Thursday, September 29, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இந்த அருட்பெரும்சோதியான அகண்டத்தின் ஒளியானது ஆறடி ஒன்பதங்குல உயரமும், நான்கடி இரண்டங்குல அகலமும் உள்ள நிலைக்கண்ணாடியில் மாபெரும் பேரொளியாகப் பிரதிபலிப்பதையே ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் செய்து வரும் அருட்பெரும்சோதி தரிசனம் எனச் சொல்லப் படுகிறது. வள்ளலார் இதற்காகவே அந்தக் கண்ணாடியைச் சென்னையில் இருந்து தருவித்து மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக மாளிகையில் ஒரு மண்டலம் வழிபாட்டில் வைத்துவிட்டுப் பின்னர் சபையில் அதை நிறுவச் செய்தார். ஜோதியை நடுவில் அமைத்ததன் காரணம், இந்த அகண்டத்தின் ஒளியே ஞானமாகிய அருட்பெரும்சோதி. நம் மனமே நிலைக்கண்ணாடியாகும். மனத்தை மறைக்கும் மாயையே ஏழு திரைகள் ஆகும். ஜீவகாருண்யம், தோத்திரப் பாடல்கல் போன்றவற்றால் இந்த மனமாகிய கருங்கல் கரைந்து, பாறை உருகி, ஓட ஓட, இம்மாயைத் திரைகள் ஏழும் ஒவ்வொன்றாக விலக்கப்படும். மனம் தூய கண்ணாடியாய் விளங்க, அதன் மூலம் அருட்பெரும்சோதியின் தரிசனம் கிடைக்கப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம் என்பதே இதன் தத்துவம் ஆகும்.“நினைந்து நினைந்துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே

நிறைந்து நிறைந்தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு

நனைந்து நனைந்தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும் நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியஞ்சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.”இதுவே வள்ளலார் அமைத்த சத்திய ஞானசபையாகும். இதை நிறுவியதுமே வந்த முதல் தைமாதம் பதின்மூன்றாம் நாள் வியாழக்கிழமை தைப்பூச நன்னாளில் முதன் முதலாக வழிபாடு தொடங்கப் பட்டது. தமிழகத்தின் அனைத்துத் தொலைதூர நகரங்களில் எல்லாம் இதுவே பேச்சு. சுற்றுவட்டாரம் முழுதும் இந்த தரிசனத்திற்காகவே காத்துக்கிடந்தது. வடற்பெருவெளியும், சத்திய ஞானசபையும், பார்வதிபுரமும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த வருடம் பனி அதிகம் இருந்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூடியது. இதோ! நேரம் வந்துவிட்டது. கீழ் வானில் சூரியன் உதயம் ஆகும் அதே நேரம் மேல்வானில் சந்திரன் அஸ்தமனம் ஆகி இருவரும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அதிகாலை நேரம் ஆறுமணி. சபையினுள் கிழக்குச் சாளரத்தில் கட்டப்பட்டிருந்த காண்டாமணி ஓம், ஓம், ஓம் என ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது. அதன் எதிரொலி போல் சுற்றுவட்டார மரங்களின் கிள்ளைகள் இனிமையாகப் பாடல் இசைத்தன. சபையின் திருக்கதவம் திறக்கப்பட்டுக் கருப்புத் திரை தெரிந்தது. பின்னர் கருப்புத் திரை விலகியதை மாயை விலகியதாய்க் குறிப்பிட்டு க்ரியாசக்தியான நீலத்திரை தெரிந்தது. பின்னர் அதுவும் விலகி பராசக்தியான பச்சைத் திரை தெரிந்தது. அது விலக, இச்சாசக்தியான சிவப்புத் திரை தெரிந்து, பின்னர் அதுவும் விலகி ஞான சக்தியான மஞ்சள் திரை தெரிந்தது. ஞாசக்தியும் விலகி ஆதிசக்தியான வெள்ளைத் திரை தெரிந்தது. இப்படியே அனைத்துத் திரைகளும் விலகிக் கலப்புத் திரை தெரிந்தது.அப்போது சிற்சக்தி விலகியதாய் ஐதீகம். கலப்புத் திரை விலகியதுமே அருட்பெரும்சோதியை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து தாங்கள் பெற்ற பெரும்பேற்றை எண்ணி மகிழ்ந்து ஆடிப் பாடினார்கள். ஜோதியைக் குறித்த வழிபாட்டுப் பாடல்கள் பாடப்பட்டன. அனைவரும் மனமகிழ்வோடு தங்கள் இருப்பிடம் சென்றனர். சில நாட்களில் வள்ளலார் சித்திவளாக மாளிகை முகப்பில் நின்ற வண்ணம் பக்தர்களுக்கு அருளுரை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மீனவர் இருவர் வந்தனர். சுவாமிகளை வணங்கித் தம்மை மன்னிக்கும்படி வேண்டினர். விஷயம் என்னவென சுவாமிகள் கேட்க, இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற ஒரு நாள் சுவாமிகள் அவர்கள் இருவரையும் அழைத்து இந்தத் தொழிலை விடுமாறு கேட்டுக்கொண்டதை நினைவூட்டினார்கள். ஆனாலும் அவர்கள் கேட்காமல் வலைத்தொழிலுக்கே போய்க்கொண்டிருக்க, மீண்டும் அவர்களை அழைத்த அடிகளார், சிறுவலை வீசிச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துச் சிறு பொருளையே பெற முடிகிறது உங்களால். பெரும் பொருள் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பெரிய வலையை வீசுங்கள் எனக் கூற அவர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாத மீனவர்கள் இருவரும்பெரிய வலையைத் தந்து உதவுமாறு கேட்க, அன்பாகிய வலையையே தான் பெரிய வலை என்றதாகவும் அன்பு வலையை வீசினால் ஆண்டவன் அதற்குள் அகப்படுவான் என்று கூறியதாகவும் சொல்லவே மீனவர் இருவரும் ஏமாற்றம் அடைந்தனர்.அதன் பின்னர் அன்றைய தினத்தில் இருந்துஎத்தனை முறை போய் வலை வீசினாலும் மீன்கள் கிட்டாமல் வலைகள் அறுந்து இருவரும் துன்பம் அடைந்தனர். பல நாட்கள் இவ்வாறு சென்றபின்னரே சுவாமிகள் கூறியதன் உட்பொருள் புரிந்துகொண்டனர். ஆகவே சுவாமிகளின் அடியாராக மாறி அவரின் ஆசிகளைப் பெறவே வந்திருப்பதாய்க் கூறி வணங்கினர். அவர்களுக்கு ஆசிகள் கூறி வாழ்த்திய வள்ளலார் இவர்களுக்காக இறைவனிடம் முறையிட்டுத் தாம் அழுததைக் கூறினார். கூடி இருந்த மக்கள் கூட்டமும் அடியார் கூட்டமும் வள்ளலாரை வாழ்த்தி மகிழ்ந்தனர். பின்னர் ஓர் நாள் சரணாலய சுவாமிகளைச் சந்திக்க வேலாயுத முதலியார் வந்தார். அடிகளாரை எங்கே காணோம் என்று கேட்டார். இரண்டு நாட்கள் முன்னர் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு யோகத்தில் அமர்ந்த அடிகள் வெளியே வரவே இல்லை எனச் சரணாலய சுவாமிகள் கூற வேலாயுத முதலியாருக்குக் கவலை வந்தது. வள்ளலார் வரும்வரையிலும் இருவரும் சன்மார்க்கக் கொள்கைகள் குறித்த கலந்துரையாடலைச் செய்தனர். பின்னர் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி மூன்றாம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபத்திரண்டாம் தேதியில் சன்மார்க்கக்கொடியை வள்ளலார் ஏர்றினார்.பின்னர் அனைவரையும் நோக்கி வீண் பொழுது போக்காமல் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் நம்முடைய நிலையைக் குறித்து விசாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கூடிப் பேசிக்கொண்டு இருக்குமாறு கூறினார். ஆன்ம அறிவை விளக்கம் ஏதுமின்றி மறைத்துக்கொண்டிருக்கும் திரைகளில் ஒன்றாகிய பச்சைத் திரை நீங்கும் என்றும் அது விலகினால் மற்றத் திரைகள் சடுதியில் விலகும் எனவும் கூறினார். மேலும் அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை, தனிப்பெரும் கருணை என்னும் திருமந்திரத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டிருக்கும்படியும் கூறினார். இவ்வண்ணம் சாதனம் செய்து வந்தால் சாதனம் முதிர்ந்து முடிவான இன்பானுபவம் கிடைக்கும் என்றார். உடனே சரணாலயர் சன்மார்க்கக் கொடியின் பொருளையும் கூறும்படி கேட்க, வள்ளலார் அதையும் கூறலானார்.சன்மார்க்கக் கொடி யாதெனில் நம் உடலில் தொப்புள்கொடி முதல் புருவ மத்தி வரையிலும் உள்ள ஒரு நாடியின் நுனியில் புருவ மத்தியில் உட்புறத்தில் தொங்கும் சவ்வின் அடிப்புறம் வெள்ளை வர்ணமாகவும், மேற்புறம் மஞ்சள் வர்ணமாகவும் காட்சி அளிக்கும் என்றார். அந்தச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் உள்ளதாகவும், இக்கொடியை நாம் சாதாரணக்கண்களால் காண்பது அரிது எனவும், அனுபவத்தின் காரணமாகவே விளங்கும் என்றும் கூறினார். இந்த அடையாளங்களைக் கருத்தில் கொண்டே சன்மார்க்கக் கொடி கட்டப் பட்டதாகவும் கூறினார். அனைவரும் வள்ளலார் கூறிய விளக்கத்தில் மனம் மகிழ்ந்து அருட்பெரும்சோதி, அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை, தனிப்பெரும் கருணை என்ற மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தனர்.

1 comment:

  1. நன்றி அய்யா வள்ளலார் பெருமானை தரிசிப்பது எப்படி வழி கூறுங்கள்

    ReplyDelete