Tuesday, March 10, 2009

பரோடா திரும்பும்போது

துவாரகை பற்றிய பதிவுகளை ஒரு இடத்திலும், சோம்நாத் பற்றிய பதிவுகளை இங்கேயும் போடணும்னு தான் எண்ணம். ஆனால் அங்கே கண்ணனுக்காக எல்லாரும் காத்திருக்காங்க. அதனால் துவாரகையை அவசரம் அவசரமா முடிக்கணும் போலிருக்கு. சோம்நாத் பற்றிக் கொஞ்சம் விரிவாயே எழுதலாம்னு எண்ணம். என்னிடம் இருக்கும் தகவல்கள் தவிரவும், பல்வேறு புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் சேகரித்துக் கொண்டு எழுதணும். துவாரகையில் தரிசனம் நல்லபடியா முடிஞ்சு, பேட் துவாரகா போயிட்டு வந்து, பின்னர் அன்று மாலையே ஜாம்நகர் கிளம்பினோம். நண்பர்கள் யாருக்கும் நாங்கள் வந்திருக்கிறது தெரியாது. ஜாம்நகரில் சொன்னால் அப்புறம் 2,3 நாட்கள் ஆகும். ஆகவே யாரிடமும் சொல்லலை. வழக்கம்போல் ஜாம்நகருக்கும் ட்ராவல்ஸ் நடத்தும் தனியார் பேருந்து தான். முன்னாலே ஒரு அரசுப் பேருந்து போய்க் கொண்டிருந்தது. இப்போ போகலைனு சொல்றாங்க. ஆனாலும் இந்தத் தனியார் பேருந்து கொஞ்சம் வசதி கம்மிதான். முன்னாலே டிக்கெட் எடுத்தால் தான் அவங்க பேருந்து கிளம்பும்போது சொல்லி உட்கார இடம் கிடைக்கும். எங்களுக்கு அது தெரியாமல் பேருந்து வரட்டும்னு காத்திருந்தோம். அப்புறமா விஷயம் புரிஞ்சு டிக்கெட் வாங்கினோம்.

வரும் வழியிலேயே எஸ்ஸார், ரிலயன்ஸ் இவர்களின் தொழில் கூடங்களைக் காண முடிந்தது. நகருக்கு வெளியே அமைத்திருக்கின்றனர். தொழிலாளர்கள் குடியிருப்பு, அதிகாரிகள் குடியிருப்பு என அனைத்தும் திட்டமிடப் பட்டு அமைக்கப் பட்டு அனைத்து வசதிகளும் செய்யப் பட்டு இருக்கின்றது. ஒரே ஒளி வெள்ளம் தான். அவ்வளவு ஜகஜ்ஜோதியாய் அங்கே பார்த்துட்டு, இங்கே தமிழ்நாட்டுக்கு இருட்டில் வரணுமேனு கொஞ்சம் எரிச்சலாய்க் கூட வந்தது. தண்ணீருக்குப் பதினைந்து வருஷம் முன்னாலேயே வசதிகள் செய்திருப்பாங்க. தெருக்குழாய்களில், ஆழ்துளைக் கிணறுகளில் என்று தண்ணீர் விநியோகம் செய்யப் படும். இப்போக் கேட்கணுமா? என்றாலும் நம்ம ஊர் மாதிரிக் குழாயடிச் சண்டை எல்லாம் பார்க்க முடியாது. கொஞ்சம் அமைதியான பகுதி இந்த செளராஷ்டிரா பகுதியே. ஜாம் நகர் நெருங்க, நெருங்க இனம் புரியாத பரபரப்பு. ஊர் எப்படி இருக்கும்? இத்தனை வருஷங்களில் மாறிப் போயிருக்குமோ? பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்திருக்கும். மரங்கள், செடி, கொடிகள், பூங்காக்கள் எல்லாம் இருக்குமோ இல்லையோ?

பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் வெளியேவே இறக்கி விட்டாங்க. அங்கிருந்து ஒர் ஆட்டோ வைத்துக் கொண்டே ரயில் நிலையம் செல்லவேண்டும். எங்களுக்கு பரோடோ செல்ல செளராஷ்டிரா மெயிலில் போர்பந்தர்- மும்பை செல்லும் வண்டியில் முன் பதிவு செய்யப் பட்டிருந்தது. ஆட்டோவெல்லாம் நாம புதுசுனு கூடக் கேட்கும் வழக்கமெல்லாம் அங்கே கிடையாது. ஏற்கெனவே எவ்வளவு கேட்பாங்கனு உள்ளூர்க்காரங்க கிட்டே கேட்டு வச்சுக்குவோம். அவங்க சொல்றதும், இவங்க கேட்கிறதும் அநேகமாய் ஒரே மாதிரியாவே இருக்கும். சில சமயம் அதிர்ச்சி தரும்படி குறைச்ச கட்டணத்துக்கும் வருவாங்க. மீட்டர்னு சொல்லிட்டால், மீட்டர் தான். மீட்டர் கட்டணத்துக்கு மேல் ஒரு பைசா கூட வாங்கறதில்லை. மீட்டரில் 25ரூ காட்டி, நாம் கொடுக்கும்போது முப்பது ரூபாய்கள் கொடுத்தோமானால் மிச்சம் ஐந்து ரூபாய் திரும்ப வந்துடும். அதுக்கு நான் காரண்டி, ப்ரீத்தி மிக்ஸி விளம்பரத்திலே சொல்றாப் போல. கிட்ட இருக்கும் இடத்துக்குப் பத்து ரூபாய் தான் வாங்கறாங்க. வர மாட்டேன்னு சொல்றதும் இல்லை. இது தமிழ்நாட்டை விட்டால் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், டெல்லி, உத்தராஞ்சல் போன்ற பல மாநிலங்களிலும் காண முடியும். சென்னையில் தான் ஆட்டோக்காரங்களின் அதிகப் படியான ஆசை. ஏன் என்று புரியலை.

மேலும் அங்கே எல்லாம் tariff rate sheet, auto driver license renewal date, auto driver id card with photo, last change of tyre என்று எல்லாமே டிரைவர் சீட்டுக்கு முன்னால் ஒட்டப் பட்டு நாம் பார்க்கும்படி இருக்கும். ஆகவே மீட்டரின் தொகையோடு டாரிஃப் ரேட்டையும் நாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். இது அங்கே எல்லாம் ஒரு கட்டாயமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. ஒரு ஆட்டோ பிடிச்சு ரயில் நிலையம் போனோம். வழியெங்கும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது ஜாம்நகர். ஆட்டோ டிரைவரிடம் கேட்டோம். நர்மதா தண்ணீர் ராஜ்கோட் வரை வந்திருப்பதாயும், மேலிடத்தின் தொந்திரவு காரணமாய் ஜாம்நகர், துவாரகை போன்ற இடங்களுக்கு இன்னும் வரலை என்றும், என்றாலும் அதையும் தீர்த்து வைத்துத் தண்ணீரை இங்கேயும் கொண்டு வர முழு முயற்சி எடுக்கப் படுவதாயும் சொன்னார். எங்கேயும் கட்சிக் கொடிகளோ, முதல்மந்திரிக்கு பானரோ, கட் அவுட்டோ காண முடியவில்லை. எப்போவுமே நகரம் சுத்தமாய் இருக்கும். அதே போல் இப்போதும் சுத்தமாய் இருந்தது.

ஜாம்நகரில் முக்கியமாய்ச் சொல்லப் படுவது அதன் சுடுகாடு. பிறந்த பச்சைக் குழந்தைகளைக் கூட எடுத்துக் கொண்டு பிக்னிக் வருவது போல் மக்கள் வருவார்கள் அங்கே. அவ்வளவு நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டு செல்லும் வழி, திரும்பி வரும் வழி எங்கும் ராமாயண, மஹாபாரதக் காட்சிகள், கருட புராணக் காட்சிகள் எனச் சிற்பங்கள், ஓவியங்கள் வரையப் பட்டு பூங்காக்கள் நிர்மாணிக்கப் பட்டு எரியூட்டும் இடம் வரையில் அழகான பாதைகள் போடப் பட்டு, எரியூட்டும் இடமும் பார்த்தால் மனதுக்கு அச்சம் தோன்றாத வகையில் இருக்கும். நகராட்சி நிர்வகிக்கும் இதற்குக் கட்டணமும் அதிகம் வாங்குவதில்லை. மேலும் இறந்தவர்களை எடுத்துச் செல்லும்போது, "சத்ய ஹை, ராம், ராம்" என்ற பேச்சைத் தவிர வேறு பேச்சும் இருக்காது. அப்போது முதல் அமைச்சரே வந்தாலும் அவர் வாகனம் இந்த ஊர்வலத்தைத் தாண்டி முன்னால் செல்லாது. நின்று இறந்தவர்களை எடுத்துச் செல்லும் ஊர்வலம் சென்ற பின்னரே வண்டிகள் மெதுவாய் அதன் பின்னர் செல்லும். முன்னால் கடந்து எந்த வாகனமும் செல்லாது. எதிர்ப்புறம் வரும் வாகனங்கள் அந்த, அந்த இடத்திலேயே நின்று விடும். ஊர்வலம் கடந்த பின்னரே அவர்கள் இந்தப் பக்கம் வருவார்கள். இதை ஒரு கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர். அநேகமாய் வட மாநிலங்கள் எல்லாவற்றிலும் இம்மாதிரியான ஒரு பழக்கத்தைக் காண முடியும்.

3 comments:

 1. ஹும்!
  எங்கே இந்த மாதிரி ஒரு கலாசாரத்தை இங்கே பாக்கப்போறோம்?

  ReplyDelete
 2. இங்கே பார்க்க முடியாது தான் திவா. ஆனால் இந்தியாவிலே இன்னும் இருக்கேனு சந்தோஷப்பட்டுக்கலாம்.

  ReplyDelete
 3. படிக்கும் போதே போய் பார்க்க ஆசையாய் உள்ளது

  ReplyDelete