Thursday, March 17, 2011

திருப்புகழைப் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகள்!

ஸ்வாமிகள் பாடும் திருப்புகழ்ப்பாடல்களைக் கேட்கக் கூட்டம் கூடியது. திருப்புகழ் ஸ்வாமிகள் என்ற பெயரிலும் அழைக்க ஆரம்பித்தனர் மக்கள். பழநியில் இருந்து பொதிகைமலை, பாபநாசம், திருக்குற்றாலம் போன்ற இடங்களுக்குத் தல யாத்திரை சென்றார் ஸ்வாமிகள். அங்கே பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் பல ஞாநிகளும் சித்தர்களும் அடங்குவார்கள். அவர்களின் ஆசிகளோடு அல்லாமல் சித்துக்களும் கைவரப் பெற்றார் ஸ்ரீஸ்வாமிகள். தன்னை நம்பி வந்து வேண்டுவோர்க்குத் திருநீறு பூசுவார். மூலிகைகள் மூலம் மருந்துகள் கொடுத்துவந்தார். பலருக்கும் நோய்கள் குணமடைய மக்கள் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் அவரைத் தேடி வந்தனர். திருச்செந்தூர், மருதமலை, ராமேஸ்வரம், கதிர்காமம் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று முருகனைத் தரிசித்துவந்தார். நாளுக்கு நாள் துறவு மேற்கொள்ளும் ஆசை அதிகரித்துவந்தது. ஆனால் வழிதான் தெரியவில்லை. அப்போது ஓர் அன்பர் திருவண்ணாமலைக்குச் சென்றால் வழிபிறக்கும் என்று சொல்ல, உடனே திருவண்ணாமலைக்குப் பயணம் ஆனார் ஸ்ரீஸ்வாமிகள். சேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீரமணர் போன்ற மகான்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரவேற்ற திருவண்ணாமலை வள்ளிமலை ஸ்வாமிகளையும் வரவேற்றது.வள்ளிமலை ஸ்வாமிகள் சென்றதும் வேறு யாரிடமும் அல்லை. பகவான் ஸ்ரீரமணரிடமே சென்றுவிட்டார். அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்துவிட்டு வந்திருப்பதாயும் துறவுக்கான தீக்ஷை வேண்டி வந்திருப்பதாயும் வேண்டுகோள் விடுத்தார். ஸ்ரீரமணர் முன்னிலையில் முருகனின் திருப்புகழ்ப்பாடல்களைப் பாடிவந்தார். நாட்கள் கழிந்தன. ஆனால் துறவு கிடைக்கவில்லை. அங்கிருந்து மீண்டும் திருத்தலயாத்திரை செல்ல எண்ணி ஸ்ரீரமணரிடம் உத்தரவு பெற்று யாத்திரை தொடங்கினார். இம்முறை சென்னைக்கு வந்து கந்தகோட்டத்து முருகனைத் தரிசித்து திருத்தணிக்கும் சென்றார். அங்கே ஒரு அன்பர் மூலம் திருப்புகழின் மற்றொரு பாகமும் கிடைக்கவே மனமகிழ்வோடு மீண்டும் பழநிக்கே சென்றார். பழநியில் இருக்கும்போதே பர்மாவில் இருந்த தன் ஒரே மகனை வரவழைத்துத் தன் மனைவியான நஞ்சம்மாவை அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் வடநாடு சென்று அங்கே இமயாலயத்தில் தவம் செய்யும் யோகிகளைத் தரிசித்தார். அவர்களில் ஒரு யோகி மூலம் தீக்ஷை பெற்று, “சச்சிதாநந்த ஸ்வாமிகள்” என்ற தீக்ஷா நாமத்துடன் துறவு பூண்டார். ஸ்வாமிகள் வடநாட்டுத் தல யாத்திரை மேற்கொண்டபோதே முருகன் அருள் அவருக்குக் கிடைத்திருப்பதை உறுதி செய்யும் வண்ணமாக அவர் பசியுடன் இருக்கும்போது சில குரங்குகள் மூலம் உணவும், இருட்டில் வழிதெரியாமல் தவித்தபோது தீப்பந்தங்கள் துணையாக வந்தும் , முருகன் அருளைப் பூரணமாக அவருக்கு உணர்த்தின.மீண்டும் ரமணரைத் தரிசிக்க எண்ணித் திருவண்ணாமலை சென்றார். அங்கே ரமணரோ அவரைக் கண்டு ஒருநாள், “போ, போ, இங்கே நிற்காதே, கீழே போ” என்று விரட்டிவிட, திருப்புகழ் ஸ்வாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் தான் மனதால் குருவாக வரித்தவர், குருவின் வார்த்தையை மீறுவது எப்படி? மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டார். என்ன ஆச்சரியம்?? அங்கே இவரை வரவேற்று அழைத்தவரோ ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். ரமணரின் தீர்க்க தரிசனம் அப்போது தான் புரிந்தது ஸ்ரீவள்ளிமலை ஸ்வாமிகளுக்கு. திருப்புகழ் ஸ்வாமிகளைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக்கொண்டு அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். சிவமானஸ ஸ்தோத்திரத்தின் நான்காம் ஸ்லோகத்தைச் சொல்லி அதன் பொருளையும் விளக்கிச் சொன்னார். அதற்கு ஈடான திருப்புகழை வள்ளிமலை ஸ்வாமிகளைக் கூறச் சொல்லிக் கேட்டுத் தானும் மகிழ்ந்தார் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள். பின்னர் அவரிடம், “திருப்புகழே உனக்குத் தாரக மந்திரம். உன் சிந்தனை, சொல், செயல் என அனைத்தையும் இந்தத் திருப்புகழுக்கே அர்ப்பணம் செய்து தவ வாழ்க்கை வாழவேண்டும் நீ. வேறு எந்தவிதமான மந்திரங்களோ நூல்களோ உனக்குத் தேவையில்லை. திருப்புகழ்தான் உனக்கு மகாமந்திரம். நீ செல்லுமிடமெல்லாம் இனி திருப்புகழ் ஒலிக்கட்டும். இப்போது நீ வள்ளிமலைக்குச் சென்று தவம் மேற்கொள்வாயாக. விரைவில் நாமும் அங்கே வருவோம்.” என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

குருவின் ஆணைப்படியே வள்ளிமலை வந்தடைந்தார் ஸ்ரீஸ்வாமிகள். வள்ளிமலையில் தவம் செய்யலானார். அதன் பின்னர் அவர் பெயர் திருப்புகழ் ஸ்வாமிகள் என்பதில் இருந்து வள்ளிமலை ஸ்வாமிகள் என ஆனது. . சென்னையிலும் சில காலம் தங்கினார் ஸ்ரீஸ்வாமிகள். அவர் சென்னையில் இருந்த சமயம் அவருடைய சீடர்கள் சிலர் அப்போதைய ஆங்கில அரசில் பணி புரிந்து வந்தனர். அந்தச் சமயம் டிசம்பர் 31-ம் தேதி, மறுநாள் ஜனவரி ஒன்றாம் தேதி. தங்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லவேண்டும் என ஸ்வாமிகளிடம் தெரிவித்துவிட்டு அந்தச் சீடர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றுவிட்டனர். மனம் நொந்துபோனார் வள்ளிமலை ஸ்வாமிகள். அழியாத பெருவாழ்வைத் தரும் ஆறுமுகன் இருக்க ஆங்கிலேயரைத் தேடிப் போகின்றனரே? அதுவும் நம் வழக்கம் இல்லாத ஒரு நாளைக் கொண்டாட என ஸ்வாமிகள் மிகவும் வருந்தினார். அதுவும் முருகப்பெருமான் விரும்பி மணந்த வள்ளியை நேரிலே தரிசிக்கும் பேறு பெற்றவர் எனவும் சொல்வதுண்டு . . ஆனாலும் உலகத்துக்கே அதிகாரியான முருகனை விட்டுவிட்டு, அவன் புகழ் பாடும் திருப்புகழை விட்டுவிட்டு, நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரைப் பார்த்து அவர்கள் காலில் விழுவதா?வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கர் சொன்னாலும் ஊனும் உருகும், உள்ளம் குழையும், உன்மத்தம் ஆகுமே எனச் சொன்ன வள்ளிமலை ஸ்வாமிகள், திருத்தணியில் திருப்புகழைப் பாடிக் கொண்டே படிகளில் ஏறி மேலே செல்ல ஆரம்பித்தார். இது ஆரம்பிக்கப் பட்ட ஆண்டு 1918. திருத்தணியில் 365 படிக்கட்டுகள். ஒரு வருடத்தின் மொத்த நாட்களைக் குறிக்கும் இந்தப் படிக்கட்டுகளில் திருப்புகழைப் பாடிக் கொண்டே பாராயணம் செய்து கொண்டே ஏறி திருத்தணி முருகனைத் தரிசிப்பது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகச் செய்தார். இவரால் தொடங்கப் பட்ட இந்தப் படி உற்சவம் பின்னர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீமஹாஸ்வாமிகளால் திருப்புகழ் மணி என்ற பட்டம் சூட்டப் பட்ட டி.எம். கிருஷ்ணஸ்வாமி அவர்களால் தொடரப் பட்டு பிரபலமாக்கப் பட்டு இன்றளவும் நடக்கிறது. பின்னர் இந்தப் படி உற்சவம் கண்ணனுக்கும், கந்தனுக்கும் வித்தியாசம் பார்க்காமல் பழநி, குன்றத்தூர், திருச்சி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், ஸ்வாமிமலை, பெரும்பேறு, மயிலம், போன்ற இடங்களையும் சோளிங்கபுரத்தையும் தழுவிக் கொண்டு நடக்க ஆரம்பித்தது.பின்னர் மீண்டும் வள்ளிமலை வந்தார் ஸ்வாமிகள். வள்ளிமலையில் இருந்த ஆலயம் மற்றும் மலைப்பகுதிகளைச் சீரமைத்துத் தமக்கு ஆஸ்ரமமும் அமைத்துக் கொண்டார். திருப்புகழின் பெருமையைப் பரப்பினார். நாடி வரும் அன்பர்களுக்குத் திருநீறு அளித்தும், திருப்புகழ் மந்திரம் ஓதியும் நோய் தீர்த்துவந்தார். ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தருவார் ஸ்ரீஸ்வாமிகள். தன்னிடம் வரமுடியாமல் தவிக்கும் அன்பர்களின் இருப்பிடம் சென்று அவர்களின் நோயைத் தீர்த்தும், ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காத்தும் வந்தார்.

வள்ளிமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குப் படிக்கட்டுகள் செல்கின்றன. படிகளில் இடப்புறமாய் விநாயகரும் அருணகிரிநாதரும் அருள் பாலிக்க, படிகள் அழகாய்ச் சரியான அளவுகளில் ஏற வசதியாய் இருக்கும் என்று சொல்கின்றனர். படிகளின் பாதி தூரத்தில் தெரியும் எட்டுக்கால் மண்டபம் படிகள் திருப்பணி செய்தபோது மண்டபத்தைத் திருப்பணி செய்ய யத்தனித்தார்களாம். ஆனால் அங்கிருந்து திடீரெனப் புகை வந்ததாயும், ஒருவேளை சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் இடமாய் இருக்கலாம் என்பதால் அப்படியே விட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். மலைக்கோயிலின் சுற்றுச் சுவர் கோட்டை போன்ற அமைப்பில் இருக்கிறது. கொடிமரம் நீண்டு உயர்ந்து காணப்படுகிறது. வேலுக்கும், மயிலுக்கும் தனி சந்நிதியைத் தாண்டி உள்ளே செல்லவேண்டும். குடைவரைக் கோயில். ஒரே பாறையில் குடையப் பட்டுள்ளது, அங்கே வள்ளியை மணந்து கொண்ட இடத்தில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான் விநாயகர் துணையோடு காட்சி அளிக்கின்றார்.கோயிலினுள் தெரியும் துவாரம் வழியாக வள்ளியை முருகன் திருத்தணி அழைத்துச் சென்றதாய்க் கூறுகின்றனர். கோயிலை விட்டு வெளியே வந்தால் இடப்புறம் தனியே தெரியும் பாதையில், பாறைகளையே படிகளாய்ச் செதுக்கி இருக்கும். அந்தக் கரடுமுரடான பாதையில் நடந்தால் சச்சிதாநந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்தை அடையலாம். முகப்பில் பொங்கியம்மன் சந்நிதி உள்ளது. ஸ்ரீ ஸ்வாமிகள் 1950-ம் வருஷம் நவம்பர் மாதம் 21-ம் தேதி மஹாசமாதி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது பூதவுடல் சென்னையிலிருந்து வள்ளிமலைக்கு எடுத்துவரப்பட்டு அவர் தவம் செய்த குகையிலேயே சமாதியில் வைக்கப் பட்டது. அந்தக் குகையில் தற்சமயம் ஸ்வாமிகளின் சமாதியின் மேலே வேல் மற்றும் சிலை வடிவிலான தக்ஷிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதன் எதிரே திருப்புகழை நமக்குத் தந்த அருணகிரிநாதரும் காட்சி கொடுக்கிறார். வள்ளி வாழ்ந்த இந்த இடத்தில் ஸ்ரீஸ்வாமிகளுக்கு முருகன் வள்ளியோடு பல முறை காட்சி தந்திருக்கின்றார். அதுபோல் அங்கே செல்லும் அன்பர்களுக்கும் அங்கே சென்றதும் மனதில் அமைதியும் மகிழ்வும் பொங்க முருகனும், வள்ளியும் அருள் செய்வார்கள்.


வெற்றி வடிவேலனுக்கு அரோகரா!

3 comments:

  1. திருப்புகழ் ஸ்வாமிகள் பற்றி தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி
    இவ்வளோ விசயங்களையும் சேகரித்து பதிவாக போடும் தங்களுக்கும் நன்றி கீதாம்மா

    ReplyDelete
  2. Thanks for the useful information. As I was reading this article about Swamigal and Lord Muruga, I got a phone call, offering me the job of Director. The Swamiji seems to be very powerful. Dr. K. Natarajan

    ReplyDelete