Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இதன் நடுவே வேட்டவலம் என்னும் ஊரில் ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அருணாசல, வசந்த, கிருஷ்ண, வாணாதராய அப்பாச்சாமி பண்டாரியார். அவர் மாளிகைக்கு அடிகளார் விஜயம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்தன. அழகான சிங்காதனம் அலங்கரித்து வள்ளலாரை வரவேற்கத் தயாரானார் ஜமீந்தார். வள்ளலாரும் வேலாயுத முதலியாருடன் வந்து சேர்ந்தார். அடிகளாரை வணங்கி வரவேற்ற ஜமீந்தாரிடம் தம்முடன் வந்த வேலாயுதம் முதலியாரை அறிமுகம் செய்து வைத்தார் அடிகளார். பின்னர் அடிகளார் ஜமீந்தாரிடம், “ஜமீந்தாரே, நீர் இந்தக் கூடத்தில் இரண்டு ஆசனங்கள் போட்டிருக்கிறீர். இதில் தாங்கள் விரும்பிய ஆசனத்தில் நான் அமர்ந்து கொள்கிறேன். மற்றதில் தாங்கள் அமரலாம். “என்று கூறிக்கொண்டே ஜமீந்தார் நினைத்த ஆசனத்தில் வள்ளார் அமர்ந்தார். ஜமீந்தாருக்குத் திகைப்பும், பயமும் ஏற்பட்டது. அப்படியே பெருமானின் திருவடிகளில் விழுந்துவிட்டார்.வள்ளலார் பதறிக்கொண்டே அவரை எழுப்பினார். எழுந்த ஜமீந்தார் கண்கள் கலங்கி நீரைப் பொழிந்தன. வள்ளலாரிடம் தம்மை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். சுவாமிகளின் பெருமையை முற்றிலும் அறியாத தாம் அவரைப் பரிசோதனை செய்ய இருந்ததையும், அதற்காகவே இங்கே இரு ஆசனங்கள் போட்டதாயும் கூறினார். மேலும் தாம் நினைத்த ஆசனத்தில் வள்ளலார் அமர்ந்தால் அவரே தம்மை ஆட்கொள்ள வந்த ஈசன், தேவன் என அவரை ஏற்றுக்கொள்ள இருந்ததாயும் கூறினார். இது அனைத்தையும் கண்ட வேலாயுத முதலியார், ஜமீந்தாரிடம் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டே பெருமான் வந்து தம்மைப் பரிபூரணமாக ஜமீந்தார் உணரும்படி காட்டிக்கொண்டு விட்டார் என்று பெருமிதம் கொண்டு அதை ஜமீந்தாரிடம் கூறவும் செய்தார். ஜமீந்தாரும் தாம் தம் தவறை உணர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தம் ஞானகுரு இனி வள்ளலார் பெருமான் தான் என்றும், இவரின் பணிகளைச் செய்வதையேத் தம் வாழ்நாளின் லக்ஷியமாய்க் கொள்ளப் போவதாயும் சங்கல்பம் எடுக்கப் போவதாயும் கூறினார். அதைக் கேட்டுக்கொண்ட வேலாயுத முதலியாரும் , வள்ளலாரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கே ஜமீனைக் காண வந்ததில் இருந்து ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று ஜமீந்தாரிடம் கூறினார்கள். ஜமீந்தாரும் என்ன சந்தேகம் எனக் கேட்க வேலாயுத முதலியார் ஜமீன் ஆட்கள் ஆடுகள், கோழிகளை நிறையக் கொண்டு போவதைப் பார்த்து எதற்கு எனத் தாங்கள் இருவரும் சந்தேகம் கொண்டதாய்த் தெரிவித்தார்.அதற்கு ஜமீந்தார் தம்முடைய இரு மனைவியராலும் தமக்குப் பெரும் தொல்லையே, எந்தவிதமான சுகமும் இல்லை எனக்கூறி வருந்த, மேலே கூறும்படி வேலாயுத முதலியார் தூண்ட, ஜமீந்தார் தம் மூத்த மனைவியை பிரம்ம ராக்ஷஸ் பிடித்துக்கொண்டு ஆட்டுவதாயும், இளைய மனைவியை மஹோதரம் பீடித்திருப்பதாயும் கூறி வருந்தியதோடு அல்லாமல் கண்களும் கலங்கினார். அனைத்தையும் மெளனமாய் வள்ளலார் கேட்டுக்கொண்டிருந்தார். ஜமீந்தார் மேற்கொண்டு தம் இரு மனைவியரில் மூத்தவளை இரும்புச் சங்கிலியில் கட்டி வைத்திருப்பதாயும், இளையவள் மற்றோர் அறையில் படுத்த படுக்கையாய் இருப்பதாயும் கூறினார். வேலாயுதமுதலியார் இந்தக் கொடுமையைக் கேட்டதும் மனம் பரிதவித்துப் போனார். மேலே பேசிய ஜமீந்தார் இருவரின் உடல்நலமும் சரியாக வேண்டிக் காளிகோயிலுக்குப் பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்று காளிகோயில் பூசாரி கூறினதாகவும் தெரிவித்தார்.அவ்வளவு நேரமும் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்த வள்ளல் பெருமானுக்கு இப்போது கோபம் மிகுந்தது. “அப்படி என்றால்?’ என்று கோபமாய்க் கேட்டுவிட்டு ஜமீந்தாரையும் கோபமாய்ப் பார்த்தார். ஜமீந்தாருக்கு விஷயம் சரியாய்ப் புரியாமல் வள்ளலாரிடம், “ காளிக்குப் பலி கொடுக்கவேண்டியே ஆடுகளும், கோழிகளும் செல்வதாகவும், அவற்றைத் தான் ஜமீன் ஆட்கள் கொண்டு போவதாயும் கூறினார். வள்ளலார் மனம் பதறியது. உடல் துடித்தது. மனம் வேதனையில் ஆழ்ந்தது. வேதனை பொறுக்க முடியாமல் கதற ஆரம்பித்தார். “பண்டாரியாரே, மாபெரும் தவறு செய்கிறீர். மன்னிக்க முடியாத தவறு!” என்று கடுமையாகக் கூறினார். ஜமீந்தாருக்கு ஒரு பக்கம் காளி கோயில் வழிபாடு நின்றுவிடுமோ என அச்சம்; அதே சமயம் வள்ளலாரின் வார்த்தைகளை மீற முடியாதே என்ற கவலையும் மீதூற அவரும் அழுதுவிடுவார் போல் இருந்தது. வள்ளலாரிடம் தாம் செய்ய வேண்டியது என்ன என்று கேட்க, பெருமானின் பொறுமை எல்லை கடந்தது.இந்தப் பலி கொடுக்கும் கொடிய வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அறியாமையாலும், மூட நம்பிக்கையாலும் மக்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமை உலகை விட்டே செல்ல வேண்டும் என்றும் சங்கல்பங்கள் செய்து ஜமீந்தாரிடம் ஆணையிட்டார். ஜமீந்தாருக்கோ தம் இரு மனைவியரின் உடல்நிலை குறித்துக் கவலை. பரிதாபமாய்ப் பெருமானைப் பார்த்தவண்ணம், “பெருமானே, தாங்கள் சொல்வது சரியே. ஆனாலும் என்னைத் தவறாக நினைக்காதீர். என்னிரு மனைவிகளையும் நான் எவ்வாறு காப்பாற்றுவேன்? எனக்கு வேறு வழி தெரியவில்லையே! தாங்களே இதற்கொரு வழிகாட்டியருள வேண்டும் சுவாமிகளே!” என்று ஜமீந்தார் வேண்டினார். வள்ளலார் தாம் பின்னர் அவர் மனைவிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதாயும் தற்சமயம் இந்தப் பலியென்னும் பெயரில் நடைபெறப்போகும் உயிர்வதையை நிறுத்தும்படியும் ஆணையிட்டார். சுவாமிகளின் பேச்சில் நம்பிக்கை வரப்பெற்ற ஜமீந்தார் பணிவோடு தாம் அங்கே சென்றதுமே இவை ஆரம்பம் ஆகும் என்பதால் தாம் கோயிலுக்குச் செல்லாமல் நின்றுவிடுவதாய்க் கூற, அப்படியும் பெருமான் மனதில் நிம்மதி வரவில்லை. என்றாலும் ஜமீந்தார் மேலும் மேலும் உறுதியுடன் கூறிச் சத்தியம் செய்யப் பெருமான் அமைதியடைந்து அவர் மனைவியரில் முதல் மனைவியை முதலில் அழைத்துவரச் சொன்னார்.அவளை அழைத்து வந்தால் ஏதேனும் தொந்திரவு கொடுப்பாளே என ஜமீந்தார் பயப்பட, வள்ளலார் அச்சமில்லாமல் அழைத்து வரச் சொன்னார். வேலாயுத முதலியாரும் வள்ளல் பெருமான் சொன்னபடி செய்யுமாறு அறிவுரை கூற ஜமீந்தாரும் முதல் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார். அவள் கைகளில் இருந்த விலங்குகளை அகற்றும்படி வள்ளலார் கட்டளையிட அங்கனமே விலங்குகள் அகற்றப்பட்டன. சுவாமிகள் தம் கண்கள் மட்டுமின்றி உடல் முழுதும் கருணை பொங்கி வழிய அவளைப் பார்த்து, “தாயே சுகமா?” என்று ஒரே வார்த்தைதான் பேசினார். அவ்வளவுதான் அவள் ,”சுவாமி, சுவாமி, என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நான் இந்த க்ஷணம் ஓடிவிடுகிறேன்.” என்று துடிதுடித்துக்கொண்டு கூற, அவள் குரலோ ஆணைப் போன்ற கட்டைக்குரலாக இருந்தது. வள்ளல் பெருமான், “ஓடிப் போ, ஓடிப் போ, ஓடிப்போ!” என்று கூற, “போனேன், போனேன், போனேன்!” என்று கர்ணகடூரமான ஓலக்குரலில் கூறிக்கொண்டே அந்த ஓலம் வெகு தூரத்தில் போய்க் கரைந்தே போனது. வள்ளலார் பெரும் கருணை உள்ளத்தோடு அந்த அம்மையாருக்குத் திருநீறு அளித்து அதை நெற்றியில் இட்டுக்கொள்ளும்படி கூறி இனி எந்தத் துன்பமும் அவருக்கு வராது என உறுதியும் கூறினார். அந்த அம்மையாரும் இப்போது சாந்தமாய்க் காணப்பட்டார்.


மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த ஜமீந்தார் தம் இரண்டாவது மனைவியை அழைத்து வரச் செய்ய அதற்குள் அவள் தானாகவே அங்கே வந்து பெருமான் திருமுன்னர் நின்று வணங்க அவளிடமும் திருநீறு அளித்த பெருமான் அவளை திருநீற்றை இட்டுக்கொள்ளச் செய்து, உடல்நலம் எப்படி இருக்கிறது என விசார்ரிக்க, அவளோ பெருமானின் திவ்யக் கருணையால் தன் உடல் நலமாகவே உள்ளது என்றும் மஹோதரம் முற்றிலும் குணமாகிவிட்டது சென்றும் கூறி பெருமானை வணங்கிச் சென்றாள். பின்னர் பெருமான் பண்டாரியாரிடம் உயிர்ப்பலியைத் தடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கூறி, கடவுளின் பெயரால் நடைபெறும் இத்தகைய அக்கிரமங்களைத் தடுக்க வேண்டும் என்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னையும், பிதாவுமான ஈசன் தன் குழந்தைகளைத் தனக்கே பலி கொடுக்கச் சொல்லுவானா? என்றும் கேட்டார்.

மேலும் பூசாரிகள் பணத்தாசை பிடித்துப் பித்தலாட்டங்களில் இறங்குவதையும் சுட்டிக்காட்டி, ஆண்டவன் பெயரால் நடைபெறும் இத்தகைய அநியாயங்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்றும் கூறினார். ஜமீந்தாரும் வள்ளலாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தார். அதன் மேல் அங்கிருந்து கிளம்பிய வள்ளலார் வடலூர் தருமச் சாலைக்கு வந்து சேர்ந்தார். அவர் பேரில் வழக்கு ஒன்று தொடுக்கப் பட்டிருந்தது. அதற்காகக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்திற்குப் பெருமான் வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment