Thursday, March 10, 2011

முருகன் வந்து அருள் செய்த பாம்பன் ஸ்வாமிகள்!

ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள்:-

ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வந்த நெல்வியாபாரியான சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமல அம்மையாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு அப்பாவு எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கி.பி.1850—ம் ஆண்டில் விரோதிகிருது வருடத்தில் வெள்ளிக்கிழமை அன்று பிறந்த அந்தக் குழந்தைக்குத் தமிழும், நீச்சல், ஓவியம், தையல் பயிற்சி எனப் பல்வேறுவிதமான கலைகளும் பயிற்றுவிக்கப் பட்டது. தமிழ் சொல்லிக் கொடுத்த முனியாண்டியா பிள்ளையால் இவரின் தமிழறிவு மிகவும் மேம்பட்டு விளங்கியது. சிறு பிராயத்திலேயே இவர் மிகவும் போற்றத் தகுந்த தெய்வீகமும், ஆன்மீகமும் கலந்த வாழ்க்கையை வாழப் போகின்றார் என்பது ஒரு சோதிடர் மூலம் தெரிய வந்தது. பாம்பனில் அப்பாவு தன் தந்தையாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் நண்பர்களான மற்றச் சிறுவர்களோடு அமர்ந்திருந்த வேளையில் அவர்களைக் கடந்து ஒருவர் சென்றார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை செல்லும் பயணிகள் படகு மூலமே பயணப் பட்டு வந்தனர். அந்தப் படகுகள் இந்தத் தென்னந்தோப்புக்கு அருகே இருந்த படகுத் துறையில் இருந்தே சென்று கொண்டிருந்தன. அவ்விதம் இலங்கை சென்று கொண்டிருந்த ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தாண்டிச் சென்றவர் என்ன நினைத்தாரோ, திடீரென நின்றார்.



சிறுவர்களை ஒரு நோட்டம் விட்டார். பின்னர் அந்தக் குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஒரு ஜோதிடர் என்பதை அறிந்த சிறுவர்கள் தங்கள் எதிர்காலத்தை அறிய எண்ணி அவரிடம் தங்கள் கையைக் காட்டினார்கள். அனைவருக்கும் பலன் சொன்ன ஜோதிடர், அப்பாவுவின் கையையும் பார்த்தார். ரேகைகளின் அமைப்பைப் பார்த்து வியந்த ஜோதிடர், அவரின் வாயைத் திறந்து நாக்கையும் காட்டுமாறு கேட்டார். அவ்விதம் அவருடைய நாக்கையும் சோதித்து அறிந்த ஜோதிடர், அவரிடம், “தம்பி, உன் திருவாக்கும் சரி, திருக்கரமும் சரி, அதிசயமான ஒன்றாய் உள்ளது. உன் ஜாதகம் சிறப்பாக உள்ளது. உன்னுடைய அசைவுகளுக்காக எதிர்காலமும், மக்களும் காத்திருக்கின்றனர். சிறப்பாக இருப்பாய்.” என்று ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார். அவர் சொன்னது புரியாமல் மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்த அப்பாவு ஒருநாள் தோப்புக்கு வந்தபோது தந்தை தோப்பினுள் இருப்பதை அறிந்து வெளியே நின்றபோது, திடீரென அவர் மனதில் கந்தனைக்குறித்து, கந்த சஷ்டி கவசத்துக்கு ஈடாகும்படியான பாடல்கள் புனையும் ஆவல் தோன்ற, உடனேயே அவர் கருத்தில், “கங்கையைச் சடையிற் பரித்து” என்னும் சொற்கள் தோன்ற, தன் இடுப்பிலிருந்து ஓலையை எடுத்து இதைத் துவக்கமாக வைத்து முதல் பாடலை எழுதினார். அதன் பின்னர் அவர் எழுதிய பாடல்கள் பலவாகும். அவற்றில் குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக இன்றும் உள்ளன.



1878-ம் ஆண்டு வைகாசி மாதம் இவருக்குக் காளிமுத்தம்மை என்னும் பெண்ணுடன் திருமணமும் நடந்தது. திருமணம் ராமநாதபுரத்தில் நடந்தது. பாம்பனில் மனைவியுடன் வாழ்ந்த இவருக்கு இரு ஆண் மக்களும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஒருவயது ஆகும் முன்னேயே முருகன் இவரை ஆட்கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்பதை மறைமுகமாய் உணர்த்தினான் என்பார்கள். இவரை எந்த விதத்திலும் எதற்கும் கட்டாயப் படுத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தும் இவருடைய மனைவி, அழும் பெண்குழந்தையைச் சமாதானம் செய்யத் திருநீறு பூசும்படி இவரிடம் கேட்க, பாம்பன் ஸ்வாமிகளோ தான் யாருக்கும் திருநீறு தருவதில்லை என்றும், அந்த முருகனிடமே கேட்கும்படியும், அவன் தான் தருவான் என்றும் சொல்லிவிட்டார். செய்வதறியாது அந்த அம்மையார் விடாமல் அழும் குழந்தையை எப்படி எப்படியோ சமாதானம் செய்தும் குழந்தை அழுகை நிற்கவே இல்லை. அப்போது திடீரெனக் காவி உடை அணிந்த சந்நியாசி ஒருவர் வீட்டினுள் நுழைந்து, அழும் குழந்தையை வாங்கி உடல் முழுதும் திருநீறு பூசிவிட்டுக் குழந்தை இனிமேல் அழாமல் தூங்கும் என்றும் சொன்னார். பின்னர் அவர் வந்த மாதிரியே மறைந்து போகக் குழந்தை அழுகையை நிறுத்தித் தூங்க ஆரம்பிக்கிறது.


பாம்பன் சுவாமிகள் இன்னும் வருவார்.

4 comments:

  1. நல்ல பதிவு கீதாம்மா.

    இப்போது தான் முதல் முதலாக பாம்பன் சுவாமி வாழ்கை வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன்.

    நன்றி ..

    ReplyDelete
  2. இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
    சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
    தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
    குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே

    இந்த தடவை பாம்பன் ஸ்வாமி சமாதி, அறுபடை வீடு போய் பார்த்தோம் . மன அமைதியை தரும் இடம். தபோவனத்தை அந்த பெரிய ஹால் நினைவூடியது

    ReplyDelete
  3. வாங்க ப்ரியா, எப்போவோ கொடுத்த கமென்டுக்கு இப்போ பதில் கொடுக்கிறேன், மன்னிக்கவும். :(

    ReplyDelete
  4. வாங்க ஜயஸ்ரீ, பாம்பன் ஸ்வாமிகள் சமாதி நாங்க போனதில்லை. :(

    ReplyDelete