Wednesday, March 9, 2011

மீனாக்ஷி பெறாத செல்லக்குழந்தை! சிதம்பரம் ஸ்வாமிகள்!

அங்கு அயற்கும், மாற்கும் அரிய பெருமான் இடம்சேர்

அங்கயற்கண் அம்மைக்கு அணியவே- அம் கயத்தின்

மாமுகம்கொள் கோமானை வாழ்த்திக் கலிவெண்பா

நாம் உகந்து பாடுவோம் நன்கு.”


என்று ஆரம்பிக்கும் காப்புச் செய்யுளைத் தொடர்ந்து, அன்னையை,


“சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே, சேயிழையே!

காராரும் மேனிக் கருங்குயிலே! –ஆராயும்

வேதமுதல் ஆகி நின்ர மெய்ப்பொருளே! மின் ஒளியே

ஆதிபராபரையே!அம்பிகையே! –சோதியே!”


என்றெல்லாம் சொல்லுபவர், பின்னர் தொடரும் பாடல்களில் அன்னையை ஆளும் அரசியாகவும், உலகில் உள்ள குலங்கள் அனைத்திலும் உதிக்கின்றவள் என்ற பொருளிலும், “அம்படைச்சி, ஆண்டிச்சி, இடைச்சி, ஒட்டச்சி, சடைச்சி, செட்டிச்சி, சேணிச்சி, வலைச்சி, வேடிச்சி, என்றெல்லாம் இருபொருள் தோன்றப் பாடி வாழ்த்துகின்றார்.


"அன்ன நடைச்சி, அருமறைச்சி, ஆண்டிச்சி

கன்னல் மொழிச்சி, கருணைச்சி- பன்னுதமிழ்


வாய்ச்சி, சடைச்சி, வடிவுடைய மங்கச்சி,

பேய்ச்சி, இளமுலைச்சி, பேதைச்சி - காய்ச்சியபால்

வெண்ணெய் மொழிச்சி, வெளிச்சி, வெளி இடைச்சி

அண்ணுபுரம் தீயிட்ட அம்படைச்சி"

என்றெல்லாம் சொல்லுகின்றார்.நம்முடைய கண்களின் வெள்ளை விழியைச் சிவமாகவும், கருவிழியை அம்பிகையாகவும் கொள்வோர் ஆன்மீகத்தில் திளைக்கும் அறிவு சார்ந்த பெருமக்கள் பலரும். அந்த நமது விழிமணியாக விளங்கும், அம்பிகையைப் போற்றி, அவள் நம்மை எமது ஆட்சியைப் புறத்தில் மட்டும் பாராதே, அகத்திலும் உள்முகமாகிப் பார்த்து என் அகமுக ஆட்சியை அறிவாய் என்று சொல்வதாக இந்தப் பாடல் தொகுப்பின் பொதுக்கருத்துச் சொல்லுகின்றது. மேற்கொண்டு விளக்கங்கள் யோகமுறையை நன்கு கற்று அறிந்தவர்களாலேயே சொல்லவும் அறியவும் முடியும் என்பார்கள். ஆடும் தில்லைக் கூத்தனுடன் தானும் சேர்ந்து தாளம் தப்பாமல் ஆடும் அம்பிகை விழிப்பு நிலையில் நம் கண் முன்னேயும், நம் சொப்பனத்தில் ஜோதிவடிவாகவும், தோன்றுகின்றாள் என்பதைப் புரிந்து கொண்டோமானால் நம் சுழுமுனையில் அவள் ஈசனுடன் ஐக்கியமாகி, நமக்கு உறவாகிச் சுகத்தைத் தருகின்றாள் என்பதையும் அறியலாம். இவரின் இந்தப் பாடல்களில் மகிழ்ந்த அன்னையவள் அவருக்குக் காக்ஷி கொடுத்து, வடக்கே யுத்தபுரி என்னும் ஊருக்குச் சென்று தன் மகன் ஆகிய குமாரன் கந்தவேளின் திருமேனியை அங்கே வழிபாட்டுக்கு உரியதாக்கி, ஏற்கெனவே இருந்த பழைய கோவிலைக் கண்டு பிடித்துப் புனர் நிர்மாணம் செய்து வழிபாட்டுக்கு உகந்ததாய் ஆக்குமாறும் சொல்லுகின்றாள்.அன்னையின் ஆணையைச் சிரமேற்கொண்ட சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டுக்கிளம்பும்போது தான் அன்னையே மயிலாகக் காக்ஷி கொடுத்துத் தன்னை மதுரைக்கு அழைத்தது இந்தக் கோயில் வேலைக்காகவே என்பதைப் புரிந்து கொள்கின்றார். யுத்தபுரி எது என்பதை விசாரித்துக் காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள போரூரே அது என்பதையும் அறிந்து கொண்ட ஸ்வாமிகள் அங்கே வந்து சேர்கின்றார். வரும் வழியிலேயே விருத்தாசலத்தில் குருநாதர் ஆன குமாரதேவர் முக்தி அடையப் போவதை அறிந்து அங்கே சென்று அவரை வணங்கிக் குருவருள் பெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர் கிளியனூரில் ஞானம்மை என்னும் பெண்மணிக்கு அருளாசி வழங்கி, பொம்ம பாளையம் என்னும் ஊரில் சிவஞானபாலைய சுவாமிகளோடு ஏழுநாட்கள் இரவு, பகல் பாராமல் விவாதம் மேற்கொண்டு பின்னர் திருப்போரூரை வந்தடைகின்றார். திருப்போரூரில் முதலி கந்தனின் ஆலயம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிள்ளையார் கோயில் ஒன்றையே ஊர்மக்கள் காட்டினர். பிள்ளையார் கோயிலை ஒட்டிப் பெரிய பனங்காடு இருந்தது. தினமும் பிள்ளையாரை வணங்கி நம்பிக்கையுடன் பனங்காட்டில் கந்தனைத் தேடி அலைந்தார்.நம்பிக்கை வீண்போகாமல் ஒரு நாள் பெண்பனை மரம் ஒன்றின் அருகே சுயம்புவாக இருந்த கந்தனைக் கண்டார். மூர்த்தம் கிடைத்துவிட்டது. அதைத் தமது குடிலுக்குக் கொண்டு வந்து அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்திவர ஆரம்பித்தார். கூடவே பழைய கோயிலையும் தேடும் பணி தொடர்ந்தது. ஒருநாள் சுவாமிகளின் முக்தி அடைந்த குருநாதர் அவர் முன் தோன்ற சுவாமிகளுக்கு ஆச்சரியம். மகிழ்வோடு குருவை வணங்க, கோயிலைக் காட்டவே வந்ததாய்த் தெரிவிக்கின்றார் குருநாதராக வந்த சற்குருநாதன் முருகப் பிரான். சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் அவர் பூசிய திருநீற்றின் மகிமையால் கோயிலின் முழு வடிவும் அவர் கண்களில் தெரிஅவந்தது. மனநிறைவுடன் குருநாதருக்கு நன்றி சொல்லத் திரும்பிய சுவாமிகள் குருநாதனாக வந்த சுவாமிநாதன் திரும்பக் குடிலுக்குச் சென்று மூர்த்தத்துக்குள் மறைவதைக் கண்டார். திகைத்த சுவாமிகளின் ஈசனின் திருவிளையாடலை நினைத்து வியந்த வண்ணம், பல்லவர்கள் காலத்தில் கட்டுவிக்கப் பட்ட கோயிலைக் கண்டெடுத்துப் புனர் நிர்மாணம் செய்யத் துவங்கினார். சுவாமிகள் கையால் திருநீறு கொடுத்தால் தீராத பிணிகளும், குடும்பப் பிரச்னைகளும் தீரவே அனைவரும் சுவாமிகளை வணங்கித் திருநீறு பெற்றுக் கொண்டதோடு குமரன் கோயிலுக்குத் தங்களால் இயன்ற பொருளுதவியும் செய்தனர். குடில் நிறையப் பொன்னும், பொருளும் நிரம்பிக் கிடக்கையில் கள்ளர் கூட்டத்துக்குக் கேட்கவா வேண்டும்? சுவாமிகள் குடிலில் இருந்தபோதே கள்ளர் கூட்டம் ஒன்று அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கிக் கொள்ளை அடிக்க எண்ணித் தங்கள் கைகளை ஓங்கினார்கள். அவர்களையே பார்த்த வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தார் சுவாமிகள். ஆனால் கள்ளர்களோ? ஓங்கிய கைகள் ஓங்கிய வண்ணமே இருக்கக் கண் பார்வையையும் பறி கொடுத்தனர். அப்போதுதான் சுவாமிகளின் அருமையும், மகிமையும் புரிந்து மன்னிப்புக் கேட்டதோடு தாங்கள் திருடிய பொருட்கள் அனைத்தையும் கோயில் திருப்பணிக்குக் கொடுத்தார்கள். திருப்பணி முடிந்து ஆலயம் புதுப்பிக்கப் பட்டு, திருப்போரூர் சந்நிதி முறை என்னும் நூலையும் 726 பாடல்களைக் கொண்ட பாராயண நூலாக இயற்றி வைத்தார் சிதம்பரம் சுவாமிகள். திருப்போரூர் தலத்துக்கு வரும் அன்பர்கள் தலத்தின் மகிமையையும், முருகனின் பேரருளையும் அவன் சந்நிதியிலேயே பாடி இன்பம் அடையும் வண்ணம் இயற்றப் பட்டது அந்த நூல். தவிர, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களையும் அருளினார்.மீனாக்ஷி தனக்கிட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றியாகிவிட்டது என்ற உணர்வுடன், திருப்போரூரில் இருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு என்னும் ஊரில் மடம் அமைத்து அங்கே மடாலயம், ஒடுக்க்க அறை, பூஜை மடம் போன்றவற்றை அமைத்து அங்கேயே ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து அவரைத் தரிசித்துச் சென்றனர். சிலர் தீக்ஷையும் பெற்றனர். கி.பி. 1659-ம் ஆண்டு வைகாசி மாச விசாக தினத்தில் மடாலயத்தின் ஒடுக்க அறைக்குள் இருந்து முன்பே வடிவமைத்த சுரங்கம் ஒன்றின் வழியே அருகில் உள்ள சமாதிக்குழிக்குள், வழிபாட்டுப் பொருட்களுடன் சென்று வழிபாடு நடத்தி சமாதியின் உள்ளேயே அமர்ந்து பரிபூரணத்துவத்தை அடைந்தார். அந்த நேரம் திருப்போரூர் முருகன் சந்நிதியில் மூலவரின் சந்நிதியை நோக்கிச் சிதம்பரம் சுவாமிகள் கூப்பிய கரங்களுடன் சென்று மூலவர் திருமேனியில் கலந்ததை அன்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களில் பலரும் கண்டனர். இதனாலேயோ என்னமோ கண்ணகப் பட்டில் உள்ள சுவாமிகளின் திருக்கோயில் அதிஷ்டானம் என்று சொல்லப் படுவதில்லை. சுவாமிகள் ஜீவசமாதியாக உறைவதாகவும் குறிப்பிடப் படுவதில்லை. ஸ்ரீ சிதம்பரம் சுவாமிகள் மடாலயத் திருக்கோயில் என்றே சொல்லப் படுகிறது.

No comments:

Post a Comment