Thursday, March 17, 2011

திருப்புகழைப் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகள்!

முருகப் பெருமான் பேரில் அருணகிரிநாதர் திருப்புகழைப் பாடிவிட்டுப் போயிட்டார். ஆனால் அந்தத் திருப்புகழைத் தமிழ்நாடெங்கும் பரப்பியது யார் தெரியுமா? திருப்புகழைத் தொகுத்து அதை மீண்டும் பரப்பியவர் சச்சிதாநந்த ஸ்வாமிகள் ஆவார். திருப்புகழைப் பரப்பியதால் திருப்புகழ் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப் பட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த இம்மஹான் தமது ஞானத்திலும் சித்தி அடைந்தார். திருப்புகழைப் பரப்புவதிலும் சித்தி அடைந்தார். இவரின் சமாதி இருக்குமிடம் வள்ளிமலையில் தான். சச்சிதாநந்த ஸ்வாமிகளின் தவ வாழ்க்கை சிறப்புப் பெற்றதும் வள்ளிமலையாலே தான். இந்த வள்ளி மலை வேலூரில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது. வேலூரில் இருந்து 23 கிமீட்டர் தூரம் இருக்கலாம். இந்த வள்ளி மலைக்குச் சென்னையிலிருந்து செல்ல காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். சோளிங்கர்-திருத்தணி சாலையில் சென்றால் சுற்றிலும் பச்சைப் பசேல் என வயல்கள் ஒருகாலத்தில் இருந்த இடத்தில் வழியெங்கும் சிறு சிறு குன்றுகள். அத்தகையதொரு குன்றுதான் வள்ளிமலை.வள்ளி இங்கே தான் தினைப்புனம் காத்து வந்ததாகவும், அப்போது தான் முருகன் கிழவர் உருவில் வந்து வள்ளியிடம் தேனும், தினைமாவும் பெற்றுச் சாப்பிட்டதாகவும், அப்போது தாகம் எடுத்த முருகனுக்கு வள்ளி சுனையிலிருந்து நீர் அருந்தக் கொடுத்தாள். அந்தச் சுனை இங்கே இருப்பதாகவும் சொல்கின்றனர். கடைசியில் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டதும் இங்கே தான் என்றும் அங்கே உள்ள ஒரு சுரங்கப் பாதை வழியே தான் முருகன் வள்ளியைத் திருத்தணி அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். இப்படி வள்ளியையும், முருகப் பெருமானையும் சம்பந்தப் படுத்திப் பல இடங்களை இங்கே காட்டுகின்றனர். அவர்களை நினைவுறுத்தும் சம்பவங்களைத் தாங்கிய இடங்களே இங்கே காணமுடிகின்றன. இப்படி முருகன் புகழைப் பேசும் ஓர் இடத்தைத் தேடி வந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார் வள்ளிமலை ஸ்வாமிகள். அவர் யார் என்றும் எங்கிருந்து வந்தார் என்றும் காண்போமா?கோயம்புத்தூருக்கு அருகே ஒரு கிராமம். பூநாச்சிபுதூர் என அழைக்கப் படும் அந்தக் கிராமத்தில் சிதம்பர ஐயர் என்பவர் வசித்து வந்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்த பண்டிதர் ஆன அவர் முதல் மனைவி இறந்துவிட மகாலக்ஷ்மி என்னும் உறவுப் பெண்ணை இரண்டாம் முறையாக மணம் செய்து கொண்டார். இருவருக்கும் பல வருஷங்கள் குழந்தை பாக்கியமே இல்லை. மகாலக்ஷ்மிக்கு அதீத இறை பக்தி உண்டு. ஒருநாள் பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவதைக் கண்ட மகாலக்ஷ்மி பயந்து போய் அருகில் உள்ள திருச்செங்கோடுக்கு (அதற்கு நாககிரி என்ற பெயரும் உண்டு) வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்வதாக வேண்டிக் கொண்டாள். பாம்பு மறைந்தது. திருச்செங்கோடு அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பட்ட தலமாகும். தனது வேண்டுதலை நிறைவேற்றினாள் மகாலக்ஷ்மி. பனிரண்டு அமாவாசைகள் தொடர்ந்து திருச்செங்கோடு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட அதன் பலனாக ஒரு பெண்குழந்தை பிறக்க நாகம்மாள் என்ற பெயரிட்டார். ஆண்குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆன ஈசன் பெயரையே அர்த்த நாரி என வைத்தார். அர்த்தநாரிக்கு ஐந்து வயதாகும்போது தந்தை சிதம்பர ஐயர் இறந்துவிட்டார். திகைத்த மகாலக்ஷ்மி தன் தமையன் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அர்த்தநாரிக்கு மாமன் வீட்டிலேயே உபநயனமும் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். ஆனால் படிப்பே வரவில்லை. ஆகவே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான் அர்த்த நாரி. பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று அற்புதமாகப் பாடி ஆடி நடித்தான்.மாமன் தன் மகளையே திருமணமும் செய்து வைத்திருந்தார். பிழைப்புக்காக மைசூர் சென்று அரண்மனையில் வேலை பார்த்தார் அர்த்தநாரி. அரண்மனையில் சமையல் வேலை பார்த்த அர்த்தநாரிக்கு அங்கேயே கூட வேலைசெய்த நஞ்சம்மா இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப் பட்டாள். முதல் மனைவி தன் மாமியாருடன் பூநாச்சிபுதூரில் வசித்துவந்தார். அவரின் குழந்தைகள் ஒவ்வொன்றாக இறக்க அதே ஏக்கத்தில் மகாலக்ஷ்மியும் இறந்தார். இரண்டாம் மனைவியான நஞ்சம்மாவின் குழந்தைகளும் இறக்க கடைசியாகப் பிறந்த நரசிம்மன் என்ற சிறுவன் மட்டும் உயிருடன் இருந்தான். வாழ்க்கை மீது வெறுப்புக் கொண்ட அர்த்தநாரி தற்கொலை செய்துகொள்ள எண்ணினார். அடிக்கடி ஏற்பட்ட வயிற்று நோவும் அவரை வருத்தி வந்தது. அதுவரையிலும் இறை உணர்வோ, பக்தியோ சிறிதும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வந்த அவருக்கு இப்போது அடிக்கடி இறை உணர்வும், சிந்தனைகளும், உயிர் பற்றிய தத்துவங்களும் வலம் வர ஆரம்பித்தன. பழநி சென்று முருகனைத் துதித்தால் வியாதி தீரும் என அனைவரும் சொன்னதால் மைசூர் அரண்மனை வேலையை விட்டு விட்டு மனைவியுடனும், எஞ்சி இருந்த ஒரு குழந்தையுடனும் பழநிக்கு வந்தார் அர்த்தநாரி.அங்கே வந்ததுமே தன் மனம், உடல் இரண்டுமே புத்துணர்ச்சி அடைந்ததை உணர்ந்தார் அர்த்தநாரி. வயிற்று வலியும் படிப்படியாய்க்குறைந்தது. அர்த்தநாரிக்கு சந்நியாசி ஆகவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஆனால் மனைவி, குழந்தையுடன் குடும்பஸ்தர் ஆன அவருக்கு சந்நியாசம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. வெறுப்படைந்த அர்த்தநாரி சொந்த ஊரான பூநாச்சிபுதூர் சென்று எஞ்சி இருந்த சொத்துக்களை எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் எதுவும் வைத்துக் கொள்ளாமல் பழநிக்குத் திரும்பினார். அன்ன ஆகாரம் எதுவுமில்லாமல் ப்ரசாதமாய்க் கிடைத்த பாலையும், பழத்தையுமே உண்டு வந்தார். எப்போதும் கோயிலில் பூஜை, தியானம் செய்வது என ஆலய மண்டபத்திலேயே தங்கி இருந்தார். மைசூரிலிருந்து வந்ததால் இவரை மைசூர் ஸ்வாமிகள் என அங்கே வரும் மக்கல் அழைக்க ஆரம்பித்தனர்.ஆலயப் பணிகளில் உதவி வந்தார். மக்களைத் தரிசனத்துக்குச் செல்ல ஒழுங்கு செய்வார். அதிகாலையில் எழுந்து நதியில் குளித்துக் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் செய்வார். கோயிலுக்கு வரும் அன்பர்கள் பாடும் திருப்புகழ் பாடலைக் கேட்டுக் கேட்டு அதில் ஈடுபாடு பிறந்தது. திருப்புகழ்ப் பாடல்களில் தன்னை மறந்தார். அதற்காக மீண்டும் படிக்க ஆரம்பித்து எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டு திருப்புகழை மனப்பாடம் செய்தார். தினமும் தான் கற்ற திருப்புகழை முருகன் சந்நிதியில் பாட ஆரம்பித்தார். நல்ல குரல்வளம் நிரம்பிய அவரால் பாடப் பட்ட திருப்புகழ் பெருமை அடைந்ததா? அல்லது ஸ்வாமிகளுக்குப் பெருமையா? சொல்வது கடினமே.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி ;நிறைய புது விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது கீதாம்மா

    ReplyDelete
  2. வரவுக்கு நன்றி ப்ரியா.

    ReplyDelete