சோம்நாத் கோயில் பதினைந்து வருடங்கள் முன்னால் கடற்கரையில் இருந்து பல படிகள் மேலே ஏறிச் சென்று அடைய வேண்டிய ஒன்றாக இருந்தது. சுற்றிக் கட்டிடங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது. கடலைப் பார்த்தபடியும், அதற்கு எதிர்ப்பக்கமாயும் படிகள் இருந்தன. இப்போது அந்தப் படிகள் எல்லாம் மூடப் பட்டு கோயிலின் சுற்றுச் சுவர்கள் எல்லாம் உயர்த்தப் பட்டு அங்கங்கே தங்கி இளைப்பாற மண்டபங்கள், சிமெண்ட் பெஞ்சுகள் போடப் பட்டு கோயில் வளாகம் மிக அழகுடனும், கலைக் கண்ணோட்டத்துடனும் அமைக்கப் பட்டுள்ளது. தண்ணீர் குடிக்கத் தனி இடம், நடமாடும் கழிப்பறை வசதி, நாம் கொண்டு செல்லும் பொருட்களை வாங்கிக் கொண்டு லாக்கரில் வைத்துவிட்டு ரசீது தருவதற்கெனத் தனி கவுண்டர் எனப் பலவகை வசதிகளையும் உள்ளடக்கிக்கொண்டு உள்ளது. லாக்கரை நிர்வகிப்பது காவல்துறையினரே. காவல்துறையினர் மிகக் கவனத்துடனேயே பணி புரிகின்றனர். மிகக்கடுமையான சோதனைக்குப் பின்னரே உள்ளே நுழைய முடியும். உள்ளே நுழையும் முன்னர் நம்மிடம் உள்ள கைப்பை உட்பட, பணம் இருந்தாலும் பூட்டும் வசதியுடன் கூடிய லாக்கரில் வைத்துச் சாவியை நம்மிடம் கொடுக்கின்றனர். மொபைல் தொலைபேசி, தோல் பொருட்கள், காமிரா போன்றவற்றைக் கொடுத்துவிட்டே உள்ளே செல்லவேண்டும். உள்ளே உண்டியலில் பணம் போடவேண்டும் என விருப்பம் உள்ளவர்கள் முன்னாலேயே எடுத்து வைத்துக் கொள்ளுவது நல்லது.
கோயில் வளாகத்தில் எந்நேரமும் ருத்ரம் ஜபிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. பனிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் முக்கியமானவர் ஆன சோமநாதரின் ஜோதிமயமான பார்வை அங்கிருக்கும் மூலஸ்தானத்தில் இருந்து சற்றும் தடையில்லாமல் நேரே தென் துருவம் வரையிலும் போய் அடைவதாய்ச் சொல்லுகின்றனர். அதைக் குறிப்பிடும் தூண் ஒன்றும் அங்கே நிர்மாணிக்கப் பட்டுள்ளது. சோமநாதர் கோயிலின் வரலாறு விரிவாய் வரும். சாப்பாடு சாப்பிட முன்னால் அரசின் சுற்றுலாத் துறை ஓட்டல் ஒன்றிருக்கின்றது. அதிலும் சாப்பிடலாம். கோயிலிலும் அன்னதானம் உண்டு. ஆனால் மதியம் ஒருமணிக்கு மேல் ஆகும். அதைத் தவிரவும் கோயிலைச் சார்ந்த ட்ரஸ்டின் மூலம் குறைந்த விலையிலும் சாப்பாடு போடப் படுகின்றது. அது கோயில் வளாகத்துக்கு வெளியே உள்ள வீதியில் உள்ளது. குஜராத்தில் எங்கே போனாலும் மரக்கறி உணவு தான். ஆகவே தைரியமாய்ச் சாப்பிடலாம் என்றாலும் வெளியே சாப்பிடமுடியாத சிலநாட்களில் கோயிலில் உள்ள அர்ச்சகர்களைக் கேட்டால் அவர்கள் சரியாகச் சொல்லுவார்கள். சிலர் அவர்கள் வீடுகளிலேயே சாப்பாடும் போடுகின்றனர். நம்மால் முடிந்த பணத்தைக் கொடுக்கலாம்.
நாங்க சோம்நாத்தில் இருந்தப்போ லாலு வந்தார் என்னைப் பார்க்கனு சொன்னேனா? அதுக்கப்புறமா அங்கே இருந்து பேருந்தில், பேருந்தா அது? தனியார் பேருந்து, பதினைந்து வருஷம் முன்னாடியும் சோம்நாத்-துவாரகா, துவாரகா-சோம்நாத், வழித்தடத்தில் தனியார் பேருந்து தான் போயிட்டு இருந்தது. அப்போ பேருந்தெல்லாம் கொஞ்சம் உட்கார்ந்து போறாப்போல் இருந்தது. இப்போ சின்ன வானைப் பேருந்துனு சொல்லி, அதுக்கு டிக்கெட் 135ரூ?? சந்தேகமா இருக்கு, இருங்க, ஒரு தரம் கேட்டுட்டுச் சொல்றேன். வாங்கினாங்க. காலம்பர துவாரகாவில் ஏழு, எட்டு மணி அளவில் கிளம்பற பேருந்து, இங்கே சோம்நாத்துக்கு மதியம் ஒண்ணரை மணிக்கு வருது. அதே பேருந்து 2 மணிக்குக் கிளம்பி சாயந்திரமாய் துவாரகா போய்ச் சேரும்.
பதினைந்து வருஷத்துக்கு முன்னாலே எப்படி இருந்ததோ அப்படியே இப்போவும் கொஞ்சமும் மாறாமல் இருக்கு இதெல்லாம். இங்கே இன்னமும் அரசுப் பேருந்துகள் வர ஆரம்பிக்கலை. போகிறது இந்தச் சில தனியார் பேருந்துகளே. வழித்தடம் வழக்கம்போல் போக்குவரத்து இல்லாமல் அப்போ இருந்தாப் போலவே இப்போவும் இருக்கு. சொல்லப் போனால் நேரம் ஆக, ஆகக் கூட்டமே இல்லாத சாலையில் பயணிக்க ரொம்ப ஆனந்தமாய் இருந்தது. சாலைகள் அற்புதமாய்ப் போடப் பட்டுள்ளன. தங்க நாற்கரம் என முந்தைய அரசு ஆரம்பிச்சு வச்சதிலே இருந்து இப்போதைய அரசின் தொடர்ச்சி வரையிலும் குஜராத்தில் முழுமையாகப் பயன் படுத்தப் பட்டிருக்கின்றது. பேருந்து மட்டும் உட்காரக் கொஞ்சம் வசதியோடு இருந்திருக்கலாம். கால் நீட்ட முடியாமல், காலை துவாரகையில் இருந்து வந்தவங்க போட்டிருந்த குப்பைகள் சுத்தம் செய்யாமல், (சொன்னதுக்குக் கூட அந்தப் பேருந்து க்ளீனர் கண்டுக்கலைங்கறது வேறே விஷயம்)கையைத் தூக்க முடியாமல், அன்னிக்கு ராத்திரி துவாரகையில் தண்ணீரை எடுத்துக் குடிக்க முடியாமல் கை வலி கண்டது தான் மிச்சம்.
பேருந்து துவாரகை வரும் வழியில் போர்பந்தருக்குள் நுழையாமல் நகருக்கு வெளியேவே வந்து ஹர்சித்தி மாதா கோயிலில் நின்றது. போர்பந்தரின் சுதாமாவின் இருப்பிடமும் கோயிலும், காந்தி பிறந்த வீடும் முன்னால் கூட்டிச் சென்று கொண்டிருந்தனர். இப்போது அதற்குத் தடை விதித்திருக்கின்றனர். மற்றொரு விஷயம் இந்தப் பேருந்துகள் எல்லாம் உணவுக்காக நிற்கும் இடம். பேருந்து கிளம்பி ஒன்றரை மணி நேரத்தில் நின்றது தேநீருக்காக. ஆனால் அங்கே கழிப்பறை வசதிகளே இல்லை. மோட்டல் என்று பேர்தான். தேநீர் மட்டும் குடிக்கலாம், உங்களுக்குப் பிடிச்சதுனால், பரவாயில்லைனால். நாங்க இறங்கவே இல்லை. ஆனால் அரசுப் பேருந்துகள் நிற்கவேண்டிய குறிப்பிட்ட ஊரில் பேருந்து நிலையத்திலேயே நிற்கின்றன. அது தான் வசதியாவும் இருக்கு, தேநீர் குடிக்கிறதுனாலும் சரி, உட்கார்ந்து செல்லவும். இந்த வழித்தடத்திலேயும் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி கொடுக்கவேண்டும். இதை ஏன் இன்னும் மோடி விட்டு வச்சிருக்கார்னு புரியலை. வரும் வழியில் உள்ள கோய்லா மலையின் மேல் இருக்கும் ஹர்சித்தி மாதா விக்கிரமாதித்தனின் மருமகன் வழிபட்ட அம்மன் எனச் சொல்கின்றனர். சில, பல படிகள் ஏறிச் சென்று போய்ப் பார்க்கவேண்டும். முக்கியச் சாலையில் இருந்து பிரியும் சாலையில் வந்து கோயில் வாயிலிலேயே பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன. அரை மணி நேரம் தருகின்றனர் மேலே போய்த் தரிசித்துவிட்டு வருவதற்கு.
ஹர்சித்தி மாதாவின் கதை அடுத்து வரும்.
Friday, March 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு மேடம். உங்க ஏதோவொறு பதிவுல வேற ஒரு டூர் பத்தி எழுதினீங்க.Rail cum Bus?அந்த ரயில்லேயே பொருட்கள வச்சிட்டு ஊர் சுத்தலாம்னு.நான் மறுமொழி கூடப் போட்டேன்.
ReplyDeleteஅதோட தொடர்ச்சி எங்கே?தேடினேன்
கிடைக்கவேயில்லை.
வாங்க ரவிசங்கர், ட்ராவல் டைம்ஸிலே போனது பத்தி எழுதினேன். ஹிஹிஹி, அதை முடிக்கலை, பண்டரிபுரம் போனது. அதுக்குள்ளே அதுக்கப்புறம், அப்படினு நிறையப் போயிட்டு வந்தேனா?? எதை எழுதறதுனு புரியலை, அதை முடிச்சுட்டு உங்களைக் கூப்பிட நினைச்சேன், நீங்களே வந்து மானத்தை வாங்கியாச்சு! தலைக்கு மேலே போயாச்சு? இனிமே என்ன!
ReplyDelete:))))))))))))))))))))))))
பல வருடங்களுக்கு முன்பு சோம்நாத் சென்றிருக்கிறேன். உங்களது கட்டுரையை படித்தவுடன் பழைய நினைவுகள் வந்தன. சோம்நாத் அருகில் விராவல் சென்று வந்தீர்களா? அங்கேதான் கிருஷ்ணரின் காலில் வேடன் அம்பு பாய்ச்சி அவரின் அவதாரம் முடிவடைந்தது (உங்களுக்கு தெரியாததா என்ன?).
ReplyDeleteசோம்நாத்திலிருந்து துவாரகாவுக்கு செல்லும் பேருந்தில் நானும் சென்றிருக்கிறேன். இன்னமும் எதுவுமே மாறவில்லை போலிருக்கிறது.
இன்னும் இந்த பக்கம் எல்லாம் போகவில்லை,சில படங்களையாவது ஏற்றியிருக்கலாமே?
ReplyDeleteவாங்க சென்னைத் தமிழரே, இன்னும் எதுவுமே மாறலை, அங்கே விலைவாசி ஏற்றங்கள் தவிர,
ReplyDeleteவாங்க குமார், எப்போப் போகப் போறீங்க? படங்கள் அப்லோடு ஆகலை, அதான் போட முடியலை, எக்ஸ்ப்ளோரர் திறந்தே பத்து நாள் ஆச்சு, நெருப்பு நரியிலே தான் வேலை. மூன்று நாட்களுக்கு 500 ரூக்கு மேலே ஆகி வயித்தெரிச்சல் கொட்டிக்குதே நெருப்பு நரி, அதையும் என்னனு பார்க்கணும், அதான் இணைய நேரமும் குறைச்சிருக்கேன். வேலையும் இருக்கு கொஞ்சம். :(((((((