Tuesday, September 20, 2011

அருட்பெருசோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலார் தன் தொண்டை விரிவு செய்து கொண்டே இருந்தார். தருமச்சாலையில் சாப்பாடு போடுவதோடு மக்களுக்கு மருத்துவமும் செய்து வந்தார். பசிப்பிணி போக்குவதோடு உடற்பிணிக்கும் மருத்துவம் தேவை எனக் கருதிய வள்ளலார் அவர்கள் சுமார் நானூற்று எண்பது மூலிகைகளுக்கும் மேல் குண அட்டவணையை எழுதி வைத்தார். சித்த வைத்தியத்தில் நிபுணரான அடிகளார், பல மருந்துகளைச் செய்து வைத்துக்கொண்டு அவற்றை மக்களுக்குத் தேவையான சமயம் கொடுத்து வந்தார். அது மட்டுமல்லாமல் சிரஞ்சீவி மூலிகைகள் பற்றியும் மருத்துவக்குறிப்புக்களும் எழுதி வைத்தார். இவை இத்தனையும் போதாது என நினைத்தோ என்னவோ, தொழுவூர் வேலாயுத முதலியாரை ஆசிரியராக நியமித்து தருமச்சாலையில் திருக்குறள் வகுப்பையும் நடத்தினார். அங்கே படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் எனப் பாகுபாடின்றி எல்லோருக்கும் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப் பட்டது.ஆனால் வேலாயுத முதலியார் போன்ற பெரும்புலமை படைத்தவர்கள் பாடம் நடத்தியதால் ஒரு சிலரால் பாடத்தைப் புரிந்து கொள்ளவும் முடியாமல் போயிற்று. ஆகவே வள்ளலார் வேலாயுத முதலியாரை அழைத்து சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகப்பாடம் எடுக்கும்படி அறிவுறுத்தினார். நாட்கள் சென்றன. நாட்கள் ஓட ஓட, தருமச்சாலைக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. வள்ளலாரால் தனிமையில் ஏகாந்தத்தில் தியானத்தில் அமரமுடியவில்லை. யோக சாதனைகள் செய்யத் தடைகள் ஏற்பட்டன. ஆகையால் வடலூருக்குத் தெற்கே மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்குச் சென்று வசிக்க ஏர்பாடுகள் செய்து கொண்டார். அந்த ஊர் மக்களும் கிராமத்து மணியக்காரரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வள்ளலார் தங்குவதற்கு வேண்டிய தேவையான வசதிகளைச் செய்து தந்தனர். வள்ளலார் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்த திருமாளிகை ஒரு காலத்தில் வைணவ ஆசாரியர்கள் எழுந்தருளித் தங்கி மக்களுக்கு வைணவ தீக்ஷை, உபதேசம் போன்றவை செய்து வைத்துக்கொண்டிருந்த இடமாக இருந்து வந்தது. காலப்போக்கில் வைணவ ஆசாரியர்கள் வரவு குறைய மாளிகை காலியாக இருக்கவே அங்கே தங்கித் தம் யோக சாதனைகளைச் செய்ய வள்ளலார் ஒப்புக்கொண்டார். அந்த மாளிகையை, “சித்திவளாகத் திருமாளிகை” என அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.எல்லாருக்கும் இந்தப்பெயரின் காரணம் விளங்கவில்லை. எனினும் வேலாயுதமுதலியாரே தைரியமாய்க் காரணத்தைக் கேட்டார். சித்தி வளாகம் சகல சித்திகளையும், அதாவது வீடுபேற்றைத் தரும் என்பதால் அந்தப்பெயர் வைத்ததாய் வள்ளலார் கூற அனைவரும் மகிழ்ந்தனர். வள்ளலாரும் சித்திவளாகத் திருமாளிகையில் வாசம் செய்து தம் யோகசாதனைகளைத் தொடர்ந்தார். ஆனால் மக்களுக்கு அவர் தரிசனம் கொடுக்கவில்லை. பலநாட்கள் பொறுத்த மக்கள் ஒருநாள் வேலாயுதமுதலியாரிடம் சென்று, சித்திவளாக மாளிகைக்கு வந்தது முதல் அடிகளைப் பார்க்க முடிவதில்லை எனப் புகார் தெரிவித்தனர். எங்கு சென்றார்? என்ன செய்கிறார் என்பதே விளங்கவில்லை என்றும் கவலையுடன் கூறினர். அதற்கு வேலாயுத முதலியார் பெருமான் எங்கும் செல்லவில்லை என்றும் அவர்களோடே இருப்பதாகவும், ஆனால் புறக்கண்களுக்குத் தெரியமாட்டார் எனவும் உருவத்தை மறைத்துக்கொண்டு அருவமாக உலவி வருகிறார் என்றும் தெரிவித்தனர். அனைவருக்கும் ஆச்சரியம் மேலிட்டது.வேலாயுத முதலியாரோ இத்தகைய அற்புத சாதனைகளைப் பயில வேண்டியே வள்ளலார் தனித்துப் பயிற்சி செய்யவேண்டி இந்த மாளிகைக்கு வந்ததாகவும், இப்போதும் அது போலவே தம் திருமேனியை மறைத்துக்கொண்டு அருவநிலையில் விளங்குவதாகவும் தெரிவித்தார். இதைக் கண்டு சிலர் அஞ்சலாம் என்பதால் அடிகளே, ஓர் அறிவிப்பையும் வெளியிட்டிருப்பதாய்க் கூறிவிட்டு அந்த அறிவிப்பைப் படித்தார்.“திருச்சிற்றம்பலம். அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது. ஒருவனைப்பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச காலத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுவேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நானாகவே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். தருமச்சாலையை நன்கு நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.”இதைப் படித்த வேலாயுத முதலியார் இதற்கு முன்னரும் சுவாமிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், பலநாட்கள் சென்றபின்னரே வெளிப்பட்டதாகவும் கூறிவிட்டு சுவாமிகள் இவ்வாறு மறைவதும் வெளிப்படுவதும் இனிப் பலமுறை நிகழ்த்தலாம் எனத் தாம் நினைப்பதாகவும் இது குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். வடலூரில் தருமச்சாலையை நிர்வகித்து வரும் புதுச்சேரி சதாசிவம் செட்டியாரைக் காண ஒரு நாள் ஆடூர் சபாபதி சிவாசாரியார் வந்தார். சிவாசாரியாரின் முகம், கைகள், கால்கள் போன்றவற்றில் தீக்காயம் பட்டது போல் காணப்படவே சதாசிவம் செட்டியார் பதறிப் போனார். என்ன ஆயிற்று என அவரை விசாரித்தார். சபாபதி சிவாசாரியாரும் தன் மனம் சரியில்லை எனவும், மனதைக் கொஞ்சமாவது ஆற்றிக்கொள்ள வேண்டியே இங்கே வந்ததாகவும் கூறினார். மீண்டும் சதாசிவம் செட்டியார் தீக்காயங்களின் உண்மையான காரணத்தைக் கூறும்படி வற்புறுத்த, இது குறித்து எவரும் அறியாமலேயே பேச வேண்டும் என்று சபாபதி சிவாசாரியார் கூறிவிட்டு அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டார்.வேறு எவரிடமும் இது குறித்துப் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு சபாபதி சிவாசாரியார் வேலாயுத முதலியாரிடம் பிரமதண்டிகா யோகம் குறித்து அவர் அறிந்திருக்கிறாரா என விசாரிக்க, செட்டியாரும் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தீச்சட்டிகளுக்கு நடுவே அமர்ந்து செய்யும் மிகக் கடினமான யோகமாயிற்றே அது எனத் தன் வியப்பையும் தெரிவித்தார். அப்போது சிவாசாரியார் சித்திவளாகத்தின் உள்ளே உள்ள திருவறையில் வள்ளலார் தமக்கு இருபக்கமும் இரும்புச் சட்டியை வைத்துக்கொண்டு சீமைக்கரியை எரியவிட்டுக்கொண்டு, கதவைத் தாழிட்டுக் கொண்டு பிரமதண்டிகா யோகம் செய்வதாய்த் தாம் அறிந்து கொண்டதாய்க் கூறினார். செட்டியார் வியப்புடன் கேட்டுக்கொண்டிருக்க, மேலும் சிவாசாரியார் கூறியதாவது: தாம் இரண்டு நாட்கள் முன்னர் சித்திவளாகம் சென்றிருந்ததாயும், சுவாமிகள் அறையில் இருந்ததாய்த் தெரிவித்தார்கள் என்றும் அதன் மேல் தாம் அவசரத்துடன் அறைக்குள் நுழைந்ததாயும் கூறினார்.அங்கே சுவாமிகள் பிரமதண்டிகா யோகத்தில் இருந்திருக்கிறார். இது விஷயம் அங்கே உள்ள எவரும் அறியவும் இல்லை. மேலும் கதவும் சரியாகச் சார்த்தப்படாமல் கொஞ்சம் திறந்திருக்கவே அவசரத்துடன் உள்ளே நுழைந்த தமக்குப் போன வேகத்தில் தம் கால்கள் பட்டு நெருப்புத்துண்டங்கள் சிதறி மேலே விழுந்ததாயும், சுவாமிகள் மேலும் விழுந்ததாகவும் கூறிவிட்டு நிறுத்தினார். மேலும் சிவாசாரியார் கூறியதாவது: “இதை நீர் எவருக்கும் கூறக்கூடாது. நெருப்புத் துண்டங்கள் விழுந்ததில் எனக்கு மட்டுமே தீக்காயங்கள் ஏற்பட்டன. சுவாமிகளுக்கு எதுவும் நடக்கவில்லை. என் உடலே எரிச்சல் தாங்க முடியாமல் தீக்காயங்கள் ஏற்பட்டன. நான் உடனே பயந்து போய் வெளியே வந்து கதவைச் சார்த்திவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். எவருக்கும் இது குறித்துச் சொல்ல வேண்டாம்.” என்றும் கேட்டுக்கொண்டார். செட்டியாரும் எவரிடமும் தான் தெரிவிப்பதில்லை என உறுதியளித்துவிட்டு வேலாயுத முதலியார் இம்மாதிரியானப் பல விஷயங்களை சுவாமிகள் பற்றித் தம்மிடம் சொல்லி இருப்பதாய்க் கூறினார்.

No comments:

Post a Comment