Wednesday, March 23, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை 2

சென்னையிலே பெரிய சகோதரர் ஆன சபாபதி அவர்கள் தமிழில் இலக்கியம் படித்து வந்தார். அதோடு இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஆர்வமும் உள்ள பெரிய மனிதர்களின் பழக்கமும் ஏற்பட்டது. கூடவே சிறு வயதுக் குழந்தைகளுக்கு ஆரம்பத் தமிழும் கற்றுக் கொடுத்துவந்தார். இதன் மூலம் கிடைத்த வருமானத்தில் கொஞ்சம் சிரமத்துடனேயே குடும்பம் நடந்தது. என்றாலும் நிம்மதியுடனும், ஆநந்தமாகவுமே வாழ்ந்தனர். ராமலிங்க அடிகளுக்கு அப்போது ஐந்து வயது நிரம்பி இருந்தது. தன்னுடைய சின்னத் தம்பிக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்துடன் சகோதரர் சபாபதி அடிப்படைத் தமிழ் இலக்கணமும், தமிழ் இலக்கியமும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ராமலிங்கத்திற்குப் படிப்பில் ஆர்வம் இருப்பதாய்த் தெரியவில்லை. நாளாக ஆகச் சரியாகும் என நினைத்த சகோதரர் தன் முயற்சியை விடவில்லை. ராமலிங்கமோ, தமிழ் கற்றுக் கொள்வதை விட அங்கே இருந்த கந்தகோட்டத்து முருகன் பேரில் தீராக் காதல் கொண்டார். அடிக்கடி அங்கே சென்றுவிடுவார். முருகனிடம் என்ன பிரார்த்திப்பாரோ. பிரார்த்தனைகள், வழிபாட்டுப் பாடல்கள் பாடியவண்ணம் இருப்பார். தமையனாரோ, சொந்தத் தமையனிடம் தம்பி எடுத்துக் கொள்ளும் சலுகை என நினைத்து, மூன்றாவது மனிதர் யாராவது சொல்லிக் கொடுத்தால் சரியாகும் என்று எண்ணினார்.தான் கற்றுக் கொண்டிருந்த தமிழாசிரியரையே தம்பிக்கும் சொல்லிக் கொடுக்க வைத்தார். அவரும் தன்னால் இயன்ற அளவிற்கு முயன்று ராமலிங்கத்துக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். ஓரளவுக்கு வெற்றி பெற்றார் எனினும் ராமலிங்கம் கந்தகோட்டம் செல்லுவதையோ, வழிபாட்டுப்பாடல்கள் பாடுவதையோ, அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து போவதையோ நிறுத்தவில்லை. பாடும்போது ராமலிங்கத்தின் குரலினிமை அனைவரையும் கவர்ந்தது. இதைக் கேள்விப்பட்ட தமிழாசிரியர் அந்தப் பாடல்களைத் தாமும் கேட்க ஆசைகொண்டு, அவற்றைப் பாடும்படி சொல்லித் தானும் கேட்டு அறிந்தார். பாடல்களைக் கேட்ட தமிழாசிரியர் அவற்றின் நேர்த்தியையும், உள்ளார்ந்த பக்தியையும் கண்டு வியந்து, தமிழிலக்கணத்தில் தேர்ந்தவர்களாலேயே தொடமுடியாத இலக்கண நெறியுடனும், அதையும் தாண்டிய பக்தி உணர்வுடனும் பாடல்கள் இருக்கிறதைக் கண்டு வியந்து, இது கடவுளின் பரிசு, இந்தக் குழந்தையும் இறைவன் அளித்த பரிசு என வியந்து பாராட்டினார்.இத்தனை அருமையாகப் பாடல்கள் தானே இயற்றிப் பாடும் வல்லமை பெற்றவனுக்குத் தான் தமிழ் சொல்லிக் கொடுப்பதா? நம்மைவிடவும் இவன் தமிழறிந்தவனாய் உள்ளான் எனச் சொல்லி வியந்தார். என்றாலும் ராமலிங்கத்தைப் பள்ளியில் சேர்க்க அனைவரும் முயன்றனர். அந்த முயற்சியும் தோற்றது. சபாபதி அவர்களுக்குத் தம்பியின் நிலைமையையும், அவன் எதிர்காலத்தையும் நினைத்துக் கவலை அதிகம் கொண்டு, மிரட்டலின் மூலமும், பயமுறுத்தியும் தம்பியை வழிக்குக் கொண்டுவர முனைந்தார். தம்பிக்கு உணவும், உடையும் அளிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேற்றுவதாய்ப் பயமுறுத்தினார். ஆனாலும் எந்தப்பலனும் இல்லை. அவரின் அண்ணியார் இந்தச் சிறுவனிடம் மிகவும் பாசம் கொண்டு தன் கணவனுக்கும் தெரியாமல் அவனுக்கு உணவும், உடையும் அளித்துப் பாதுகாத்தார். இதனால் எல்லாம் அயராமல் ராமலிங்கம் தன் தெய்வீகப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அவர் உறுதி மேலும் பலப்பட்டது. உள் மனதில் கடவுளைக் கண்டு மனதிற்குள்ளேயே அவற்றிற்கு வழிபாடுகள் செய்யும் அளவிற்கு முன்னேறினார்.என்றாலும் அண்ணியார் தன் மைத்துனரிடம் தன் கணவனுக்காக, அவர் ஆசையை நிறைவேற்றும்படி வேண்டினார். இது வரையிலும் ராமலிங்கம் அநுபவித்து வந்த துன்பங்கள் தீர்ந்து போகும் என்றும், சுகமான, சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்றும், குடும்பத்தில் அனைவரும் மகிழ்வார்கள் என்றும் வேண்டினாள். ராமலிங்கமும் அண்ணியாரின் அதீதமான பாசத்தைக் கண்டு, தான் படிக்கச் சம்மதிப்பதாய்ச் சொன்னார். விஷயம் சகோதரர் காதுகளுக்குச் சென்றது. ஒரு நல்ல நாள் பார்த்து மேல்மாடியில் ஒரு தனி அறை ராமலிங்கத்திற்கென ஒதுக்கப் பட்டது. ஆனால் ராமலிங்கம் புத்தகப் படிப்பின் அறிவிற்குப் பதிலாக வழிபாடல்கள் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்தார். இலக்கியப் புத்தகங்கள், இலக்கணப் புத்தகங்களுக்குப் பதிலாய் அறையில் ஒரு கண்ணாடிக்கு எதிரே ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வழிபாடுகளும், தியானமும் செய்ய ஆரம்பித்தார்.ஆழ்ந்த தியானம் செய்யச் செய்ய ராமலிங்கத்திற்கு யோகசித்திகள் கை கூடி வரலாயின. ஒருநாள் அவர் முருகக் கடவுளைத் தரிசித்தார். ராமலிங்கத்தின் கண்களுக்கு முருகன் புலப்படலானார். நாளாக நாளாக முருகனின் பரிபூரண அருளுக்கும், ஆசிக்கும் பாத்திரமானார். தன் தெய்வீகத் தன்மையால் ராமலிங்க அடிகளாருக்கு, யோக ரகசியத்தை அறியச் செய்தார். உள்ளொளி பெற்ற ராமலிங்க அடிகளார் தானே ஒரு ஜோதிப் பிழம்பாய் ஜொலித்தார். அவர் முகத்தில் தெய்வீகக் களை தோன்றியது. இறை தரிசனம் பெற்ற களிப்பில் பாடல்கள் அலைபோல் பொங்கி வரலாயிற்று. சித்திகள் கைவரப் பெற்றார். அதன் மூலம் அற்புதங்களும் நடக்க ஆரம்பித்தன. ஆனாலும் அவர் அறியவில்லை அதை. அவருடைய அண்ணியாரே பார்த்து வியந்தார் அவரின் அதிசய ஆற்றலைக் கண்டு பேச்சிழந்தார்.தன்னுடைய அபாரமான தமிழறிவால் ராமலிங்க அடிகளாரின் அண்ணனாகிய சபாபதி அவர்கள் சில பணக்காரர்கள் வீட்டில் இலக்கியச் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவுகளை அவர்களின் வேண்டுகோளின் பெயரால் நிறைவேற்ற ஆரம்பித்தார். இதன் மூலம் அவருக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கவே குடும்பத்தின் வறுமை ஓரளவு போயிற்று. பெரியபுராணத்தைப் பற்றிய சொற்பொழிவு ஒன்று செய்ய ஒரு பெரிய மனிதர் அவரை அழைத்திருந்தார். அது ஒரு தொடர் சொற்பொழிவு. சில நாட்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். சில நாட்கள் வரையிலும் எந்தத் தடையுமின்றி சுமுகமாய்ச் சென்றுகொண்டிருந்தது சபாபதி அவர்களின் சொற்பொழிவுகள். ஒருநாள் அவருக்குக் கடுமையான ஜுரம் வந்து எழுந்திருக்கவே முடியவில்லை. சொற்பொழிவுக்குப் போகமுடியாதே என்ற கவலை சபாபதிக்கு வந்து மனம் கலங்கினார். அந்தப் பணக்காரர் என்ன சொல்லுவாரோ என அஞ்சினார். அப்போது அவர் மனைவி தன் மைத்துனரின் சாமர்த்தியத்தையும், அறிவையும் நேரில் பலமுறை கண்டிருப்பதால், மற்றவருக்கும் இது தெரியவேண்டும் என நினைத்தவராய், தன் கணவரிடம் சென்று ராமலிங்கத்தைச் சொற்பொழிவாற்ற அனுப்பும்படி வேண்டினார்.ஆனால் சபாபதிக்குத் தன் தம்பியைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் எதுவுமில்லை. அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவர் போகமுடியாது என்றும் சொல்லி மனைவியிடம் கடுமையாகக் கோபித்து மறுத்தார். ஆனால் வேறு ஏற்பாடு செய்யவும் நேரமில்லை. பணக்காரர் வீட்டிலிருந்து ஆள்மேல் ஆள் வந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் தம்பியை அழைத்து விபரத்தைக் கூறினார். புத்தகத்தைப் பார்த்து ஒன்றிரண்டு பத்திகள் அல்லது ஒன்றிரண்டு பாடல்களைப் படித்துவிட்டு வருமாறும், தன் அண்ணனுக்கு உடல்நலம் சீரானதும் மேற்கொண்டு தொடருவார் எனக் கூறும்படியும் பணித்தார். அதன்படியே ராமலிங்கம் பணக்காரர் வீட்டிற்குச் சென்று தமையனாரின் செய்தியைச் சொன்னார். அந்தக் கூடம் அனைத்து ரசிகப் பெருமக்களாலும் நிரம்பி இருந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த பணக்காரருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. கூட்டத்தினரை எவ்வாறு திரும்பி அனுப்புவது என்று யோசித்தவர், ராமலிங்கத்தைப் பார்த்து ஏதாவது கொஞ்சம் பேசிச் சமாதானம் செய்யுமாறு வேண்டினார். ராமலிங்கமும் மாபெரும் அறிஞர்களும், வித்வான்களும், பண்டிதர்களும் நிறைந்திருந்த அந்தச் சபையில் அனைவரும் பார்க்கும் வண்ணம் அமர்ந்தார். ராமலிங்கத்தின் வயதையும், சின்னஞ்சிறு பையன் அவர் என்பதையும் கவனித்த கூட்டம், விஷயமோ மிகப் பெரியது. யோகத்தையும், ஞானத்தையும் பற்றிப் பேசும் வண்ணம் இந்தக் குழந்தை என்ன அறிந்திருக்கப் போகிறது என நினைத்தனர்ஆனால் ராமலிங்கம் பேச ஆரம்பித்தாரோ இல்லையோ நல்ல பருவகாலங்களில் இடைவிடாமல் கொட்டும் குற்றால அருவி போல் சொல்மாரி பொழிந்தார். நிறுத்தவே இல்லை. கூட்டத்தினரோ பிரமிப்பும், ஆச்சரியமும் மாறாமல் ஆடாமல், அசையாமல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவர் மனதிலும் ஒரே உணர்ச்சி. இவன் சிறுவனே அல்ல. கடவுளே நமக்குப் பாடம் சொல்ல, உபதேசிக்க அனுப்பிய ஒரு ஞாநி. என்ற எண்ணமே அனைவர் மனதிலும். கூட்டம் ஆரம்பித்துப் பலமணிநேரம் ஆகிவிட்டது. நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பெரிய புராணத்தின் "உலகெலாம்" என்ற வரியில் ஆரம்பித்த ராமலிங்கம் அந்தப் பாடலின் இரு வரிகளுக்கே அதுவரையில் அர்த்தம் சொல்லி இருந்தார். ஒவ்வொரு விளக்கமும் அற்புதமாய், அருமையாய் அமையக் கூட்டத்தினரால் அவர்கள் ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. நேரம் போனதும் அவர்கள் யாருமே அறியவில்லை. கூட்டத்தினர் அனைவரும் ஒருமனதாக இந்தச் சொற்பொழிவுகள் இனிமேல் ராமலிங்கத்தாலேயே நடத்தப் படவேண்டும் எனத் தீர்மானிக்க, அந்தத் தீர்மானம் கூட்டம் நடத்துநர் வாயிலாக சபாபதிக்கும் செய்தி போயிற்று.

2 comments:

 1. //ஆனால் ராமலிங்கம் பேச ஆரம்பித்தாரோ இல்லையோ நல்ல பருவகாலங்களில் இடைவிடாமல் கொட்டும் குற்றால அருவி போல் சொல்மாரி பொழிந்தார். நிறுத்தவே இல்லை. கூட்டத்தினரோ பிரமிப்பும், ஆச்சரியமும் மாறாமல் ஆடாமல், அசையாமல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவர் மனதிலும் ஒரே உணர்ச்சி. இவன் சிறுவனே அல்ல. கடவுளே நமக்குப் பாடம் சொல்ல, உபதேசிக்க அனுப்பிய ஒரு ஞாநி. என்ற எண்ணமே அனைவர் மனதிலும். கூட்டம் ஆரம்பித்துப் பலமணிநேரம் ஆகிவிட்டது//


  கூட்டத்தில் இருப்பவர்களின் மன நிலையை என்னாலும் கூட உணர முடிகிறது
  இத்தகைய உணர்வுகள் மனதை ஆட்கொண்டு மனம் முழுவதும் பரவச உணர்வு நிறைந்து இருக்கிறது .
  பதிவுக்கு நன்றி கீதாம்மா

  ReplyDelete
 2. ஆமாம், பரவச உணர்வு படிக்கும்போதும் ஏற்படும்.

  ReplyDelete