Sunday, July 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சுந்தரம் பிள்ளை எழுதிக்கொண்டிருக்கும் மநோன்மணீயம் நாடக நூல் பற்றித் தம்மிடம் தெரிவித்ததாய் சுந்தர ஸ்வாமிகள் கூறிவிட்டு சன்மார்க்க அடியார்கள் காத்திருப்பதைக் கவனித்து அவர்களை அருகே அழைத்தார். அவர்கள் வந்த காரணத்தையும் விசாரித்து அறிந்தார். இராமலிங்க ஸ்வாமிகள் அனுப்பி வந்திருக்கிறதைத் தெரிந்து கொண்ட சுந்தரஸ்வாமிகள் அளவற்ற ஆனந்தம் கொண்டு, அடிகளின் அருளாற்றல் குறித்தும், பிரசங்கம் செய்யும் அருமை, அருட்பாக்கள் இயற்றும் திறமை, ஐயங்களைத் தீர்த்து வைக்கும் பொறுமை என அனைத்தையும் குறித்துத் தாம் அறிந்திருப்பதாய்க் கூறித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வந்தவர்களும் மகிழ்வுற்று அடிகளார் காண விரும்புவதைத் தெரிவிக்க, தாமே வந்து அவரைக் காண்போம் என சுந்தர ஸ்வாமிகள் தெரிவித்து அடிகளார் எழுந்தருளி இருக்கும் இடத்தையும் கேட்டு அறிந்து கொண்டார்.

பின்னர் அடிகளாரைத் தரிசிக்க வடக்குச் சந்நிதி வீதிச் சத்திரத்துக்குக் கிளம்பினார் கோடகநல்லூர் சுந்தர ஸ்வாமிகள். மாலை ஆகி விட்டிருந்தது. அடிகளார் தம் அன்பர்கள் மற்றும் வேலூரிலிருந்து காண வந்திருந்த நாகப்பிள்ளை ஆகியோரோடு அளவளாவிக்கொண்டிருந்தார். அப்போது சுந்தர ஸ்வாமிகள் அங்கே நுழைய அவரைக் கண்டதும் இன்னார் என அறிந்து கொண்ட வள்ளலார், தாமும் எழுந்து நின்று அவரை வணக்கம் தெரிவித்து வரவேற்றார். பரஸ்பர அறிமுக வணக்கங்கள் முடிந்ததும், ஸ்வாமிகளை அமர வைத்தார் வள்ளலார். ஆனால் சுந்தர ஸ்வாமிகளோ வள்ளலாருக்குச் சமமாகத் தாம் அமருவதா என நினைத்துக்கொண்டு சற்று ஓரமாய்ப் போய் ஒதுங்கி அமர, அடிகளாருக்கு ஆச்சரியம் மேலிட்டது. இது என்ன வழக்கம் என சுந்தர ஸ்வாமிகளை வள்ளலார் வினவ, பெரியோருக்கு எதிரே சமமாக அமர்வது பண்பாடில்லை என்பதால் ஒதுங்கி அமர்ந்ததாய் சுந்தர ஸ்வாமிகள் கூற வள்ளலாருக்கு வியப்பும் அதை விட அதிகமாய் வருத்தமும் மேலோங்கியது.

"ஆஹா, எப்பேர்ப்பட்ட மஹான் தாங்கள்? தங்களை விடவா நான்?? இந்த சிதம்பரத்தில் தாங்கள் எழுந்தருளி இருப்பதைத் தெரிந்துகொண்டு தங்களைத் தரிசிக்க எண்ணினேன். நானோ வெள்ளாடைத் துறவி. ஆனால் துவராடைத் துறவியான தங்களை நானல்லவோ வந்து தரிசித்தல் முறை. அதனாலேயே என் அன்பர்களை அனுப்பித் தங்கள் வசதியைத் தெரிந்து வரச் சொன்னேன். ஆனால் தாங்களோ வழக்கத்தை மீறி என்னைத் தரிசிக்க என் இருப்பிடம் வந்துவிட்டீர்களே! அதோடு இப்படி ஓரமாயும் அமர்ந்துவிட்டீர்களே
!" என்று வருந்தினார் வள்ளலார்.

சுந்தர ஸ்வாமிகளோ தம் மனம் தமக்கு இட்ட கட்டளையையே தாம் பின்பற்றியதாய்க் கூறவே வள்ளலாரும் அவர் கூறியதன் உட்பொருளை உணர்ந்து கொண்டார். வள்ளலார் அதன் மேல் சுந்தர ஸ்வாமிகள் திருவையாறோடு சேர்ந்த ஸப்தஸ்தானத் தலங்களுக்கும், திருமழபாடியிலும் பல முயற்சிகளின் பேரில் திருப்பணிகள் செய்வித்து ஒரே நாளில் கும்பாபிஷேஹமும் செய்வித்ததைத் தாம் கேள்விப் பட்டதாயும் அருமையான இத்தகைய சிவ கைங்கரியத்தைச் செய்ததுக்கு சுந்தர ஸ்வாமிகளைப் பாராட்டியும் மகிழ்ந்தார். அப்போது நாகப்பிள்ளை என்பவர் அடிகளார் பாடியிருந்து மகாதேவமாலை பற்றிக் குறிப்பிட, சுந்தர ஸ்வாமிகள் மனம் மகிழ்ந்து அந்த மகாதேவ மாலையிலிருந்து ஒரு பாடலை அடிகளார் தம் குரலில் பாடிக்கேட்க வேண்டுமென்ற ஆசையையும் தெரிவித்தார். அனைத்து அன்பர்களுக்கும் அதே ஆசை உள்ளூர இருக்கவே அனைவரும் ஆவலோடு வள்ளலாரைப் பார்த்தார்கள். தத்துவராயர் இயற்றிய பாடுதுறையில் பயிற்சி பெற்ற சுந்தரஸ்வாமிகளின் விருப்பத்திற்கு மறுப்புச் சொல்ல முடியாது என்ற வள்ளலார் மஹாதேவமாலையைப் பாடப் பாடத் தம் வாய் மணக்கும், மனம் இனிக்கும் கேட்கும் அனைவரின் உள்ளமும் குளிரும் என்ற வண்ணம் கூறிவிட்டு மகாதேவமாலையைப் பாட ஆரம்பித்தார்.

"பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடையெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவதேவே." என்று பாடி முடித்தார்.

பக்தியும், ஞானமும் நிறைந்திருந்த அந்த அருட்பாடல்களால் தம் மெய்ம்மறந்த சுந்தரஸ்வாமிகள், அடிகளாரைப் பிள்ளைப் பெருமான் என அழைத்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டார். அதைக கண்ட வள்ளலார் தாம் எவ்வளவு படித்திருக்கிறோமோ அவ்வளவு அநுபவத்தில் வந்த விசேஷம் என சுந்தரஸ்வாமிகளும் அடிகளார் கூறியதைப் பூரணமாய்ப் புரிந்து கொண்டார். இறை அருளாலேயே இன்று அடிகளாரின் தரிசனம் கிடைத்தது எனக் கூறிவிட்டு மேலும் சற்று நேரம் வேதாந்த விசாரங்கள் செய்துவிட்டுப் பின்னர் நடராஜ தரிசனம் காணவேண்டிப் பிரியாவிடை பெற்றுச் சென்றார்.

No comments:

Post a Comment