Monday, July 11, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

கடலூர் நகரில் பங்குனி உத்திரக் கிண்ணித் தேர் உற்சவம் நடந்து கொண்டிருந்தது. அதை முன்னிட்டு தேரடிக்கு அருகில் உள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டுக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இராமலிங்கஸ்வாமிகளின் சித்துத் தன்மை பற்றி அனைவரும் வியந்து பேச துரைசாமி பிள்ளை தானும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர் என்று கூறினார். அப்பாசாமி செட்டியாரின் தமையனாருக்கு வந்திருந்த புற்று நோயை ஸ்வாமிகள் திருநீறு கொடுத்துக் குணப்படுத்தியதையும் பற்றி அனைவரும் வியந்து பேச, அப்போது அங்கே வந்த அப்பாசாமி செட்டியாரின் தமையனாரான ராமசாமி செட்டியார் ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும் என்று தம்பியிடம் கேட்க, அனைவரும் ஸ்வாமிகள் வந்திருப்பதை இதுகாறும் ஏன் சொல்லவில்லை என்று அப்பாசாமிச் செட்டியாரிடம் கேட்கின்றனர். ஸ்வாமிகளின் ஏகாந்தத்துக்கு இடஞ்சல் விளைவிக்கக் கூடாது என்ற எண்ணத்திலே சொல்லவில்லை என்று அப்பாசாமி செட்டியார் மறுமொழிகூறினார். அப்போது அங்கே எங்கிருந்தோ புதிய மனிதர் ஒருவர் வேகமாய் வந்தார். அவருடைய முகத்து ஒளி அனைவரையும் கவர்ந்தது. இதற்கு முன்னால் இவரைப் பார்த்ததே இல்லையே என அனைவரும் வியந்து பேசிக்கொண்டிருந்தனர். குழப்பம் மேலிட அனைவரும் பேசிக்கொண்டு வந்தவர் யாராயிருக்க முடியும்?? வீட்டுக்குள் போய் ஸ்வாமிகளைக் கேட்கலாமா வேண்டாமா என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.


இராமசாமி செட்டியார் உள்ளே போனவர் ஸ்வாமிகளின் ஏகாந்தத்தைக் கலைத்துப் பேசிக்கொண்டிருப்பாராகையால் நாமும் போய் என்னவென்று பார்க்கலாம் என்று கூற அனைவரும் உடன்பட்டு உள்ளே சென்றனர். அங்கே ராமலிங்க அடிகளின் எதிரே ஒரு பெரிய லட்டு மட்டும் இருந்தது. மனிதர் எவரையும் காணோம். அனைவரும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆவலை அடக்க முடியாமல் ஸ்வாமிகளிடமே எவரோ வந்திருந்தார்களே எனக் கேட்க, அடிகளும் ஒரு சித்தர் வந்துவிட்டுச் சென்றதாகவும், அவர் காசிக்குப் போகவேண்டும் என்பதால் உடனே சென்றுவிட்டதாயும் இந்நேரம் காசியில் இருப்பார் என்றும் கூறிவிட்டு அவர் கொடுத்தது தான் இந்த லட்டு என்றும் கூறினார். அனைவருக்கும் மீண்டும் இந்தச் செய்தி ஆச்சரியத்தையே கொடுத்தது. அற்புதமான நிகழ்வு என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, அடிகள் அனைவரையும் பார்த்துச் சிரித்து, விண்ணில் செல்லும் வல்லமை பெற்ற சித்தர் ஒருவர் வந்து தன்னைக் கண்டு சென்றதாகவும், இது ஆண்டவன் திருவிளையாடல்களில் ஒன்றெனவும், லட்டைத் தான் சிறிது எடுத்துக்கொண்டு அனைவருக்கும் தருவதாயும் கூறிவிட்டுத் தான் சிறிதளவு எடுத்துக்கொண்டு மீதியை அப்பாசாமி செட்டியாரிடம் கொடுத்தார்.


லட்டை உண்ட அனைவரும் அதன் சுவையில் மயங்கினார்கள். சித்தர் ஒருவரே நம் அடிகளை நேரில் வந்து பார்த்துவிட்டுப் பிரசாதமும் கொடுத்துச் சென்றாரெனில் அடிகள் சித்தர்களுக்கெல்லாம் தலைமைச்சித்தர் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அங்கே இருக்கையிலேயே ஒரு நாள் அடிகளைக் காணவந்தவர்கள் செட்டியார் வீட்டு வாழைத்தோட்டத்துக்கு தற்செயலாய் வந்தனர். கூடவே அடிகளும் வந்தார். தோட்டத்தைப் பார்த்துவிட்டு வாழைமரங்களில் கண்ணாடி இலைகள் விட்டிருப்பதையும் பூவிடும் நேரம் வந்துவிட்டதாயும் ஒருவருக்கொருவர் சிலாகித்துப் பேசிக்கொண்டனர். தோட்டம் நன்றாய்ப் பராமரிக்கப் பட்டிருந்ததைப் பற்றி அனைவரும் பேசிக்கொள்ள அடிகள் குறிப்பிட்ட ஒரு வாழைமரத்தடிக்கு வந்ததும் நின்றார். அங்கே இருந்த ஒரு நல்லபாம்பு சீறியது. அடிகளை அது தீண்டிவிடப் போகிறதெனப் பயந்த செட்டியார் அடிகளைத் தூரப் போகச் சொல்ல பாம்போ சத்தம் கேட்டதும் பயத்தில் அடிகளைத் தீண்டியது. செட்டியார் பதறிவிட்டார். அனைவரையும் கூக்குரலிட்டு அழைத்தார். அடிகளைப் பாம்பு தீண்டியதையும் தலையில் ரத்தம் வருவதையும் சொல்லி உடனே வைத்தியரையும் அழைக்கச் சொன்னார்.


ஆனால் அடிகளோ அமைதியாகவே இருந்தார். அவர் செட்டியாரிடம் புன்முறுவலோடு வைத்தியரை அழைக்கவேண்டாம் எனவும், தன்னிடம் இருக்கும் திருநீற்றைவிடச் சிறந்த மருந்து வேறெதுவுமில்லை என்றும் கூறிவிட்டு இடுப்பிலிருந்து விபூதிப்பையில் இருந்த விபூதியை எடுத்துத் தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் தடவிக்கொண்டார். அதற்குள் ஓடி வந்த மற்றவர்கள் இன்னும் கோபம் அடங்காமல் படம் எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பாம்பை அடிக்கப் போனார்கள். அப்போது அடிகள் அவர்களைத் தடுத்து, அந்தப் பாம்பு தான் சாகவே தன்னைத் தீண்டியதாய்க் கூறி பாம்பை அடிக்கவேண்டாம் எனத் தடுத்தார். அனைவருக்கும் குழப்பம் மீதூற அந்தப் பாம்போ இறந்து போய் வாழைமரத்திலிருந்து கீழே விழுந்தது. மீண்டும் அனைவரும் திகைக்க ராமலிங்க அடிகள் நான் சொன்னது சத்தியம் எனப் புரிந்ததா எனக் கேட்டார். தங்கள் அறியாமையை மன்னிக்கும்படி அனைவரும் வேண்ட, காலம் வரும்போது அனைவருக்கும் ஞாநம் பிறக்கும் என்றும் அறியாமைக்காக வருந்தவேண்டாம் எனவும் பாம்பை எரிக்காமல் புதைக்குமாறும் சொல்லிச் சென்றார். அனைவரும் இவர் அந்த நஞ்சுண்டகண்டனின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார் எனத் தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.


கடலூரில் இருந்த தேவநாயகம் பிள்ளை அவர்கள் அப்பாசாமிச் செட்டியார் வீட்டில் இருந்த அடிகளைக் காணக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் பிள்ளையவர்களைக் காண அங்கே சுந்தரமுதலியார் என்பவர் வந்தார். தாம் வந்ததால் பிள்ளைஅவர்களின் பயணம் தடைப்பட்டுவிட்டதோ என அவர் வருந்த, பிள்ளை முதலியாரைச் சமாதானம் செய்துவிட்டு வந்த காரணத்தை வினவினார். முதலியார் தாம் ஒரு அலுவலாகத் தாசில்தாரைக் காண வந்ததாகவும் பிள்ளை அவர்களைக் கண்டு பல நாட்கள் ஆகிவிட்டதால் காண வந்ததாகவும் கூறினார். மேலும் கருங்குழி அடிகளிடம் பித்துக்கொண்டு அவரோடு சுற்றிக்கொண்டு இருப்பதைக் கேள்விப் பட்டு அதை விசாரிக்க வந்ததாகவும் கூறினார். பிள்ளைஅவர்கள் ஏற்கெனவே ரசவாதத்தில் அதிகப் பணத்தையும், பொருளையும் இழந்ததையும் நினைவூட்டினார்.


தேவநாயகம் பிள்ளைக்குக் கோபம் வந்தது. பலரும் தம்மைத் தவறாய்ப் புரிந்து கொண்டிருப்பதை ஏற்கெனவே அறிந்த அவருக்கு இப்போது சுந்தர முதலியாருக்குப் பதில் கூறுவதன் மூலம் அந்த எண்ணத்தைப் போக்க நினைத்தார். ஆகவே தம் தந்தையார் இறக்கும் தருவாயில் தம்மிடம், தலையில் முக்காடு போட்டுக்கொண்டும், கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டும் துறவி ஒருவர் வந்து உன்னிடம் இதுதானா உன் தந்தையின் வியோகஸ்தானம் என இந்த இடத்தைச் சுட்டிக் கேட்பார். அவர்தான் உனக்கு குரு. அவரைக் குருவாக ஏற்றுக்கொள் எனக் கூறியதாகச் சொன்னார். மேலும்………..

No comments:

Post a Comment