Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இலங்கை யாழ்ப்பாணத்திலே நல்லூர் என்னும் கிராமத்திலே, கார்காத்த வேளாளர் மரபில் பிறந்தவர் ஆறுமுக நாவலர் என அழைக்கப்பட்ட சிவத் தொண்டர். தம் பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாகப்பிறந்த இவர் இருபது வயதிற்குள்ளாகத் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றித் தமிழ்நாட்டிலும் சைவசமயப் பிரசாரங்களை மேற்கொண்டு சைவ சமயத்திற்காக அருந்தொண்டாற்றியும் வந்தார். தம் வாழ்நாட்களை அதற்கெனவே செலவிட்ட இவர், தில்லைச் சிதம்பரமே சைவர்களின் முக்கியமான கோயில் என்பதால் அங்கேயும் ஓர் பாடசாலையை நிறுவினார். சைவ சமயத்தை அன்றி வேறு சமயத்தைக் கண்ணெடுத்தும் பாராதவரான இவர் பல தமிழ் நூல்களை அச்சிற்பதிப்பித்த்தார் எனச் சொல்லப் படுகிறது. பழைமையான பல பாடல்களின் உரைகளைத் திருத்திப் புதுப்பித்து வெளியிட்டதோடல்லாமல், சிலவற்றிற்குப்புதிதாகவும் உரைகள் எழுதினார். இவர் வள்ளலாரின் சமகாலத்தவர். சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் வள்ளலாரின் திருஅருட்பாக்கள் பாடப்படுவதையும், அவற்றையும் திருமுறைகள் எனச் சொல்லப்படுவதையும் இவர் விரும்பினாரில்லை.திருமுறைகள் என்றால் அவை பன்னிரு திருமுறைகள் மட்டுமே. வள்ளலாரின் பாடல்கள் திருமுறை என்ற பெயரால் அழைக்கப்படக்கூடாது. மேலும் அவற்றை அருட்பா எனவும் அழைத்தல் தகாது. அவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்பதே அவர் கட்சி.மேலும் வள்ளலாரின் சர்வசமயசமரச சன்மார்க்கத்தினால் மக்கள் வேற்றுமதங்களுக்கு ஆதரவுகளை நல்கி மதம் மாற்றப்பட்டுவிடுவார்கள் என்றும், வேற்று மதத்தினருக்கு இது ஆதரவு அளிக்கும் விதமாய் உள்ளதென்றும் முழுமையாக நம்பினார். ஆகவே பலவழிகளிலும் வள்ளலாரை எதிர்த்து வந்த இவருக்கும், வள்ளலாருக்கும் வழக்கு ஏற்பட்டது. இந்த வழக்கு நாளடைவில் முற்றிப் போய் நீதிமன்றப்படிகளையும் அடைந்தது. வழக்கு தினம். வாதியான ஆறுமுக நாவலர் பிரதிவாதியான ராமலிங்க அடிகளையும், அவர் வகுத்துள்ள சன்மார்க்கக் கொள்கைகளையும் எதிர்த்து வழக்காடுகிறார் என்று தெரிந்து கொண்ட பொதுமக்கள் கூட்டம் நீதி மன்றத்தில் அலை மோதியது. வாதியான ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்துவிட்டார். நீதிபதியும் தம் ஆசனத்தில் வந்து அமர்ந்து விட்டார். வள்ளலார் சற்றே தாமதமாக வந்தார். அவரைக்கண்டதும் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்கத் தம்மையும் அறியாமல் நீதிபதியும், ஏன்? ஆறுமுக நாவலரும் கூடவே எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். நீதிபதி ஆறுமுக நாவலர் எழுந்து மரியாதை செய்வதையும் கவனித்துக்கொண்டார்.வழக்குத் தொடங்கியது. தம் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார் நாவலர். தாம் சிவத்தொண்டு செய்யும் சிவனடியார் எனவும், சைவ சமயத்தைப் பரப்பி வரும் தமக்கு வள்ளலாரின் இத்தகைய செயல்கள் மனதைப் புண்படுத்தி வருவதாயும், கூறினார் நாவலர். வள்ளலாரின் பாடல்களுக்கு அருட்பாக்கள் என்ற பெயரைச் சூட்டுவது தவறு என்றும் அவற்றிற்கு ராமலிங்கம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்ற பெயரே பொருத்தம் எனவும் கூறினார். வள்ளலார் கடைப்பிடிக்கும் மதமான சன்மார்க்கக் கொள்கைகளால் புறச் சமயத்தார் அதிகப் பலன் பெறுவார் என்றே தாம் எண்ணுவதாயும், இதனால் மதக் கலவரங்கள், மதமாற்றங்கள் நடைபெறும் என அஞ்சுவதாயும் கூறினார். இதன் பேரில் வள்ளலாரை நீதிபதி விசாரிக்கத் தொடங்கினார். வள்ளலார் எழுந்து நின்று தாம் பாடி வரும் பாடல்கள் அனைத்தும் இறைவன் அருளால் தம்முள்ளே இருந்து ஊறி வெளியே வரும் அருட்பாக்களே எனக் கூறிவிட்டுக் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்.“நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்

வரவெதிர்கொண்டவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே

தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர்தான் அடைதல் குறித்தே.”

தம் இனிய குரலால் மேற்கண்ட பாடலைப்பாடிய வள்ளலார், தாம் செய்த குற்றம் தான் என்னவென வினவினார். மக்களின் நல்வாழ்க்கைக்காகத் தாம் பாடிய இந்த அருட்பாக்கள் மக்கள் நல்வழியே செல்லவும் ஜீவகாருண்யத்தோடும், ஒழுக்கத்தோடும் சாதிசமயபேதமற்ற சன்மார்க்கவழியைப் பின்பற்றவுமே பயன்படும் எனவும், இது மக்களை நல்வழியில் தானே செலுத்துகிறது? என் கடன் மக்களுக்குப் பணி செய்து கிடப்பதுவே என்றும் இறைவன் ஆணையால் தாம் செய்யும் இந்தப் பணிக்குத் தமக்குக் கிடைத்த பரிசு இதுவோ என வேதனையுடன் கூறி மனம் மிகவும் வருந்தினார். மேலும்

வாதுபேசிய மனிதர்காள் ஒரு

வார்த்தை கேண்மின்கள், வந்துநும்

போதுபோவதன் முன்னரே அருட்

பொதுவிலே நடம் போற்றுவீர்

தீது பேசினீர் என்றிடாதுமைத்

திருவுளங்கொளும் காண்மினோ

சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்

சுற்றம் என்பது பற்றியே!” என்று அறை கூவல் விடுத்தார்.நீதிபதி சந்தோஷத்தை அடக்கமுடியாமல் தவித்த வண்ணம் ஆறுமுக நாவலரைப் பார்த்தார். வள்ளலார் மேலும், தாம் மக்களின் மூடப்பழக்கவழக்கங்களையே அகற்றப் பாடுபடுவதாயும். ஒழுக்கத்தோடும் ஜீவகாருண்யத்தோடும் வாழ்ந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்றே மக்களிடம் கூறி வருவதாயும், பொய் வேடம் போட்டுப் புனைந்து பாடிப் பிழைக்கவில்லை எனவும் கூறினார். மற்ற மதவாதிகளுக்கு எதிராகப் போரிடும்படி மக்களைத் தாம் ஒருபோதும் வற்புறுத்தியதில்லை என்றும் மெய்யுணர்வோடு ஆண்டவனை அடையவே தாம் பாடிவருவதாயும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி ஆறுமுக நாவலரிடம் இதற்கு அவர் பதில் என்ன என்று கேட்க, நாவலர் பதிலொன்றும் கூறமுடியாமல் தவித்தார்.நீதிபதி மேலும் நாவலரிடம், கடவுளுக்குப் பரத்துவம் சொல்லும் அனைவரும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றே கூறிவருவதை அவர் ஒப்புக்கொள்கிறாரா எனக் கேட்டார். நாவலரும் தமது சமய ஞானிகள் பலகாலமாக வற்புறுத்தி வரும் பேருண்மை இதுவே எனக் கூறி ஒத்துக்கொண்டார். அப்போது நீதிபதி அப்படிப் பார்த்தால் சைவக் குரவர்களான நால்வரைப் போலவே இறையருள் பெற்றே வள்ளல் பெருமானும் பாடல்களைப் பாடி வருவதாகவும் இல்லை எனில் இத்தகைய அற்புதமான பாடல்களை அவரால் பாட இயலாது என்றும் தாம் கருதுவதாய்க் கூறினார். மேலும் நீதிமன்றத்தினுள் வள்ளலார் நுழைகையில் நாவலரும் எழுந்திருந்து மரியாதை செய்தது ஏன் எனக் கேட்க நாவலருக்குப் பேச்சு எழவில்லை. பின்னர் வள்ளலாரைக் கண்டதுமே தம்மை மீறிய உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்கு மரியாதை கொடுத்ததாய் ஒப்புக்கொண்டார். உடனே நீதிபதி நாவலர் கூறியது போல் வள்ளலாரின் பாடல்கள் மருட்பாக்கள் என்றால் வழக்குத் தொடுத்த வாதியான நாவலரே எழுந்திருந்து பிரதிவாதிக்கு மரியாதை செய்திருக்க மாட்டார்; ஆகவே இவை அருட்பாக்கள் தாம் என்றே தாம் தீர்ப்பளிப்பதாய்க் கூறினார். அத்தோடு வழக்கும் முடிந்தது.

No comments:

Post a Comment