Sunday, July 31, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சுவாமிகள் பேச ஆரம்பித்தார்:”விக்ரஹம் என்பதற்கு விசேஷமான இடம் என்றே பொருள். ஆன்மா இருப்பதற்கான கிரகம் மானிடம் முதலிய தேகங்கள் என்பதைப் போலவே பிரம்மப் பிரகாசம் வெளிப்படுவதற்குரிய தேவ தேகம் விக்ரஹம் ஆகும். ஆகவே இந்த விக்ரஹங்களில் முறைப்படியும், விதிப்படியும் உபாசனைகள் செய்யவேண்டும். இவ்வாறு செய்து வர வர பிரம்மப்பிரகாசம் வெளிப்பட்டு அனுகிரஹம் கிடைக்கும். மக்களின் மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறு அவரவர் புரிதலுக்கு ஏற்ப ஆலய வழிபாடுகள் தாராளமாய்ச் செய்யலாம். நாளடைவில் பிரம்மஞானம் தானே சித்திக்கும்.” என்று கூறி நிறுத்தினார் அடிகள்.


நண்பர்கள் மேலும் கூறும்படிக் கேட்க, அடிகளும் மேலும் கூறலானார். “இவ்விதம் வழிபாடுகள் செய்பவர்களுக்குச் சில அபூர்வமான சித்திகள் கிடைக்கும். சிலருக்குக் குன்மம் போன்ற வியாதிகளைத் தீர்த்து வைக்கும் சக்தியும் இன்னும் சிலர் மேலும் ஒருபடி போய் இறந்தவர்களைப் பிழைக்கவும் வைப்பார்கள். செயற்கரிய பல செயல்களைச் செய்வார்கள் சிலர். இப்போதும் சிலர் அவ்வாறு இருந்து வருகிறார்கள். ஆனால் பிரம்ம சமாஜிகளோ வேத சமாஜிகளோ அவ்விதம் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கான அடையாளம் இதுவல்ல.” என்றார்.



“ஸ்ரீதர அடிகள் கூறியவாறு பிரம்மத்தைத் தியானிப்பதற்கும் முதலில் ஏதாவது ஓர் உருவத்தைத் தியானித்துப் பழகிய பின்னரே பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ இயலும். மனத்தால் உருவமற்ற ஒன்றைப் பற்றுதல் முதலில் கடினமாகவே இருக்கும். உருவமாய் இருந்து அதைத் தியானித்து வர, வர உருவம் மெல்லக் கரைந்து அருவமாகும். இரண்டான துவைதம் எவ்வாறு ஒன்றான அத்வைதமாகிறதோ அதே தான் இங்கேயும். இப்போது புரிகிறதா?” என்று கேட்டார் சுவாமிகள். அனைவரும் மகிழ்ச்சியுடன்,”புரிகிறது சுவாமி!” என்றனர். விக்கிரக ஆராதனை என்பது ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்று அடிகள் தீர்மானமாய்ச் சொன்னார். அதன் மேல் அடிகள் அங்கிருந்து சென்று தாம் ஏகாந்தத்தில் இருக்கப்போவதாய்ச் சொல்ல சபையோர்கள் அனைவரும் சமணர்களை வாதில் வென்ற திருஞானசம்பந்தர் இவரோ என எண்ணி எண்ணி மயங்கினார்கள்.



அடிகள் கூடலூரில் இருந்து கருங்குழிக்கு மீண்டும் வந்துவிட்டார். சில நாட்கள் சென்றன. தினமும் தனியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதும், அருட்பாடல்களை இயற்றுவதும், உலாவுதலும், அன்பர்களோடு இறை அருளைப் பற்றி உரையாடுவதுமாயும், அவ்வப்போது அருகிலுள்ள சிதம்பரம் போன்ற தலங்களுக்குச் சென்று வருவதுமாய் அடிகளாரின் பொழுது இனிமையிலும் இனிமையாகக் கடந்து கொண்டிருந்த்து. ஒரு நாள் அவரைக் கவனித்துக்கொள்ளும் ரெட்டியாரின் மனைவி முத்தியாலு அவசர வேலையாக வெளியூரில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மறுநாள் காலை அடிகளுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்பதால் அதிகாலையிலேயே ஊருக்குத் திரும்பியும் விட்டார். வந்தவர் அடிகளாரின் அறையைப் பெருக்கிக் கூட்டி முடித்துச் சுத்தம் செய்யவேண்டி அறைக்குள் நுழைந்தவள் திகைத்துப் போனாள்.



அறையில் இரவு முழுதும் அகல்விளக்கு எரிந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் மண்கலயத்தில் எண்ணெயோ குறைவாய்த் தான் முத்தியாலு வைத்துவிட்டுப் போயிருந்தார். அந்தக் குறைவான எண்ணெய் எடுக்கப் படவே இல்லை. வேறொரு புத்தம்புது மண்கலயம் பழக்கப் படுத்துவதற்காக நீர் நிரப்பி வைத்திருந்தது. ஆனால் அதிலே தண்ணீரே இல்லை. சுத்தமாய்க் காலியாகி இருந்த்து. அகல் விளக்கிலும் எண்ணெய் விட்டு எரித்த அடையாளமே இல்லாமல் தண்ணீராக அல்லவோ இருக்கிறது? நீரில் விளக்கு இரவு முழுதும் எரிந்ததா? அது எப்படி முடியும்?? இது என்ன அதிசயம்? எனில் சுவாமிகள் இரவு தியானம் செய்யாமல் அருட்பாக்களும் எழுதாமல் இருந்துவிட்டாரா? தண்ணீரில் விளக்கு எரிந்திருக்கவே முடியாது. அடாஅடா, இரவு முழுதும் சுவாமிகள் இருட்டில் அன்றோ இருந்திருப்பார்.



யோசித்து யோசித்து மண்டை குழம்பியது முத்தியாலு அம்மாவுக்கு. அதற்குள்ளாக வெளியே சென்றிருந்த அடிகளும் திரும்பிவிட்டார். அவசரம் அவசரமாகச் சுவாமிகளின் முன்னே சென்று, “வாருங்கள் சுவாமி!” என்று வரவேற்றாள். சுவாமிகளும் அவரைப் பார்த்து,”என்ன ரெட்டியாரம்மா, ஊருக்குப் போய்விட்டு உடனே திரும்பிவிட்டாற்போல் இருக்கிறதே?” என்று விசாரித்தார். மேலும் ஊரில் சுற்றத்தாரின் நலம் குறித்தும் விசாரித்தார். முத்தியாலுவுக்கோ தன் சந்தேகம் தீர்த்துக்கொள்ளவேண்டிய அவசரம். ஆகவே, சுவாமிகளிடம், “எல்லாரும் நலமே சுவாமி. ஆனால் ஒரு சந்தேகம்…” என்று இழுத்தார். அடிகளும் என்ன சந்தேகம் என்று கேட்க, “சுவாமி! இரவு முழுதும் விளக்கு எரிந்த்தா? இருட்டில் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கேட்டாள். சுவாமிகளும் அவரை அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு, “ஏன் கேட்கிறீர்கள்? விடிய விடிய விளக்கும் எரிந்த்து. நானும் தியானம் செய்தேன். வழக்கம்போல் பாடல்களும் எழுதினேன். ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள் ? புரியவில்லையே?” என்று வினாவினார்.



சுவாமிகள் அருகிலிருந்து புதிய மண்கலயத்தைச் சுட்டிக்காட்டிக்கொண்டே ,”இதோ இந்தக் கலயத்தில் இருந்த எண்ணெயை ஊற்றித் தான் விளக்கை எரித்துக்கொண்டேன்.” என்றார். முத்தியாலு அம்மாவிற்கு விஷயம் புரிந்து விட்ட்து. வியப்புக்கு ஆளாகி மேனி சிலிர்க்க, மனம் உருக, “ இது எண்ணெய்க் கலயம் அல்ல சுவாமி. தண்ணீர்க் கலயம். புது கலயம் என்பதால் பழக்குவதற்காக நீர் ஊற்றி வைத்திருந்தேன். வாய் உடைந்த பழைய கலயத்தில் நான் வைத்துவிட்டுப் போன எண்ணெய் அப்படியே இருக்கிறது சுவாமி. இரண்டு கலயங்களும் அருகருகே இருந்தமையால் தாங்கள் தண்ணீர்க் கலயத்தில் இருந்து நீரை எடுத்து எண்ணெய் என நினைத்து வார்த்திருக்கிறீர்கள். விளக்கும் இரவு முழுதும் எரிந்திருக்கிறது. சுவாமி, சுவாமி, தங்கள் அருளால் அன்றோ இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது? தண்ணீர் விளக்கும் எரியும் அற்புதம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. சுவாமி தாங்கள் இங்கே தங்கவும் இத்தகைய அற்புதங்கள் எங்கள் இல்லத்தில் நடக்கவும் எத்தனை ஜென்மங்களில் நாங்கள் புண்ணியம் செய்தோமோ! இறைவன் திருவருள்தான் இவை எல்லாம்!” என்று கண்ணீர் மல்கக் கூறிக்கொண்டே அடிகளின் பாதங்களில் பணிந்து வணங்கினார்.



அதைக் கேட்டுக்கொண்டே வந்த ரெட்டியாரோ, “நமிநந்தி அடிகளுக்கு இறைவன் ஆணை கிடைத்து நீர் ஊற்றி விளக்கை எரித்தார். ஆனால் இங்கே அடிகளுக்கோ அவ்விதம் ஆணை எதுவும் இல்லை. எண்ணியும் செய்யவில்லை. தற்செயலாகத் தானாகவே நடந்திருக்கிறது. திருவருட்செயல் தான் இது. சுவாமிகளும் ஒரு ஏமச்சித்தர் தான்.” என்று வியந்து பாராட்டி வணங்கி மகிழ்ந்தார். அடிகளும் ரெட்டியாரிடம் இது இறைவன் திருவருள் தானே தவிர தன்னால் எதுவும் இல்லை எனவும், தன் சென்னை நண்பர்களுக்கு இது குறித்துத் தெரிவிக்க விரும்புவதாயும், தம்மைத் தனிமையில் விட்டுச் செல்லவேண்டும் எனவும் இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு பாடலை எழுதப் போவதாகவும் கூற அவ்வளவில் இருவரும் அங்கிருந்து சென்றனர்.

No comments:

Post a Comment