ரத்தின முதலியாரைத் தம் நிபந்தனையைத் தளர்த்திக்கொள்ளுமாறு அனைவரும் கேட்க அவரும் அவ்விதமே செய்வதாய் உறுதி அளித்தார். அவ்வளவில் அந்தச் சபை கலைந்தது. ஆனால் அனைவருக்கும் சுவாமிகளைப் பார்க்கும் ஆவல் மேலிட அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைக் காணவேண்டும் என முடிவெடுத்தார்கள். சென்னையிலிருந்து கிளம்பி வடலூர் வந்து சேர்ந்தார்கள். அங்கே சுவாமிகள் தியானம் முடித்து ஓய்வாக அமர்ந்திருக்கும் வேளையில் இவர்கள் போய்ச் சேரவும் சாட்சாத் அந்த மும்மூர்த்திகளே நேரில் வந்தவண்ணம் இருப்பதாய்க் கூறி வள்ளலார் ஆனந்தம் அடைந்தார். அனைவரையும் வரவேற்று அமர வைத்து, அனைவரின் நலமும், சென்னையின் மற்ற நண்பர்கள் நலமும் விசாரித்துத் தெரிந்து கொண்டார். பின்னர் சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டதும் வந்த காரியம் என்னவென்று வினவ, நேரில் பேசவேண்டியவை இருப்பதாய் வேலாயுத முதலியார் பணிவோடு கூறினார். சுவாமிகளுக்கு உடனே புரிந்து விட்ட்து. தன் பாடல்களைப் புத்தகமாய்ப் போடுவது பற்றித்தானே என வினவினார். சுவாமிகள் அவற்றை அச்சிட்டுக்கொள்வதற்குத் தாம் அநுமதி கொடுத்துவிட்ட்தாயும், இரத்தின முதலியார் ஒருவேளை உணவு உட்கொள்ளும் நிபந்தனையைப் போட்டு தம்மைச் சம்மதிக்க வைத்துவிட்டதையும் கூறிவிட்டு இதை விட இன்னும் வேறு ஏதேனும் உண்டோ என வினவினார்.
சுவாமிகள் பாடிய எல்லாப் பாடல்களையும் தாம் தொகுத்திருப்பதாய்க் கூறிய வேலாயுதமுதலியார், சுவாமிகளுக்கு இதில் இஷ்டமில்லை என்பது தெரிந்தும் உலக மக்களுக்கு சுவாமிகளின் கருத்துகள் பயனாகவேண்டும் என்பது கருதியே சுவாமிகளுக்குப் பிடிக்காத இவ்விவகாரத்தில் இறங்கியதாய்க் கூறி மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர். இதோடு 1851-லே வந்த கந்தகோட்டத்து முருகன் தெய்வமணிமாலைப் பாடலையும் சேர்த்துக்கொள்வதாயும் அநுமதி வாங்கிக்கொண்டனர். அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்த வள்ளலார், தன்னை சுவாமிகள் என அழைக்கவேண்டாம் என்று கடுமையாகக் கூறினார். அதனால் சற்றே பயந்த நண்பர்களிடம் வந்த வேலையை முழுதும் கூறவே இல்லை என்றும் அதைக் கூறும்படியும் வள்ளலார் கூற அவர்களும் கூற ஆரம்பித்தனர்.
வேலாயுத முதலியார் தாம் திருமுறைப்படுத்தி வைத்திருந்த சுவாமிகளின் பாடல் தொகுப்பை அவரிடம் கொடுத்துச் சரிபார்த்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டுப் பெரும்புலவர் ஆன வேலாயுதமுதலியார் அருமையாகத் திருமுறைப்படுத்தி இருப்பதாய்ப் பாராட்டினார். ஆனால் அதில் ஒரு சிறு மாற்றம் செய்யவேண்டி இருப்பதாயும் கூறினார். சமரச சன்மார்க்கப் பாடல்களை ஆறாம் திருமுறையாகத் தொகுத்திருப்பதைத் தற்சமயம் புத்தக வடிவில் கொண்டுவரவேண்டாம் என்றும் அப்பாடல்களில் உள்ள கருத்துகள் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ளவேண்டியவை ஆகும் எனவும் கூறிவிட்டு, பொதுமக்களிடையே தற்சமயம் உலவவிடவேண்டாம் எனவும் அதற்கான காலம் கனியவில்லை என்றும் கூறினார். பின்னர் அனைவரும் கூடிப் பேசிக்கொண்டு, சுவாமிகள் வெளிப்படுத்தும் காலம் வரும் வரை ஆறாம் திருமுறைப்பாடல்கள் வேலாயுத முதலியாரிடமே பத்திரமாய் இருக்கவேண்டும் என்றும் முதலில் நான்கு திருமுறைகளை வெளியிடலாம் எனவும் முடிவு செய்ய அதற்கு சுவாமிகளும் சம்மதித்தார்.
சிதம்பரத்தில் அப்போது கோடகநல்லூரில் இருந்து சுந்தரசுவாமிகள் என்பவர் தமது சீடர்களோடு வந்து கீழவீதியில் ஒரு சத்திரத்தில் தங்கி இருந்தார். ஒரு நாள் தம் சீடர்களோடு பேசிக்கொண்டிருந்த சுந்தர சுவாமிகளைப் பார்த்த சன்மார்க்கிகள் இருவர் சுந்தரசுவாமிகளை யார் எனத் தெரிந்து கொண்டு, இவரைத் தான் வள்ளலார் பார்த்துவரச் சொன்னதாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அங்கே நடப்பனவற்றைக் கவனித்தார்கள். சுந்தர சுவாமிகள் இயற்றிய சிவாநுபூதி ரஸாயனம், சிவாநுபூதி ரஸமஞ்சரி, நிஜாந்ந்த விலாசம் போன்ற நூல்களின் சிறப்பைப் பற்றி சைவ மடங்களிலெல்லாம் பாராட்டிப் பேசுவதாய் சுவாமிகளைக் காண வந்த அன்பர்கள் கூறிக்கொண்டிருந்தனர். நடராஜப் பெருமானின் அருளை எண்ணி அவருக்குத் தன் வணக்கங்களைச் சமர்ப்பிப்பதாய் சுந்தரசுவாமிகள் கூறிக்கொண்டிருந்தார். சூத சம்ஹிதை பற்றி விரிவாய் சுவாமிகள் செய்யும் பிரசங்கத்தால் மக்கள் மனதில் சிவ பக்தியும் சிவாநுபவமும் ஏற்பட்டு வருவதாயும் அனைவரும் பாராட்டிக்கொண்டிருந்தனர். அம்பலவாணன் ஆன நடராஜப் பெருமானின் திருவருளாலேயே இவ்விதம் நடப்பதாய் சுந்தரசுவாமிகளும் கூறினார். அப்போது சுவாமிகளின் பிரதம சீடர் ஆன சுந்தரம் பிள்ளை எழுதிக்கொண்டிருக்கும், “மநோன்மணீயம்” பற்றிய பேச்சும் வந்தது.
Sunday, July 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அன்பு சகோதரி கீதா சாம்பசிவம் ,
ReplyDeleteஅரவமறியாமல் தாங்கள் ஆற்றி வரும் பணிகளைக் கண்டு வியப்புற்றேன்
தாங்கள் நிறைக்குடம்
வாழ்க
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
அன்பு சகோதரி கீதா சாம்பசிவம் ,
ReplyDeleteஅரவமறியாமல் தாங்கள் ஆற்றி வரும் பணிகளைக் கண்டு வியப்புற்றேன்
தாங்கள் நிறைக்குடம்
வாழ்க
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்