன் சபாபதிப் பிள்ளையின் மருமகன் புராணீகர் பொன்னேரி சுந்தரம் பிள்ளையைச் சிதம்பரம் வரச் சொல்லி அவர் ஏழ்மையை நீக்கவேண்டி அம்பலவாணனைப் பிரார்த்தனைகளும் செய்தார். இங்கே தருமச் சாலையில் உணவு அளிக்கும் அறம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமிகளைப்பார்க்க திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் என்னும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளும் நேரே வடலூருக்கே வந்து அவரைத் தரிசித்துச் சென்றனர். தண்டபாணி சுவாமிகள் ஒன்பது வயதிலே கவி பாடும் ஆற்றல் பெற்றவர் எனவும், சிறு கல்லாடையை அரையில் சுற்றிக்கொண்டு கையில் தண்டு பிடித்துக்கொண்டு பெயருக்கேற்ப தண்டபாணியாகவே காட்சி அளித்ததாகவும் அனைவரும் பேசிக்கொண்டனர். தென்னாடெங்கும் சுற்றி வீரத்துடனும், பக்தியுடனும் பல பாடல்களைப் பாடிக்கொண்டு வீரத் துறவியாக விளங்கியதாகவும் தெரிய வருகிறது.தண்டபாணி சுவாமிகள் பாடிய திருப்புகழைக் கேட்ட வள்ளலார் அவரை அருணகிரிநாதரின் மறுபிறவி எனப் பாராட்டினார் எனவும் தெரியவருகிறது. தண்டபாணி சுவாமிகளுக்கு தியானத்தில் முருகன் தோன்றி வள்ளலாரைப் பற்றிச் சொல்லி அவர் முன் பிறவியில் தாயுமான சுவாமிகளாக இருந்ததாய்க் கூறினார் எனவும் தண்டபாணி சுவாமிகள் வள்ளலாரிடம் கூறி இருக்கின்றார். பின்னர் வள்ளலாரோடு தருமச் சாலையிலேயே சில நாட்கள் தங்கி இருந்து இருவரும் அளவளாவி ஆநந்தம் அடைந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இவர்களைத் தவிரவும் மாயூரம் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளையவர்கள், திருவாவடுதுறை மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள் போன்றோரும் சுவாமிகளை வடலூரில் தரிசித்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள், எழுதிய நீதி நூலுக்கு சுவாமிகள் சாற்றுக்கவி எழுதிக் கொடுத்ததாகவும், பிள்ளை அவர்கள் எழுதிய சமய சமரசக் கீர்த்தனைகளை பிள்ளை அவர்கள் சுவாமிகள் எதிரே வடலூரில் அரங்கேற்றியதாகவும் தெரிய வருகிறது.ஒரு நாள் வேங்கட ரெட்டியார் சுவாமிகளிடம் வந்து தம் தம்பியான புருஷோத்தம ரெட்டியாரைக் காணோம் என வருந்தி அழுதார். வள்ளலார் மேலும் தூண்டி விசாரிக்க, புருஷோத்தம ரெட்டியார் அடிக்கடி இப்படிக் காணாமல் போவதாகவும், பின்னர் மனம் திருந்தி தானே வந்து கொண்டிருந்ததாயும் சொன்ன வேங்கட ரெட்டியார், இம்முறை நாட்கள் அதிகம் ஆகிவிட்டன எனவும், இருக்குமிடம் தெரியவில்லை எனவும் வருந்தினார். இருவருக்கும் சண்டை ஏதானும் மூண்டதா என வள்ளலார் கேட்டதற்கு ரெட்டியார், களத்து மேட்டில் நெல்லைக் காவல் காக்கப் போகச் சொன்னதாகவும், புருஷோத்தம ரெட்டியார் அதை அலக்ஷியம் செய்ததால் இருவருக்கும் வந்த வாக்குவாதத்தில் அவர் கோவித்துக்கொண்டு சென்றிருப்பதாயும் கூறினார். தன் மனைவி முத்தியாலு, பெற்ற மகனைப் போல் வளர்த்த கொழுந்தனாரைக் காணோம் என்றதில் இருந்து மனம் வருந்தி அன்ன, ஆகாரம் இறங்காமல் அழுதுகொண்டே இருப்பதாயும் கூறினார். சுவாமிகள் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டே அவர் போயிருக்கும் இடங்கள் எனச் சந்தேகம் வரக்கூடியவற்றை விசாரித்தார். அப்போது மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்தில் சேர விரும்புவதாய்த் தம் தம்பி புருஷோத்த ரெட்டி பண்ணையாளிடம் சொல்லிக்கொண்டிருந்ததாயும், இன்று காலையே பண்ணையாள் அதைத் தெரிவித்ததாகவும் கூறி வள்ளலாரை மதுரை மடத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பும்படி வேண்டிக்கொண்டார். சுவாமிகளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு புருஷோத்த ரெட்டியார் வந்துவிடுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.வள்ளலார் மதுரைக்குக் கடிதம் எழுதி அனுப்புவது சிரமம் ஒன்றுமில்லை எனவும், தம் நண்பரும் பேரன்புக்கும் உரியவரான திருக்கழுக்குன்றாம் திருச்சிற்றம்பல ஞானியாரும் கூட மதுரை மடத்திலேயே தங்கி இருப்பதாயும் கூறினார். உடனே வேங்கட ரெட்டியாருக்கு திருச்சிற்றம்ப ஞானியாருக்கு வள்ளலார் உபதேசம் செய்ய மறுத்தது நினைவில் வந்தது. திருச்சிற்றம்பல ஞானியார் கல்லாடைத் துறவி. அவருக்கு வெள்ளாடைத் துறவியான தாம் உபதேசம் செய்தால் அது தகாது என்ற காரணத்தாலேயே வள்ளலார் மறுத்ததாகக் கூறினார். அப்போது மீண்டும் மீண்டும் வற்புறுத்திய ஞானியாருக்குத் தன் நிலையைப் புரிய வைக்க வேண்டி சுவாமிகள் எழுதிய கவிதையை நினைவிலிருந்து கூறினார் வேங்கடரெட்டியார்.“நின் நிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்

என்னிலையை அந்நிலையே எய்துதிகாண்-முன்னிலையை

இற்குருவி காட்டாதே என்றுரைத்தான் ஏரகம் வாழ்

சற்குரு என் சாமி நாதன்.”

என்ற அந்தப் பாடலை நினைவு கூர்ந்தார் வேங்கடரெட்டியார். அதன் பின்னரே திருச்சிற்றம்பல ஞானியார் மதுரை சென்று ஞானசம்பந்த சுவாமிகள் திருமடத்தில் தங்கினதையும் நினைவு கூர்ந்தார்.அப்போது வள்ளலார் ஞானியார் புருஷோத்த ரெட்டிக்கு அனைத்தையும் புரிய வைத்துத் திருப்பி அனுப்புவார் என்று உறுதி கூறினார். பின்னர் அவ்வண்ணமே மதுரை மடத்துக்குச் செய்தியும் எழுதி அனுப்பினார்.

No comments:

Post a Comment