Thursday, March 26, 2009

தேடலும், பயணமும்!

இலக்கியம் படைக்க வா எனத் தோழி ஒருத்தியின் அழைப்பு. கற்பனையே வரண்டு விட்டதோ என்று தோன்றும்போது எங்கே இருந்து இலக்கியம் படைப்பது? நிஜம் அப்படி முகத்தில் ஓங்கி அறைகின்றதே! அதிலும் சில நேரங்களில் முரண்பாடுகள்??? கடல் அலைபோல் திரும்பத் திரும்ப வந்து மோதும் நினைவலைகள். ஏன் இப்படி? என் இப்படி? எனப் பரிதவிக்கும் மனம். தூக்கமில்லா இரவுகள்! மனதில் பாரமாய் அழுத்தும் எண்ண ஓட்டங்கள்.அத்தனையையும் எழுத முடியுமா? மனித வாழ்வில் தினம் நாம் காணும் மனிதர்களின் குணநலன்கள். வானவில்லைப் போல் ஜொலிக்கும் நபர்கள், இருண்ட வானம்போல் தெரியும் எதிர்காலம்! அதில் எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று! வாழ்க்கையின் நிஜங்களை எதிர்கொண்டு செல்லுவதை எழுதினாலே இலக்கியமாகிவிடும். இன்றைய யதார்த்தம் தானே நாளைய இலக்கியமாய் மாறுகின்றது? அந்த யதார்த்தத்தையே எழுத முடியலை. நான் என்னத்தை இலக்கியம் படைக்கிறது? எதுனு இலக்கு புரியாமல் ஓடுபவர்களைப் பார்த்து அலுத்துப் போய் விட்டது மனமும், உடலும். எனக்கான தேடல் இல்லை இப்போது. இதுதான் என்ற முடிவுக்கு வந்தாச்சு. அந்தப் பாதையிலேயே தொடர்ந்து செல்லவேண்டும். அதுக்கு இறைவன் அருள் புரியவேண்டும். முரண்பாடுகளையும், இடர்களையும் தாங்கும் வல்லமையைக் கொடுக்கவேண்டும். இத்தனையிலும் அலுக்காத ஒன்று என் ஜன்னலுக்கு வெளியே கேட்கும் பறவைகளின் வித, விதமான ஆனந்தக் கூக்குரல் தான்.

காலை எழுந்திருக்கும்போதே குயில் கூவித் துயில் எழுப்பினால் அதுக்கு அப்புறமாய் ஒவ்வொன்றாய்க் குரல் கொடுக்கும். சுமார் ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை வித, விதமான ஆனந்தக் கூச்சல்கள். அணிலின் வெடுக் வெடுக் எனக் கூப்பாடு. தவிட்டுக் குருவியின் கீச் கீச் சத்தம். காக்கைகள் விரட்டும் குயில் குஞ்சின் அபய ஓலம். மைனாக்களின் சண்டைகள், புறாக்களின் ஹூங்காரம், கிளிகளின் கொஞ்சல்கள், எங்கிருந்தோ கேட்கும் ஆண்குயிலின் இனிய கீதம், அதுக்குத் துணை போகும் எதிர்ப்பாட்டு. இத்தனையும் இல்லாமல் அமைதியாக இருந்தால் மனசு கேட்காமல் என்னனு பார்க்கத் தோணும். அதே ஒரு பூனையோ அல்லது பாம்போ மரத்தில் ஏறிவிட்டால் அவை எல்லாம் போடும் அபயக் கூச்சல் இருக்கே! அப்பப்பா! இத்தனை கஷ்டத்திற்கு நடுவிலும் அவை கவலையே இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனவே! எல்லா செளகரியமும் இருந்தும் நாம கஷ்டம், கஷ்டம் னு சொல்லிக்கிறோமே! இறைவனுக்கு நன்றி.

வல்லமை தாராயோ பராசக்தி !!!!!

4 comments:

 1. //அப்பப்பா! இத்தனை கஷ்டத்திற்கு நடுவிலும் அவை கவலையே இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றனவே! எல்லா செளகரியமும் இருந்தும் நாம கஷ்டம், கஷ்டம் னு சொல்லிக்கிறோமே!//

  ஆஹா!
  அதெல்லாம் அப்போதப்போதைக்கு உயிர் வாழுது. நாமோ கடந்த காலத்திலேயோ எதிர்காலத்திலேயோ எப்பவும் இருக்கோம். அதான்!

  ReplyDelete
 2. //ஆஹா!
  அதெல்லாம் அப்போதப்போதைக்கு உயிர் வாழுது. நாமோ கடந்த காலத்திலேயோ எதிர்காலத்திலேயோ எப்பவும் இருக்கோம். அதான்!//

  உண்மைதான், இதோ ஆனைக்குட்டி குதிக்கலையேனு தான் இன்னம் மனசு நினைக்குது. குதிக்காட்டி என்னனு தோணலை! :(

  ReplyDelete
 3. ஷோக்கா சொல்லி இருக்கீங்க!

  ReplyDelete
 4. வாங்க புலி, கரெக்டா இந்த விலாசத்துக்கு வரீங்க, நன்றிப்பா! ஆனால் இருக்கும் இடம் தான் தெரியலை, பதுங்கி இருக்கீங்க போல! :))))))))

  ReplyDelete