Monday, March 14, 2011

முருகன் வந்து அருள் செய்த பாம்பன் ஸ்வாமிகள்!

இந்தப் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்களைத் தவிர பாம்பன் ஸ்வாமிகள் எழுதிய மற்றப் பாடல்கள் வருமாறு: பரிபூரணாநந்த போதம், சிவசூரிய பிரகாசம், சுத்தாத்வைத நிர்ணயம், தகராலய ரகசியம், சதாநந்த சாகர, சிவஞான தீபம், காசி யாத்திரை, சேந்தன் செந்தமிழ், அமைதி ஐம்பது, திருப்பா, ஸ்ரீமத் குமாரசுவாமியம், குமாரஸ்தவம், திவோத்ய ஷடக்ஷரோப தேசம் என்னும் சிவஞான தேசிகம் என உள்ளன. ஸ்வாமிகள் செய்த யாத்திரைகளும் கணக்கில் அடங்காதது. ராமநாதபுரம், உத்தரகோசமங்கை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை, திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம், என்று சென்ற ஸ்வாமிகள் பழநி முருகனின் உத்தரவு கிடைக்காததால் பழநி சென்றதில்லை என்றும் சொல்லுகின்றனர். தருமமிகு சென்னைக்கும் வந்து தன் திருவருளைக் காட்டி இருக்கிறார் பாம்பன் ஸ்வாமிகள். அவ்வாறு ஒருமுறை சென்னை வந்திருந்த ஸ்வாமிகள், சென்னை பாரிமுனையில் தம்புச்செட்டித் தெருவில் நடந்து சென்ரு கொண்டிருந்தார். அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு குதிரை வண்டி ஸ்வாமிகளின் காலில் ஏறியது. எலும்பு முறிந்து மயங்கிச் சரிந்த ஸ்வாமிகள் பக்தர்களால் அரசு பொது மருத்துவமனையில் அநுமதிக்கப் பட்டார். இது நடந்தது 1923-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்று சொல்லுகின்றனர்.மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட ஸ்வாமிகளைக் காண பக்தர்கள் கூட்டம் திரண்டது. அனைவரும் மனம் பதறினார்கள். ஸ்வாமிகள் விரைவில் நலம்பெறவேண்டி ஸ்வாமிகளின் சீடர்களில் ஒருவரான சின்னசாமி ஜோதிடர் என்பவர் தன் வீட்டிலேயே சண்முக கவசம் பாராயணம் பண்ண ஆரம்பித்தார். தினமும் இது தொடர்ந்தது. அப்போது ஜோசியருக்கு ஒருநாள் பாராயணம் செய்யும்போதே ஸ்வாமிகளின் திருவுருவும், அவரின் முறிந்த காலை இருவேல்கள் தாங்கிப் பிடித்த வண்ணம் காக்ஷி அளிப்பதும் தெரிந்தது. கண்ணால் இந்தக் காக்ஷியைக் கண்ட ஜோசியர் ஆநந்தத்தில் துள்ளிக் குதித்தார். அன்று மட்டுமில்லாமல் தினமும் அவர் பாராயணம் செய்யும்போதெல்லாம் அந்தக் காக்ஷி தோன்றி மறைந்தது. மருத்துவமனையில் ஸ்வாமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் உணவில் உப்பு, புளி, காரம் போன்றவை இல்லாமையாலும், உண்ணும் உணவின் அளவும் வெகுவாய்க் குறைவாய் உள்ளதாலும் முறிந்த கால் சேரும் அளவுக்கான வலுவான உடல் நிலை இல்லை, என்று சொல்லி விடவே அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது ஒருநாள் மருத்துவ மனையில் சேர்ந்து பதினோராம் நாளன்று இரவில் பாம்பன் ஸ்வாமிகளுக்கு ஓர் அற்புதக் காக்ஷி கண்களில் தெரிந்தது. இரண்டு மயில்கள் அதி அற்புத நடனத்தை ஆடிக் கொண்டே ஆகாயத்தில் துள்ளி விளையாடின. ஒன்று பெரியதாகவும், மற்றது சின்னதாகவும் இருந்தது. அவற்றின் கால்கள் தரையில் படாமல் ஆகாயத்திலேயே அதி அற்புதமான நாட்டியத்தை ஆடின அவ்விரு மயில்களும். முருகனின் திருவருளை எண்ணி வியந்த ஸ்வாமிகள் இரு கரம் குவித்து வணங்கிய வண்ணமே இருந்தார். அடுத்த சில நாட்களில் முருகன் ஒரு குழந்தை வடிவில் அவருக்குக் காக்ஷி கொடுத்தான்.படுக்கையில் இருந்த ஸ்வாமிகள் செக்கச் செவேல் எனச் சிவந்த நிறத்துடன் கூடிய ஒரு குழந்தை சிரித்த முகத்தோடு வந்து தன்னைக் கண்டு சிரிப்பதைக் கண்டார். அது முருகன் தான் என்பதும் புரிந்தது அவருக்கு. சில விநாடிகளில் குழந்தை மறைந்தது. ஆனாலும் மயில்களின் ஆட்டத்தின் மூலமும், குழந்தை வடிவில் காக்ஷி கொடுத்ததின் மூலமும், முருகன் தன்னுடன் இருப்பதை உணர்த்துவதாகவே புரிந்து கொண்டார் பாம்பன் ஸ்வாமிகள். சில நாட்களில் கணுக்கால் எலும்பு முறிவும் சேர்ந்து கூடிவரவே மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தம் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தைச் சென்னையிலேயே கழித்தார் ஸ்வாமிகள். அவரே தன் இறுதிக்காலத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று சொல்லலாம். வைகாசி மாசம் தேய்பிறை சஷ்டியில் அவிட்ட நக்ஷத்திரம் கூடிய வியாழக்கிழமையில் காலை ஏழேகால் மணிக்கு அனைவரும் அறியும் வண்ணம் சுவாசத்தை உள்ளுக்கு இழுத்துக் கொண்டார். உள்ளே இழுத்த மூச்சை வெளியே விடவே இல்லை. உள்ளேயே ஒடுங்கிப் போன மூச்சுடனேயே முருகனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார். இந்தச் சமாதி நிலையை குக சாயுஜ்ய நிலை என்று சொல்லுவார்கள் எனக் கேள்விப் படுகின்றோம்.பக்தர்களால் இரவு பூராவும் திருப்புகழும், முருகன் குறித்த பல்வேறு பாடல்களும் பாடப் பட்டு மறுநாள் திருவான்மியூரில் ஏற்கெனவே ஸ்வாமிகள் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் சமாதிக் கோயில் அமைக்கப் பட்டது. சமாதியான் அதினத்துக்கு மறுநாள் காலை சமாதியுள் அலங்காரத்துடன் ஸ்வாமிகளை அங்கே எழுந்தருளச் செய்தனர் பக்தர்கள். சமாதிக் கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், சமாதிக்குள்ளாக ஸ்வாமிகளின் திருமுகம் வடக்கே பார்த்து இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அங்கே ஒரு கோமுகம் அமைக்கப் பட்டு வில்வமரமும் வைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் அங்கே இருந்தவாறு தியானம் செய்வது சிறப்பாகச் சொல்லப் படுகிறது. சமாதித் திருக்கோயிலின் உள் தோற்றத்தைத் தரிசிக்க முடியாது என்றும் திருக்கோயிலின் திருக்கதவு மூடியே இருக்கும் என்றும் ஸ்வாமிகளின் திருவுருவப் படம் அங்கு வழிபாட்டில் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். படத்துக்கு மட்டுமே பூஜை, வழிபாடுகள் எனவும் சொல்லுகின்றனர். காரணம் தெரியவில்லை. இன்னும் போகவில்லை இந்தக் கோயிலுக்கு. போனால் ஏதேனும் தகவல்கள் கிட்டலாம்.

No comments:

Post a Comment