Thursday, March 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை! 4

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்:

வள்ளலாரை ஒரு சித்தர் என்று சொல்லுவது உண்டு. அதற்கேற்றாற்போலவே அவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகச் சில. ஒரு முறை தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களோடும், மற்றச் சீடர்கள் சிலரோடும் சேர்ந்து திருஒற்றியூர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். எப்போதும் கோயிலுக்குச் செல்லும் வழியாக வள்ளலார் தெற்கு மாடவீதியையும் அதை ஒட்டிய நெல்லிக்காய்ப்பண்டாரம் சந்து என்னும் சந்தின் வழியாகவுமே செல்வது வழக்கம். அன்றைக்கென்று தேரடித் தெருவிற்குள் நுழைந்து செல்ல ஆரம்பித்தார். வள்ளலாரின் இன்னொரு சீடரான சோமு செட்டியார் குழம்பிப் போனார். இது தாசிகள் வீதி என அழைக்கப்படுமே? ஏன் இந்த வீதியில் நுழைகிறார் என்று எண்ணியவண்ணமே, தம் குருநாதரிடம் அந்த சந்தேகத்தையும் கேட்கிறார். வழக்கமான பாதையைவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். வள்ளலாரோ அமைதியாக “ஆம்” என்ற ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு அமைதியாக, சோமு செட்டியாரோ விடாமல், “ஐயா, தங்களைப் போன்றவர்கள் இந்த வீதியைக் கண்டாலே நாணிக் கூசுவார்களே? அத்தகைய தாங்கள் இன்றைக்கு இந்தத் தேரடி வீதிக்குள் வந்தது ஏனோ? அதுவும் அனைவரையும் அழைத்துச் செல்கிறீர்களே? “ என்று வினவ, வள்ளலார், புன்முறுவலோடு, “என்னைக் காண இந்தத் தெருவில் வெகுநாட்களாய் ஒருவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவரைக் காக்க வைக்கக்கூடாது.” என்று சொன்னார்.“யார் அவர்?” ஆச்சரியத்துடன் வினவிய சோமு செட்டியாருக்கு, “எல்லாரும் பார்க்கத் தான் போகிறீர்கள்” என்ற பதிலைக் கொடுத்துவிட்டு முன்னால் நடந்தார் வள்ளலார். அந்தத் தெருவில் ஒரு வீட்டுத் திண்ணையில் நிர்வாணத் துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். சோமு செட்டியார் அவரைச் சுட்டிக்காட்ட, வள்ளலாரும் அதனால் என்ன என்று கேட்டுவிட்டுத் துறவியைக் கூர்ந்து நோக்கினார். செட்டியார் உடல் நடுங்க, பயத்துடன், அவர் தெருவிலே போகிறவர்கள் வருகிறவர்கள் அனைவரையும் அவரவர் குணங்களை மானசீகமாய்க் கண்டறிந்து அதற்கேற்றாற்போல், “இதோ நாய் போகிறது, இதோ நரி போகிறது, இதோ குரங்கு போகிறது, இதோ, குதிரை போகிறது, இதோ கழுதை போகிறது.” என்றெல்லாம் சொல்லி ஏளனம் செய்து சிரிப்பார் என்று சொல்லித் தம்மையும் வள்ளலாரையும் கண்டு அவ்விதம் ஏதேனும் சொல்லிவிடுவாரோ என அஞ்ச ஆரம்பித்தார்.“இவ்வளவு தானே? இதுக்கா பயப்படுவது? வாருங்கள் போகலாம்.” என்று சொல்லிவிட்டு வள்ளலாரோ மேலே நடக்க ஆரம்பித்தார். அந்த நிர்வாணத் துறவியை அனைவரும் கடந்தனர். அப்போது அதிசயம் நிகழ்ந்தது. அந்தத் துறவி ஸ்ரீராமலிங்க அடிகளைக் கண்டதுமே, பக்திப் பரவசம் மேலோங்கத் திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே இறங்கி, நடுவீதிக்கு வந்து, ஆநந்தக் கூத்தாடிக் கொண்டு, “கண்டேன், கண்டேன், கண்ணுக்கு இனியவரைக் கண்டேன், ஒரு மனிதனைக் கண்டேன், அதிலும் உத்தம மனிதனைக் கண்டேன். அதோ போகிறான், உத்தம மனிதன். இன்றுதான் கண்டேன் இவனை.” என்று உரக்கக் கத்திக் கூச்சலிட்டு ஆடிப் பாடினார். அனைவரும் ஆச்சரியப் பட ராமலிங்க அடிகளோ எப்போதும்போல் சாதாரணமாகவே இருந்தார். சோமு செட்டியாரோ மீண்டும் ஆச்சரியத்துடன் அடிகளைக் கண்டு, இதென்ன ஸ்வாமி என வினவ ராமலிங்க அடிகள் அவரைக் கண்டு பேசிவிட்டு வருவதாய்க் கூறிவிட்டு அவரருகில் சென்றார். அடிகளைக் கண்டதுமே அந்தத் துறவிக்கு வெட்கம் சூழ்ந்தது. மேனி கூசியது. தம் நிர்வாணத்தை மறைக்க ஆரம்பித்தார். ராமலிங்க அடிகளைக் காணக் காண அவருக்கு மேலும் மேலும் வெட்கம் வந்தது. ராமலிங்க அடிகள் அவரை வணங்கினார்.“ஆஹா, எனக்கு அருள் புரிய வந்த ஞான ஜோதியே! யாம் இனி காட்டுக்குச் செல்கின்றோம். இனி நமக்கு அதுவே வீடு.” என்று சொல்லியவண்ணம் அங்கிருந்து சென்றுவிட்டார். அடிகளும் திரும்பிவந்து தம் சீடர்களோடு சேர்ந்து கொண்டார். அப்போது வேலாயுத முதலியார் ஸ்வாமிகளுக்காகவே அந்தத் துறவி காத்துக்கொண்டிருந்ததாகவும், இன்று அவர் நோக்கம் நிறைவேறியதும் சென்றுவிட்டதாகவும், அதைப் புரிந்து கொண்டே ஸ்ரீ அடிகள் இந்தத் தெருவில் நுழைந்து செல்ல ஆரம்பித்ததையும் புரிந்து கொண்டதாய்ச் சொல்ல சோமு செட்டியாருக்கும் அப்போது தான் விஷயம் விளங்கிற்று. ஒற்றியூர் கோயிலுக்குச் சென்று திரும்ப தினம் தினம் ராமலிங்க அடிகளுக்கு நேரம் ஆகிவிடும். அவர் வரவுக்காக வெகுநேரம் காத்திருந்து, காத்திருந்து பார்த்துவிட்டு அவர் அண்ணியான பார்வதி அம்மை ஒருநாள் தம்மை அறியாமல் தூங்கிவிட்டார். அவர் தூங்கிச் சிறிது நேரம் சென்றே அடிகள் வீட்டுக்குள் வந்தார். அண்ணி தூங்கிவிட்டார் என்பதை அறிந்ததுமே அண்ணியை எழுப்பித் தொந்தரவு கொடுக்கவேண்டாம் என உணவு உண்ணாமலேயே படுத்துவிட்டார். வடிவுடை அம்மை அவர் நினைவில் தோன்ற அம்மையைத் தியானித்துக் கொண்டே உறங்கவும் ஆரம்பித்தார்.

ஆனால் அன்னைக்குத் தாங்கவில்லை. எந்த அன்னை?? சாட்சாத் அந்த வடிவுடையாளுக்குத் தான். தன் கோயிலுக்கு வந்த பிள்ளை, தன் மேல் பாடல்கள் புனைந்த பிள்ளை இப்படி உண்ணாமல் உறங்குவது கண்டு பொறுக்கவில்லை அவளுக்கு. என் மேல் மாணிக்க மாலை பாடிய பிள்ளை இப்படிப் பசியுடனா உறங்குவது?? வடிவுடையாள் உடனே அங்கே அடிகளது அண்ணி பார்வதி அம்மையின் உருவில் தோன்றினாள். வலக்கையில் உணவு வட்டில், இடக்கையில் குடிநீர்ச் செம்பு. அண்ணி எவ்விதம் எழுப்புவாரோ அவ்விதமே, “தம்பி ராமலிங்கம், எழுந்திருங்கள்.”என்று எழுப்பினார்.

உணவுப் பாத்திரத்தை அடிகளிடம் கொடுத்து உணவு அருந்தச் சொன்னார். இவ்வளவு நேரம் சென்றும் தம் அண்ணியார் உணவோடு தம்மை எழுப்புவதைக் கண்டு, அந்த அன்பில் மனம் உருகினார் வள்ளலார். மேலும் இனி அண்ணிக்கு இத்தகைய தொந்தரவைக் கொடுக்காமல் பார்த்துக்கொள்வதாயும் வாக்குக் கொடுத்தார். உணவருந்திய பின்னர் ராமலிங்கத்திற்குத் தம்மையும் அறியாமல் நித்திரை பெரும் மயக்கமாய் வர, புன்னகை பூத்த அன்னை மறைந்தாள். இங்கே அவருடைய அண்ணியார் உண்மையாக உறக்கம் கலைந்து எழுந்தார். ராமலிங்கம் உணவு அருந்த வரவில்லை என்பதும், தாம் அப்படியே அசதியில் உறங்கியதும் நினைவில் வர, எழுந்து வெளியே வந்து பார்த்தார். ராமலிங்கம் திண்ணையில் படுத்திருப்பதைக் கண்டதும், மனம் பதறி, அவரை எழுப்பினார். மீண்டும் தூக்கம் கலைந்த அடிகள், “என்ன அண்ணி?” என வினவ, “உணவு அருந்த வாருங்கள், தம்பி, அசதியில் உறங்கிவிட்டேன் போலிருக்கிறது.” என்று கனிவோடு அழைக்க வியப்பின் உச்சிக்கே போனார் அடிகளார்.“அண்ணி, இப்போது தானே உணவு கொடுத்தீர்கள்? தாங்கள் அளித்த உணவைத் தானே சாப்பிட்டேன்?” என்று சொல்ல, பார்வதி அம்மை குழம்பினார். குழப்பத்துடனேயே, “இல்லை தம்பி, நான் உறங்கிவிட்டேன். கதவையும் தாழிட்டு இருந்தேனே? இப்போதுதானே உறக்கம் கலைந்து வருகிறேன்?” என்று சொன்னார். மேலும் “நீங்கள் பசியோடு இருப்பீர்களே, உணவு பரிமாறத் தான் அழைத்தேன்.” என்றும் கூறினார். அடிகளார் அப்படியானால் எனக்கு உணவு பரிமாறியாது அண்ணியார் இல்லை எனில் பின்னர்?? தம்மை மறந்த நிலையில் தியானிக்க ஆரம்பித்தார். அப்போது வலக்கையில் உணவுப் பாத்திரத்துடனும், இடக்கையில் நீர்ச்செம்போடு வடிவுடை அம்மன் அவருக்குக் காட்சி கொடுக்க, பின்னர் கண்விழித்த அடிகளார் தம் அண்ணியிடம் வடிவுடையாளே வந்து தமக்கு உணவு கொடுத்திருப்பதைக் கூறினார். அந்தக் காட்சி உடனே ஒரு பாடலாகவும் வந்தது அவருக்கு.“தெற்றியிலே நான் பசித்துப் படுத்திளைத்த தருணம்

திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத்தெடுத்தே

ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங்கெழுப்பி
உவந்து கொடுத்தருளிய என் உயிரிக்கிதாந்தாயே

3 comments:

 1. //அப்படியானால் எனக்கு உணவு பரிமாறியாது அண்ணியார் இல்லை எனில் பின்னர்?? தம்மை மறந்த நிலையில் தியானிக்க ஆரம்பித்தார். அப்போது வலக்கையில் உணவுப் பாத்திரத்துடனும், இடக்கையில் நீர்ச்செம்போடு வடிவுடை அம்மன் அவருக்குக் காட்சி கொடுக்க, பின்னர் கண்விழித்த அடிகளார் தம் அண்ணியிடம் வடிவுடையாளே வந்து தமக்கு உணவு கொடுத்திருப்பதைக் கூறினார்.//
  அடிகளாரின் அதிர்ஷ்டத்தை என்ன வென்று சொல்வது !!
  வடிவுடை அம்மன் நேரில் வந்து உணவு இட்டு காட்சி கொடுப்பது பெரும் பேறு அல்லவா !!

  ReplyDelete
 2. படிக்கும் போதே கண் கலங்குகிறதே;
  நேரில் பார்த்த அடிகளாருக்கு எப்படி இருந்து இருக்கும் !

  ReplyDelete
 3. எல்லாத்துக்கும் கொடுத்து வைச்சிருக்கணுமே. அடிகளார் ஒரு மகான் அல்லவா!

  ReplyDelete