Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

ஒரு சமயம் இறப்புக் குறித்து சுவாமிகளைச் சரணாலயர் கேட்டபோது, அவர் பிரதம பத்திரிகை ஒன்று எழுதிக் கொடுத்ததாயும், அதில், “திருச்சிற்றம்பலம். இஃது தூற்றாமல் வைக்க. சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள் தொட்டு இந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர் உறவினர் அடுத்தோர் வார்திபர் வாலிபர் பாலியர் குமாரர் ஆண்மக்கள் பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்தில் தருக்கம் செய்யப்படாது. உண்மை!” என எழுதிக் கொடுத்திருந்தார். சரணாலயர் மேற்கண்ட செய்தியைச் சொன்னதுமே வேலாயுத முதலியார், சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் என்பதற்கு சுவாமிகள் விளக்கம் சொல்லி இருப்பது சரி என்றாலும் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்து வருவர் என்ற சுவாமிகளின் கொள்கை விளங்கவே இல்லை என்று கூறினார். சரணாலயர் இப்போதைக்கு இதைக் குறித்து நாம் எந்தத் தருக்கமும் செய்யாமல் இதைத் தூற்றாமல் இருப்பதே நன்மை எனக் கூறி வற்புறுத்த அதை அவ்வாறே வேலாயுத முதலியாரும் ஏற்றுக்கொண்டார்.மேலும் சரணாலயர் கூறியதாவது வள்ளல்பெருமான் எழுதிய திருமுகம் ஒன்றில் சுவாமிகள் சாலை சம்பந்திகளுக்கு எழுதிய சமாதிக்கட்டளை பற்றிக்கூறலானார். அது வருமாறு:

“திருச்சிற்றம்பலம். சுவாமிகளுக்குத் தெரிவிப்பது. சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் தன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமயபேதங்களும் சாத்திரப் பேதங்களூம் ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்கப் பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக்கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுளர் தேவர் அடியார் யோகிஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்ஹ்ட்திகளும் எல்லாத்தேவர்களும் எல்லாக்கடவுளரும் எல்லாத்தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக்குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப்பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப்பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னையடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.” இது தான் அந்தக் கடிதத்தில் கண்ட வாசகம் என சரணாலயர் முடித்தார். அதன் மேல் வேலாயுத முதலியார் விடைபெற்றுக்கொண்டு தருமச்சாலை வழிபாடுகளில் கலந்து கொள்ளச் சென்றார்.வருடம் 1872. வருடத் துவக்கம் அப்போதே ஆரம்பமாகி இருந்தது. ஓர் நாள்………வடலூரும், பார்வதிபுரமும் கோலாகலமாகக் காட்சி அளித்தது. புதிதாய் வள்ளலார் ஏற்படுத்திய கட்டிடத்தின் முன்னே வெட்டவெளியில் ஊர்மக்களும், சன்மார்க்கிகளும் அமைதியாகவும் ஆர்வமாகவும் காத்திருக்க வள்ளலார் தம் உரையைத் தொடங்கினார். சன்மார்க்க சங்கம் காண விரும்பியபோதே அதை ஒட்டிய ஒளித்திருக்கோயில் ஒன்றையும் காணவிரும்பி அருட்பெரும்சோதியான ஆண்டவரிடம் விண்ணப்பித்துக் காத்திருந்தாய்க் கூறினார். ஆகவே உத்தரஞானசித்திபுரம் அல்லது உத்தரஞான சிதம்பரம் என்று திருவருளால் ஆக்கப்பட்ட சிறப்புப் பெயர்களை உடைய பார்வதிபுரம் என்றும், வடலூர் எனவும் சொல்லப்படும் குறிப்புப் பெயர்களும் உடைய இந்தப் பதியில் தருமச் சாலைக்கு வடமேற்கே திருவருளின் சம்மதத்தைப் பெற்று, வள்ளலார் வரைந்து கொடுத்த வரைபடத்தின்படி சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று கூடி அருட்பெரும்சோதியான ஆண்டவரைத் தரிசிக்க வேண்டி இத்திருக்கோயிலைக் கட்டுவித்ததாய்க் கூறினார். இந்தத் திருக்கோயிலுக்கு சத்தியஞானசபை எனப் பெயரிட்டிருப்பதாயும், அந்தப்பெயராலேயே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு இந்த சுத்த ஞானசபையைத் தம் திருவருள் கூட்டிய சம்மதத்தோடு ஏற்படுத்திக்கொண்டிருப்பதாயும், இக்காலம் தொட்டு அளவு குறிக்கப்படாத நீண்ட நெடுங்காலம் இறைவன் தாமே அங்கே அமர்ந்து விளையாடச் சம்மதித்திருப்பதாயும், இந்தத் திருக்குறிப்பை ஆண்டவர் வெளிப்படுத்தி அங்கே அருட்பெரும்சோதியாய் வீற்றிருப்பதாயும் மிகுந்த பரவசத்துடன் கூறினார். வருகிற தைப்பூசத்திருநாள் அன்று அனைவருக்கும் இந்த ஜோதி தரிசனம் கிடைக்கும் எனவும் கூறிய வள்ளலார் மனம் உருகப் பாடல் ஒன்றைப் பாடினார்.அருட்சோதித்தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவாறெனக்கருளும் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.”வள்ளலார் சித்திவளாகத்திருமாளிகைக்குச் செல்ல மக்கள் சத்திய ஞானசபையின் அமைப்பைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். அகத்தே காண்பதற்குரிய அனுபவமான உள்ளார்ந்த ஜோதி தரிசனத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதற்காக வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞானசபை ஓர் இயற்கை விளக்கம். திரைகள் எல்லாம் தத்துவப்படலங்கள் எனப்படும் மாயாத்திரைகள். நம்மிடமுள்ள அஞ்ஞானமே இங்கே திரைகளாய்க் குறிக்கப்படுகின்றன. அஞ்ஞானமென்னும் திரைகள் நீங்கினால் நம்முள்ளே ஆன்மஒளியாக அருட்பெரும் சோதியைக்காணமுடியும். அகத்தே தாம் பெற்ற அருட்பெரும்சோதி அனுபவத்தையே புறத்தே ஞானசபையாக அமைத்து மக்களுக்குக் காட்டினார் வள்ளலார். இந்த சத்திய ஞானசபையில் கட்டிடக்கலை நுணுக்கச் சிறப்பு மட்டுமல்லாமல் தத்துவச் சிறப்பும் ஒருங்கே கொண்டமைந்தது.தாமரை மலர் போல் அமைக்கப்பெற்றிருக்கும் சபையின் தோற்றம் எண்கோணவடிவில் உள்ளது. உலகின் எட்டுத்திசைகளையும் இது சுட்டிக்காட்டும். இது அவற்றுக்கெல்லாம் பொதுவானதும் கூட. செங்காவி நிறத்தில் கட்டியுள்ள இந்தக் கோயிலின் கட்டிட அமைப்பு வியக்கத்தக்கதாய்க் காணமுடியும். சபையைச் சுற்றி வெளிப்புறம் இரும்புச் சங்கிலித் தொடர் வளைந்து வளைந்து தொங்கிக் காணமுடியும். அது அன்பு என்னும் சங்கிலியில் நாம் அகப்படுவதைக் குறிக்கும். நாம் அன்பு என்னும் சங்கிலியில் அகப்படுவதோடு அல்லாமல் அருட்பெரும்சோதியையும் அந்த அன்புச் சங்கிலியில் பிணைக்கிறோம். அன்புக்கு அகப்படுபவன் ஆண்டவன். இதைச் சுவாமிகளின் அருட்பா ஒன்றின் மூலம் காணமுடியும்.அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட்படுபரம்பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள்ளமைந்தபேர் ஒளியே

அன்புருவாம்பர சிவமே.இரும்புச் சங்கிலித்தொடரை அடுத்து இடையிடையே அறிவு வடிவைச் சுட்டிக்காட்டும் வேற்படையின் குறியுள்ள இரும்புக்கம்பிகளுடன் கூடிய ஐம்பத்திரண்டு கட்டைகள் காணப்படும். அவை ஓம் என்ற பிரணவ மூல மந்திரத்துடன் கூடிய “அகாராதி க்ஷகாராந்த”மாக உள்ள அனைத்து மாத்ருகா மந்திரங்களையும் குறிக்கும். இது உபாசனையும் வழிபாட்டு முறையும் கை கூடி வந்தவர்களுக்கே புரியும் ஒன்று. தெற்கு நோக்கி அமைந்துள்ள ஞானசபையில் முகப்பில் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இவைகளின் தத்துவமானது கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகியவற்றைக்குறிப்பதுவே. சாளரங்கள் இரண்டும் பாசஞானம், பசுஞானம் ஆகியவற்றைச் சொல்வது. இவற்றைக்கடந்து உள்ளே நுழைந்ததும் காணப்படும் மண்டபத்தின் இருபக்கமும், கிழக்கில் ஓர் வாயிலும், மேற்கில் ஓர் வாயிலும் காணமுடியும். இவை பரஞானம், அபரஞானம் ஆகியவற்றைக்குறிக்கும். மண்டபத்திலுள்ள நான்கு சாளரங்களும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை கூடுதல் ஆகிய நான்கின் வழியாகவே உண்மைப் பரம்பொருளை உணரவேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

No comments:

Post a Comment