இந்தக் கோயில் கோய்லா மலையின் அடிவாரத்திலும், மலையின் மேலும் உள்ளது. மலையின் மேல் உள்ளது மிகப் பழமையான கோயில். அம்பிகா மாதா, கல்கி மாதா எனவும் அழைக்கப் படுகின்றாள். ஆனால் உள்ளூர் மக்கள் ஹர்சித்தி மாதா எனவே அழைக்கின்றனர். அம்மனிடம் நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்தையும் தருவாள் என்ற அர்த்தத்திலும், சகல சித்திகளையும் அருளுவாள் என்ற ஞான நோக்கிலும் இந்தப்பெயர் ஏற்பட்டது. மலைமேல் உள்ளது பழங்காலக் கோயில். சாளுக்கியப்பாணியில் கட்டப் பட்டதாய்ச் சொல்கின்றனர். கீழே உள்ள கோயில் சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கின்றது. கோயிலின் வடக்கே உள்ள நெருப்புக் குண்டத்தில் தான் மினால்பூர் அரசன் ப்ரபாத்சென்னை, அன்னை தினமும் வாட்டித் தின்றாள் எனச் சொல்லப் படுகின்றது.
ஆஹா, இது என்ன கதை? அம்மனாவது? நர மாமிசம் சாப்பிடறதாவது? அந்த அரசன் என்ன ரொட்டியா? வாட்டிச் சாப்பிட? என்று கேட்கிறவர்களுக்கு ஒரு கர்ணபரம்பரைக் கதை தயாராய் உள்ளது. 2,000 வருடங்கள் முன்னால் எனச் சொல்கின்றனர். அதாவது விக்கிரமாதித்தன் ஆட்சியின் போது நடந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. விக்கிரமாதித்தனும் வரப் போறானே இந்தக் கதையில்! அதான். சாவ்டா என்னும் அரச குலத்தினர் ஆட்சி செய்த நாட்டின் தலை நகர் மினால்பூர், அரசன் ப்ரபாத்சென் சாவ்டா ஆவான். இவன் பேரரசனும் ஒரு சகாப்தமே ஆரம்பிக்கக் காரணமாயும் இருந்த விக்கிரமாதித்தனுக்குச் சகோதர முறை எனச் சொல்கின்றனர்.
ப்ரபாத்சென்னுக்கு ஏழு மனைவிகள் இருந்தனராம். ஒவ்வொரு வருடமும் நவராத்திரி சமயம் ஏழு மனைவியரும் கோயல் மலையின் மேல் உள்ள ஜகதம்பா மாதாவை வணங்கி வழிபாடுகள் செய்துவிட்டு வருவார்கள். மன்னனும் கோயிலுக்கு நிறைய நிவந்தங்கள் அளித்ததோடு அல்லாமல், நவராத்திரியின் போது கர்பா விழாவுக்கும் ஏற்பாடுகள் செய்தான். இந்த கர்பா ராஸ் ஆட்டத்தில் மன்னனின் ஏழு மனைவியரும் ஆடிக் கொண்டிருந்தனர் ஒரு நவராத்திரி சமயத்தில். அப்போது மலையின் மேல் குடி கொண்டிருந்த அம்மனுக்கும் இந்த ராஸ் ஆட்டத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்ற அங்கே தோன்றினாள் ஒரு மிக அழகிய இளம்பெண். வைர, வைடூரியங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு வந்து தானும் ஆட ஆரம்பித்தாள் அன்னை.
உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கு யாரோ ஒரு அழகிய பெண் புதிதாக வந்து ஆட்டத்தில் சேர்ந்து கொண்டது புரிய வர உற்றுக் கவனித்தான். மங்கையின் அழகையும், ஆட்டத்தையும் கண்ட மன்னன் மனது மங்கையின் பால் சென்றது. ஒரு மனைவிக்கு ஏழு மனைவியர் இருந்தும் மன்னன் புதியதாய் வந்த இளம்பெண்ணிடமே நாட்டம் கொண்டான். ஆசை மூண்டது மனதில். கர்பா ராஸ் முடிந்து அழகி மலை ஏறத் துவங்கினாள். மன்னன் ரகசியமாய்த் தொடரத் தொடங்கினான். லோகமாதாவை ஏமாற்ற முடியுமா? அன்னைக்குத் தெரிந்து போக அவனுக்குச் சாபம் கொடுத்தாள்:"ஒவ்வொரு இரவும் மலை ஏறி நீ இங்கே வந்து எனக்கு உயிரோடு உணவாகவேண்டும். மறுநாள் காலை உன்னை நான் உயிர்ப்பிப்பேன். மீண்டும் இரவில் உன்னை நெருப்பில் இட்டு வாட்டித் தின்பேன்." என்று சாபம் கொடுக்க, அன்னையின் ஆணையை மீற முடியாத மன்னன் ஒவ்வொரு நாளும் அங்கே வர, அன்னையால் ஒவ்வொரு நாளும் இறந்து, இறந்து உயிர் பிழைக்க, அவன் உடல் நிலை மிக மிக மோசம் ஆனது.
அப்போது அவனுடைய தாய்வழிச் சகோதரன் ஆன வீர விக்கிரமாதித்தன் துவாரகையைக் கண்டு வழிபாடுகள் நடத்த வந்தவன், மன்னன் அரண்மனையில் சில நாட்கள் தங்க இரவு நாடகத்தை ஒளிந்திருந்து பார்த்துக் கண்டு பிடித்து விடுகின்றான். காளியின் பக்தன் ஆன விக்கிரமாதித்தன் காளியின் மனதை வெல்லத் தன்னால் முடியும் என நம்பிக்கையுடன் அன்றிரவு, ப்ரபாத்சென்னைப் போகவேண்டாம் எனச் சொல்லிவிட்டு, அவனிடத்தில் தானே செல்கின்றான். வந்தவன் ப்ரபாத்சென் இல்லை தன் பக்தனும், தன் மேல் அளவிடமுடியாத பக்தி கொண்டவனும் ஆன விக்கிரமாதித்தன் எனப் புரிந்து கொண்ட அன்னை அவனுக்கு வரமளிக்க விரும்பினாள். முதல் வரமாய்த் தன்னுடைய சகோதரனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டான் விக்கிரமாதித்தன். இரண்டாவது வரமாய் அன்னையைத் தன்னுடன் உஜ்ஜயினி வந்து அங்கே குடி கொள்ளக் கேட்கின்றான். சம்மதிக்கும் அன்னையைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றான் விக்கிரமாதித்தன். ஆனால் செல்லும் போது அன்னை இட்ட கட்டளையை மறந்து உஜ்ஜயின் வரும் முன்னரே ஷிப்ரா நதிக்கரையில் விக்கிரமாதித்தன் திரும்பிப் பார்க்க அன்னை அங்கே நின்று விடுகின்றாள். அன்றிலிருந்து அன்னை அங்கேயே நின்றுவிட்டதாகச் சொல்கின்றனர். என்றாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் இரவில் அன்னை ஷிப்ரா நதிக்கரையில் உஜ்ஜயினி நகரின் வெளியே சென்று இருப்பதாயும், காலை திரும்பி கோய்லா மலைக்கு வந்து இங்கே இருப்பதாயும் சொல்கின்றனர்.
ஆகவே இந்தக் கோயிலில் இரவு ஆவதற்குள்ளே தரிசனம் செய்யவேண்டும்.. நாங்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். பேருந்தும் கிளம்பி துவாரகையை நோக்கிச் சென்றது.
கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்துவாரகை பற்றிய பதிவுகளைப் பார்க்கவும்.
Sunday, March 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment