Sunday, July 31, 2011

அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை!

அடிகளார் மிகுதியாய் இருந்த நீரை ஊற்றி மீண்டும் விளக்கை எரிக்க விளக்குச் சுடர் விட்டுப் பிரகாசித்தது. இறைவனின் பேரருளை எண்ணிப் பரவசம் அடைந்த அடிகள் அதைக் குறித்து ஒரு பாடலை எழுதினார்:


“மெய்விளக்கே விளக்கல்லால் வேறு விளக்

கில்லையென்றார் மேலோர் நானும்

பொய் விளக்கே விளக்கெனவுட் பொங்கிவழி

கின்றேனோர் புதுமை யன்றே

செய்விளக்கும் புகழுடைய சென்னநகர்

நண்பர்களே செப்பக் கேளீர்

நெய்விளக்கே போன்றொரு தண்ணீர் விளக்கு

மெரிந்து சந்நிதி முன்னே”


என்று பாடலை முடித்துவிட்டுத் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று பக்தி உணர்வில் கூறிக்கொண்டே தியானத்தில் ஆழ்ந்தார். தன் பொருட்டு ஈசன் செய்த இந்தப் பெருஞ்செயல் அவர் மனதை உருக்கியது. மேலும் அந்த தீப ஒளியில் இதுவரையிலும் தமக்காக ஈசன் செய்த அருட் செயல்கள் அனைத்தும் காட்சிகளாய்த் தெரிய உடலும் உள்ளமும் நெகிழ்ந்து குழைந்து மெழுகெனக் கரைந்தார். மேலும் ஒரு பாடல் புனைந்தார்.“என் வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே

என்முன் அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித்

தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பை அவிழ்த் தெனக்குத்

தகுசுடர்ப்பூ அளிக்கவும் நான் தான் வாங்கிக் களித்து

மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்

வேண்டுமென முன்னாது விரும்பியளித்தனம் நாம்

உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்

ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே!’


என்று பாடி தீபத்தை நமஸ்கரித்துவிட்டு உலாவுவதற்காக ஓடைக்கரைக்குச் சென்றார்.


சென்னை நகரில் அவர் நண்பர்கள் அனைவரும் ஒருங்கே கூடி அடிகளாரின் பாடல்களைத் தொகுப்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர் இரத்தின முதலியார் வீட்டிலே. இங்கே இரத்தின முதலியார் வீட்டில் ஒரே கலகலப்பு. புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார் ஆகியோர் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தபால் ஒன்று வந்தது. கடிதம் அடிகளிடமிருந்து என்று கண்டதும் அனைவரும் மகிழ்ந்தனர். கடித்த்தைப் படிக்கச் சொன்னார்கள் மற்றவர்கள் அனைவரும். அவ்வாறே இரத்தின முதலியார் கடிதத்தைப் படித்தார். அனைவருக்கும் தம் ஆசிகளைத் தெரிவித்திருந்த அடிகள் தாம் இதுவரையில் எழுதிய பாடல்களைச் சிதற விட்டிருப்பதாயும் அவைகளைச் சேர்ப்பிக்க இரண்டு மாதம் பிடிக்குமென்றும் பங்குனி மாதத்துக்குள் சேர்ப்பித்துவிட்டுச் சென்னை வருவதாயும் எழுதி இருந்தார். மேலும் இரத்தின முதலியார் தம் பாடல்களைப் பற்றியும் அவை சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் தம்மிடம் தெரிவித்திருந்தவைகளையும் குறிப்பிட்டுவிட்டு இரத்தின முதலியார் உணவு கூட உட்கொள்ளாமல் தம் பாடல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று எழுதி இருந்ததைப் படித்த தமக்கும் உணவு உடலில் பொருந்தாமல் இருப்பதாயும் குறிப்பிட்டிருந்தார்.மேற்கண்ட விஷயங்களைக் கடிதம் மூலம் படித்த இரத்தின முதலியார் ஆஹா, ஸ்வாமிகளுக்கு மனவேதனையைக் கொடுத்துவிட்டேனே என்று கலங்கிப் போனார். அனைவருக்கும் அந்தக் கலக்கம் அதிகம் ஆனது. மேலே கடிதத்தைப் படித்த இரத்தின முதலியார் எதுவும் பேசாமல் கண்கள் கலங்கி தேம்ப ஆரம்பிக்க, வேலாயுத முதலியார் கடித்த்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். அதிலே ஸ்வாமிகள், இரத்தின முதலியாரை போஜனம் ஒருவேளை மட்டுமே உட்கொள்ளும் நிபந்தனை வைத்திருந்ததை நீக்கித் தமக்கு அமைதியைத் தருமாறும், அதுவரையிலும் தாமும் ஒருவேளையே போஜனம் உட்கொள்ளுவதாயும் மும்முறை சத்தியம் செய்து எழுதி இருந்தார். இதைப் படித்த வேலாயுதம் முதலியாரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டார். கடிதத்தை மேற்கொண்டு அவராலும் படிக்க இயலவில்லை. இரண்டு மாதத்துக்குள்ளாகப் பாடல்களைச் சேர்ப்பித்து அனுப்பி வைப்பதாகவும் ஆகவே இரத்தின முதலியார் நிபந்தனையைத் தளர்த்திக்கொண்டு உணவு உட்கொள்ள ஆரம்பிக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு அடிகள் கடிதத்தை முடித்திருந்தார். இரத்தின முதலியாரின் வேதனை அதிகமாயிற்று. கதறி அழ ஆரம்பிக்க, அனைவரும் அவர் செய்த இச்செயலால் நன்மையே விளைந்தது என்றும், இல்லை எனில் அடிகளார் தம் பாடல்களைப் பதிப்பிக்க ஒத்துக்கொண்டிருக்க மாட்டார் எனவும், வருங்கால சந்ததியினருக்கு அடிகளாரைப் பற்றியும், அவர் தம் பாடல்கள் குறித்தும் தெரியாமல் போயிருக்கும் என்றும் பலவாறு அவரைத் தேற்றி, இரத்தின முதலியார் உணவு உட்கொள்ள ஏற்படுத்தி இருந்த நிபந்தனையை விலக்கிக் கொள்வதாய்க் கடிதம் எழுதுமாறும் ஆலோசனை கூற இரத்தின முதலியாரும் அதை ஒத்துக்கொண்டு அவ்விதமே கடிதம் எழுதினார்.

No comments:

Post a Comment