Monday, July 11, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

தன் தந்தை குருவாக ஏற்றுக்கொள்ளச் சொன்னவரைப் பற்றிய வர்ணனையைப் பிள்ளை அவர்கள் மேலும் விவரித்தார். முக்காடு போட்டவர் என்றதுமே அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார் முதலியார். பின்னர் மேலும் பிள்ளை அவர்கள் தொடர்ந்து தன் தந்தை அவ்வாறு சொல்லிவிட்டுப் போய் மூன்றாண்டுகளுக்கும் மேல் ஆகியும் அப்படி எந்த குருவும் வரவில்லை என்றும் தேவநாயகம் பிள்ளைக்கு அதனால் வியாகூலம் ஏற்பட்டதாயும் கூறினார். அப்போது முதலியார் அவரிடம், எனில் நீர் குருவைத் தேடி அலைந்திருப்பீர் என்று கூற அமைதியாகப் பிள்ளை அவர்கள், “அதுதான் இல்லை, சொன்னால் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அதிசயங்கள் நடப்பது உண்டுதான், ஆகவே சொல்லுங்கள் கேட்கலாம் என்று முதலியார் தூண்ட, பிள்ளை உற்சாகத்தோடு, “திடீரென ஒரு நாள் சுவாமிகள் கருங்குழியிலிருந்து இங்கு வந்தார். என் தந்தையின் வியோகஸ்தானத்தைப் பிரம்பால் தட்டிக் காட்டி, இதுதான் உம் தந்தையின் வியோகஸ்தானமா என்று கேட்டார். உடனே இவர் தான் என் குரு என்று எனக்குப் புரிந்துவிட்டது. அன்று முதல் அவரைக் குருவாய் ஏற்றுக்கொண்டேன். அவரின் அடிமையாகவே ஆகிவிட்டேன். “

சுந்தர முதலியாருக்கு வியப்பாய் இருந்த்து. பிள்ளையோ மேலும் சுவாமிகளின் சீடனாய் ஆன பின்னும் அவர் பெற்ற அதிசய அனுபவங்கள் பற்றிக் கூற ஆரம்பித்தார். தான் இரச வாதத்தில் பொருளை இழந்தது பற்றி நினைவு கூர்ந்த பிள்ளை அதை எவ்வாறோ சுவாமிகள் அறிந்து கொண்டதாயும், உடனே தனக்காகவே ஓர் இரும்புத் தகடைக் கொண்டு வந்து அதைப் பொன்னாக்கிக் காட்டியதாயும் கூறினார். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த தன்னிடம், சுவாமிகள் அறிவுரை கூறும் தொனியில், “இச்சை இல்லாதவர்களுக்கே இந்த இரசவாத வித்தை எல்லாம் கை கூடும். ஆகவே இனி இவ்வேலை வேண்டாம்.” என்று கூறிவிட்டு அந்தப் பொன் தகட்டையும் தூக்கி எறிந்துவிட்டதாய்க் கூறினார். மேலும் அன்றிலிருந்து தன் மனம் மாற்றம் அடைந்து இரசவாதத்தில் ஈடுபாடு போய்விட்டதாயும் கூறினார். அடுத்த நிகழ்வையும் கூற ஆரம்பித்தார் பிள்ளை அவர்கள்.
“ஒரு சமயம் சுவாமிகள் செஞ்சி மலையைச் சுற்றிப் பார்க்க்க் கிளம்புகையில் நானும் உடன் சென்றேன். சுவாமிகள் மலை மீது பல இடங்களிலும் சுற்றினார். ஆனால் எனக்குக் களைப்பாகிவிட்டது. பசி வேறு வாட்டி எடுத்தது. சுவாமிகள் அதைக் கண்டு என்னை ஓர் மரத்தடி நிழலில் அமர வைத்துவிட்டுச் சற்றுத் தூரம் சென்று பின் திரும்ப வந்தார். வரும்போது அவர் கையில் பெரிய லட்டு ஒன்றும் தண்ணீர்ச் செம்பும் இருந்தது. என்னிடம் அதைக் கொடுத்துச் சாப்பிட வைத்து நீரும் அருந்தக் கொடுத்தார். செம்பை வாங்கிக் கொண்டு கொடுத்துவிட்டு வருவதாய்ச் சொல்லிச் சிறிது தூரமே சென்றார். ஆனால் திரும்பி வருகையில் அவர் கையில் செம்பே இல்லை.”


தேவநாயகம் பிள்ளையின் பேச்சைக் கேட்ட சுந்தர முதலியார் வியப்பின் எல்லைக்கே போய்விட்டார். ஆஹா, எவ்வளவு அற்புதம்! எவ்வளவு ஆநந்தம்?? பிள்ளைவாள் கொடுத்து வைத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு அவரைப் பாராட்டினார். பின்னர் பிள்ளையோடு தானும் சுவாமிகளைத் தரிசிக்க வருவதாய்க் கூறவே பிள்ளைக்கு ஆச்சரியமும் ஆநந்தமும் சேர்ந்து வந்தது.

கருங்குழிக்கும் மேட்டுக்குப்பம் என்னும் ஊருக்கும் நடுவே ஓர் அற்புதமான தண்ணீர் ஓடை இருந்த்து. சிவராமன், குருமூர்த்தி என்னும் இரு நண்பர்கள் சுவாமிகளைத் தரிசிக்க வந்து அவர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து ஓடைக்கரையிலே மர நிழலிலே அமர்ந்து சுவாமிகளின் அற்புத சக்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது சுவாமிகளின் “கோடையிலே” என்று ஆரம்பிக்கும் பாடலை இருவரும் ஆசை தீரப் பாடினார்கள். சுவாமிகளைக் காண முடியவில்லையே என்று வருத்தமும் கொண்டார்கள்.
அவர்கள் பேச்சிலிருந்து சுவாமிகள் கூடலூருக்குப் போயிருந்ததாயும் மூன்று நாளைக்கும் மேல் ஆகியும் திரும்பவில்லை என்றும் தெரிந்த்து. கூடலூரில் பல அற்புதங்களை சுவாமிகள் நிகழ்த்தி வருவதாயும் அதைப் பற்றி கூடலூர் இராமசாமி செட்டியார் என்பவர் சொன்னதாயும் கூறிக்கொண்டார்கள். மஞ்சக்குப்பத்தில் வசித்த ஆசிரியர் ராமகிருஷ்ணனுக்கு வழித்துணையாக சுவாமிகள் சென்றதாயும், வீட்டை அடையும்போது சுவாமிகள் கண்ணில் படமாட்டார் என்றும், கூறினார். மேலும் தாசில்தார் ஒருவர் தன் ஊழியனைச் சரியாக நடத்தாததையும் கண்டித்து அந்த ஊழியன் சார்பாய்ப் பேசியதாயும், பசித்துக் களைத்திருக்கும் ஊழியனைச் சாப்பிட வைத்ததாயும் கூறினார். ஜீவகாருண்யமே சுவாமிகளின் உயிர் மூச்சாக இருப்பதையும் பேசிக்கொண்டார்கள். சுவாமிகளின் மனம், வாக்கு, மெய், அனைத்தும் ஜீவகாருண்யத்தைத் தவிர்த்து மற்றதை நினைப்பதில்லை என்றும் கூறிக்கொண்டார்கள். கண்களில் கண்ணீர் ததும்ப இருவரும் பேசிக்கொண்டார்கள். கூடலூரில் வணிகர் ஒருவரின் பணியாளுக்கு வளர்ந்திருந்த உள்நாக்கைத் திருநீறு கொடுத்துக் குணமாக்கியதையும், கண்ணோய்க்காரன் ஒருவனுக்கும் அவ்வாறே கண்களில் ரஸ்தாளி வாழைப்பழத்தை வைத்துக் கட்டச் சொல்லிக் குணமாக்கியதையும் பெருமையுடன் பேசிக்கொண்டனர். அப்போது ஓர் நாள் கூடலூரின் தென்பெண்ணை ஆற்றங்கரையில் திருவிழா நடை பெறும்போது சுவாமிகள் அங்கே தம் சீடர்களோடு சென்றிருந்தார். பிரம்மசமாஜத்தைச் சார்ந்த ஸ்ரீதர நாயக்கர் என்பவரும் தம் சீடர்களோடு அங்கே கூடி இருந்து அவரவர் கோட்பாடுகளைப் பற்றி சந்தேகம் கேட்பவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த அறிஞர்களின் ஒருவர் சுவாமிகளிடம் சந்தேகம் ஒன்று கேட்கவேண்டும் என்று தயங்கியவாறே கூற, சுவாமிகள் தமக்கும் ஸ்ரீதர நாயக்கருக்கும் இடையில் விவாதம் ஆரம்பித்து வைக்கவே இப்படிக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டு, “நல்லது ஆரம்பியுங்கள்” என்றார்.


உடனே அந்த அறிஞர் பிரம்ம சமாஜியான ஸ்ரீதர நாயக்கர் விக்ரஹ ஆராதனையை மறுத்தும் கண்டித்தும் பேசி வருகிறாரே என்று சுவாமிகளைக் கேட்க அது பிரம்ம சமாஜத்தின் கொள்கை என்று சுவாமிகள் மறுமொழி கூறினார் சந்தேகமே தமக்கு அதிலே தான் என்ற அந்தச் சீடர் விக்ரஹ ஆராதனை என்பதே இன்றி பிரம்மத்தை எப்படி வழிபடுவது, துதிப்பது என்று புரியவில்லையே என்றும் சுவாமிகளே அதைத் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் வேண்டினார்.

சுவாமிகளும்,” பிரம்மத்தை யார் எவ்விதம் அறிகின்றனரோ அவர்கள் அவ்விதமே அறிதலைத் தொடர்தல் வேண்டும். அருவமாக அறிகின்றவர்கள் அருவமாகவே அறிய வேண்டும். சிலருக்கு விக்ரஹ ரூபத்தில் அறிய முடிகிறது என்றால் அதற்கும் தடையில்லை. அவர்களும் விக்ரஹ ஆராதனைகள் மூலமே அதனைச் செய்தல் வேண்டும். ஆனால் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டுத் தெளிவடைந்த யோகிகளுக்கும், ஞாநிகளுக்கும் விக்ரஹ ஆராதனை என்பதே தேவையில்லை. “ என்று கூறினார். உடனே ஸ்ரீதர நாயக்கரை அனைவரும் பார்த்து இது குறித்து அவர் கருத்தைச் சொல்லும்படி தூண்ட, அவரோ விவாதம் வேண்டாம் என்று எண்ணுவதாயும் தனிப்பட்ட முறையில் கடிதம் போட்டு சுவாமிகளுக்குத் தெரிவிப்பதாயும் கூற, மற்றவர்களோ தொடர்ந்து பிடிவாதம் பிடித்தனர். மேலும் ஸ்ரீதர நாயக்கரின் கருத்தை வலுப்படுத்த விரும்பினால் அதற்கேற்றவாறு தக்க காட்சி, கருத்து, உரை ஆகிய மூன்று பிரமாணங்களையும் கூறவேண்டும் என்றும் இது தான் விவாதச் சபையின் பொது விதி என்றும் கூறி, விவாதத்தில் ஈடுபடுமாறு கூறினார்கள். சற்று நேரத்தில் அங்கே மிகப் பெரிய வாக்குவாதம் ஒன்று ஆரம்பிக்கும் அறிகுறி தென்படலாயிற்று. பிரம்ம சமாஜியின் சீடர்களுக்குக் கோபம் வர, ஸ்ரீதர நாயக்கர் செய்வதறியாது விவாதத்தில் பங்கேற்றாலொழிய இது முடியாது என்பதை உணர்ந்து விவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவர் ஆனார்.

No comments:

Post a Comment