Friday, July 1, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலாரின் சீடர்களில் ஒருவரான கல்பட்டு ஐயா உடனே, வள்ளலாரிடம், “சுவாமி, சமரச சுத்த சன்மார்க்கத்தின் வழிமுறைகளும், கொள்கைகளும் என்ன என்று தெரிந்தால் நாங்கள் அதன்படியே நடப்போம்,” என்று கூற, அடிகளாரும் மிகவும் எளிய கொள்கைகளே அவை என்று கூறிவிட்டு ஒவ்வொன்றாய்க் கூறலானார்.

“இறைவன் ஒருவரே! ஒருவனாகிய இறைவனை நம் உண்மையான அன்போடு ஒளிவடிவில் வழிபட்டு வரவேண்டும். இந்த ஒரே இறைவனை ஒளிவடிவில் வழிபடுவது தவிர மற்றச் சிறுதெய்வங்கள் வழிபாடு கூடாது. உயிர்ப்பலியும் கூடாது. புலால் உண்ணுவதையும் தவிர்க்கவேண்டும். சாதிவேறுபாடுகளோ, சமய வேறுபாடுகளோ காட்டி ஒருவரை மற்றவர் தாழ்த்தக் கூடாது. அனைத்து உயிர்களும் நம் உயிர் போல் கண்ணுக்குக் கண்ணாகக் கருத வேண்டும். ஏழைகளின் பசி அறிந்து அவர்கள் பசியைப் போக்குதலே முக்கியக் கடமையாகக் கொள்ளவேண்டும். புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்காது. இறந்தவரைப் புதைக்கவேண்டும். அவர்களுக்கான ஈமச் சடங்குகளையும் தவிர்த்தல் நன்று. இக்கொள்கைகளைப் பின்பற்றவும் இவற்றைப் பரப்பவுமே இந்த சுத்த சமரச சன்மார்க்கநெறியை உங்கள் அனைவரின் உதவியோடு கடைப்பிடிக்கவுமே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் நிறுவி இருக்கிறேன். இறைவன் என்னை மனிதனாகப் பிறப்படைய வைத்ததின் காரணமும் இதுதான்.” என்றார்.

“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற்கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே”
என்ற பாடலைப் பாடிய வள்ளலார், இந்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்து உய்வடையும்படி அனைவரையும் அழைப்பதாயும் கூறியதோடு, இந்த மார்க்கத்தைப்பின்பற்றுவதால் ஏற்படும் பயனையும் கூறினார்.

“மார்க்கம் எலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மை இது
தூக்கம் எலாம் நீக்கித் துணிந்துளத்தே-ஏக்கம்விட்டுச்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்
நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள்.”
அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளலார் புறப்பட அவருடைய அணுக்கத் தொண்டர்களான வேலாயுத முதலியார், கல்பட்டு ஐயா, வேங்கட ரெட்டியார் ஆகியோர் அவரைத் தொடர்ந்தனர்.

கடலூர். பங்குனி உத்திரம் கிண்ணித் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அப்பாசாமிச் செட்டியார் என்பவரது வீட்டில் நண்பர்கள் கூடி இருந்தனர். புதுவையைச் சேர்ந்த உறையூர் துரைசாமிப் பிள்ளை என்பவர் செட்டியாரிடம் அவர் தமையனாரின் நாக்குப் புற்றுநோய் பற்றி விசாரித்தார், இப்போது எப்படி இருக்கிறார் என்றும் கேட்டார். அப்பாசாமிச் செட்டியார் எவ்வளவு வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருந்தபோது, அப்படியே விட்டு விடாதீர்கள், வேறு வைத்தியம் பாருங்கள் என்று துரைசாமிப் பிள்ளை குறுக்கிட்டார். அப்பாசாமிச் செட்டியார், அப்படியே விடவில்லை என்றும் கருங்குழியில் உள்ள அருட்சித்தரிடம் கொண்டு காட்டியதாகவும் கூறினார்.

துரைசாமிப் பிள்ளைக்கு ஆச்சரியம் மேலிட, “இராமலிங்க அடிகளாரையா சொல்கிறீர்?” என்று கேட்க,”ஆம், அவரை உமக்குத் தெரியுமா?” என்று செட்டியார் வினவ, தாமும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவரே எனப் பிள்ளை தெரிவித்தார். பின்னர் செட்டியார் தம் தமையனாரைக் கருங்குழிக்கு அழைத்துச் சென்றதாயும் அடிகளார் தமையனாரிடம் மூன்று வேளை பூசிக்கொள்ளவும், உட்கொள்ளவும் திருநீறு கொடுத்ததாயும், அவ்வாறே செய்ததில் முற்றிலும் குணமாகிவிட்டதாயும் கூறினார். அது சமயம் அப்பாசாமிச் செட்டியாரின் தமையனாரே அங்கே வர, அவைடமே துரைசாமிப் பிள்ளை விசாரித்தார். அவரும் அடிகளார் செய்த அற்புதத்தைக் கூறிவிட்டுத் தம்பிடம், “அடிகளார் உள்ளே இருக்கிறாரா?” என்று வினவ, பிள்ளையவர்கள், அடிகளார் வந்திருக்கும் செய்தியைக் கூறவே இல்லையே என வருந்தினார். அப்பாசாமிச் செட்டியார், தான் நேரிலே சென்று அடிகளாரைக் கிண்ணித் தேர் விழாவுக்காக அழைத்து வந்ததாயும், சுவாமிகள் ஏகாந்தத்தில் திளைத்திருப்பதால் அவருக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற எண்ணத்தினாலேயே கூறவில்லை என்றும் கூறினார்.
அடிகளார் ஏகாந்த்த்தை விட்டுவிட்டு நம்மை அழைக்கும் வரை காத்திருப்போம் என அனைவரும் முடிவெடுக்க, அப்போது புதிய மனிதர் ஒருவர் வெகுவேகமாய் அவர்களைக் கடந்து உள்ளே சென்றார். அனைவரும் ஆச்சரியமாய்ப் பார்த்தனர். வந்தவரின் ஒளி வீசும் தோற்றத்தைக் குறித்து அனைவரும் வியந்து பேசிக்கொள்ள, உள்ளே சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தனர்.

No comments:

Post a Comment